என் மலர்
ஆசிரியர் தேர்வு
- கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கியது.
கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது.
இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
- டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரெயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மணி’ சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
நேபாளத்தில், காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருக்கும் பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு (2026) மார்ச் 5 நேபாளத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கையை கையெழுத்திட்டனர்.
தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான ஏழு அம்ச உடன்படிக்கையின் படி, 35 வயதான பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி, பாலேன் மற்றும் அவரின் குழு, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய 'மணி' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
பாலேன் என அழைக்கப்படும் பலேந்திர ஷா, அந்த நாட்டின் முன்னாள் ராப் பாடகர் ஆவர்.
- தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்தது.
- பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
விஜயவாடா:
87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சூர்யா கரிஷ்மா தமிரி 17-21, 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன்.
- உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது.
விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு சிவகாசியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மாவட்ட மாரி செல்வராஜ் நற்பணி இயக்கம் மாவட்ட தலைவர் மான்ராஜன் வரவேற்றார். விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியுமா என்ற தயக்கம் என்னிடம் இருக்கிறது. நான் அரசியலில் இல்லை. எதற்காகவும் சமரசம் ஆக மாட்டேன். நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்று கூறிவிட்டு தான் எனது முதல் படத்தை எடுக்க தொடங்கினேன். வரும் காலங்களில் நான் அரசியல் இயக்கம் தொடங்கினால் அந்த இயக்கம் சாதிக்கு எதிராகத்தான் இருக்கும் என்றார்.
- டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஸ்மிருதி மந்தனா 48 பந்தில் 80 ரன்னும், ஷபாலி வர்மா 46 பந்தில் 79 ரன்னும் குவித்தனர். ரிச்சா கோஷ்16 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 52 ரன்னும், ஹாசினி பெராரா 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.
- தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய்.
- ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார்.
ஆறாவது கட்டமாக இன்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்திருக்கும் இஜ்திமா திடலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இபிஎஸ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக-வை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னார், அந்த திமுகவை அகற்றவே அதிமுகவை தோற்றுவித்தார். அந்த லட்சியத்தைக் கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களின் லட்சியமும் திமுகவை அகற்றுவதுதான்.
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள்தான் நிறைவேற்றப்பட்டதாம்.
ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில்தான் உதயமானது. காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத்தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அதிமுக ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்டம் தொடங்கி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். செங்கல்பட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினோம். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டம் கொடுத்தோம்.
தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய். இன்று மத்திய அரசு அதிமுக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் கொடுக்காத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 125 நாள் என்பது 150 நாளாக உயர்த்தியும், சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும், தடையில்லாமல் வேலை வழங்கப்படும். இதுதான் அதிமுகவின் லட்சியம்.
100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார், திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார்.
125 நாளாக உயர்த்தியதை 150 நாளாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி அமைந்ததும். ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- காசி தமிழ் சங்கமத்தின்போது, காசி மக்களிடையே தமிழ் பிரபலமடைந்து வருவது தெளிவாகக் காணப்பட்டது.
- பிஜியில் தமிழ் பிரபலம் அடைவதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 129-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசினார்.
அப்போது "காசி தமிழ் சங்கமத்தின்போது, காசி மக்களிடையே தமிழ் பிரபலமடைந்து வருவது தெளிவாகக் காணப்பட்டது. இது மனநிறைவைத் தருகிறது.
நாம் வலுவான கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடான ஃபிஜியில் தமிழ் பிரபலம் அடைவதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம்.
- இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்ட மசோதாவை பாஜக அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் 5-ந்தேதி நாடு தழுவிய மக்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டரக்ள் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 140-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் அல்ல, வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள்தான் உண்மையான தலைவர்கள். நமது காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிறந்தவர்கள்.
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா?. நான் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கொண்டு வெளியிடப் போகிறேன். 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். 70 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன. பெங்களூருவில் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்டிடங்களைக் கட்டப் போகிறோம். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
- எதை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.
- ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன்
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பாரட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது.
தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ரோபோக்கள் தன்னிச்சையாக பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும்
- ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
வியட்நாம் உடனான எல்லை ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷென்செனை தளமாகக் கொண்ட UBTECH ரோபாட்டிக்ஸ் கார்ப்பரேஷன், வியட்நாமுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியான குவாங்சியில் உள்ள ஃபாங்செங்காங் எல்லைக் கடவையில் அதன் வாக்கர் S2 மனித உருவ ரோபோக்களை நிலைநிறுத்த $37 மில்லியன் ஒப்பந்தத்தை அரசிடமிருந்து பெற்றுள்ளது.
வாக்கர் S2 என்பது கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதியுடன் இணைந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ ஆகும். இந்த ரோபோ மனித நடமாட்டம் அதாவது மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியமர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தாங்களே பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் என்றும், 125° கோணத்தில் வளையும், 15 கிலோ எடையை கையாளும் திறனும் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
ஃபாங்செங்காங்கில், பயணிகள் வரிசைகளை வழிநடத்துதல், வாகனங்களை இயக்குதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் எல்லை அதிகாரிகளுக்கு ரோபோக்கள் உதவும். சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து செல்லும்.
மற்ற ரோபோக்கள் சரக்கு பாதைகளுக்குள் செயல்படும். கொள்கலன் அடையாள எண்களைச் சரிபார்த்தல், முத்திரைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலை புதுப்பிப்புகளை அனுப்புதல் (Status Updates) மூலம் தளவாடக் குழுக்களை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார்.
- 24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளதேச தேசிய கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமானவர் கலீதா ஜியா. 2006-ம் ஆண்டில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கலீதா ஜியா, அவருடைய மூத்த மகன் தாரிக் ரகுமான் (வயது 60) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டநிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தவாறே வங்காளதேச தேசிய கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த பொதுதேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
அவர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவத்தின் ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.
கலீதா ஜியாவின் உடல்நலத்தை காரணம் காட்டி தற்போதைய அரசு சிறையில் இருந்து அவரை விடுவித்தது. வரும் ஆண்டு (2026) பிப்ரவரி 12-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதமர் தேர்ந்தேடுக்கப்படுவார் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
இந்த பொதுத்தேர்தலில் வங்காளதேச தேசிய கட்சி சார்பாக தாரிக் ரகுமான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது.
இந்தநிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார். மனைவி மற்றும் மகளுடன் டாக்கா விமானநிலையத்திற்கு தனிவிமானம் மூலமாக வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
17 ஆண்டுகளுக்கு பிறகு அவர், மகள் சைமா ரகுமானுடன் வங்காளதேசத்தின் வாக்காளர் அட்டை பெறுவதற்காக நேற்று பதிவு செய்து கொண்டார்.
24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாரிக் ரகுமான் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு சட்ட ரீதியான எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
2009 தேர்தலில் தாரிக் ரகுமானின் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கேலிகூத்தாக உள்ளதாக அவாமி லீக் குற்றம்சாட்டி உள்ளது.






