என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முந்திரி பருப்பில் நெளிந்த புழுக்கள் - பேக்கரி உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்புத்துறை
    X

    முந்திரி பருப்பில் நெளிந்த புழுக்கள் - பேக்கரி உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்புத்துறை

    • உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் முந்திரி பழங்கள் உட்பட ரூ.2 ஆயிரத்து 198-க்கு பொருட்களை வாங்கி உள்ளார்.

    அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பார்த்தபோது, வாங்கிய முந்திரி பருப்பில் புழுக்கள் நெளிந்துள்ளது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது முந்திரி பருப்பு மற்றும் அத்திப்பழங்களும் கெட்டுப்போன நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, உணவு பொருட்களின் தரத்தில் கடும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக அந்த கடை செயல்பட அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்து மூடினர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் தற்காலிகமாக அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும். அதன்பின்னரே கடையை திறக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அந்த கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த முந்திரி பருப்பில் வெள்ளை நிற புழுக்கள் நெளிவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×