என் மலர்
நீங்கள் தேடியது "வேளச்சேரி"
- 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
- இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.
- 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.
- நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல்.
கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேம்பாலம் அருகே தொடங்கி சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி வழியாக கிண்டி ஹால்டா அருகே அண்ணா சாலையில் இணைகிறது. இந்த சாலை 16.3 கிலோமீட்டர் நீளம் உடையது. மேலும் இந்த சாலை தாம்பரத்தில் இருந்து கிண்டி வரையில், ஜி.எஸ்.டி. சாலைக்கு மாற்று சாலை ஆகவும் விளங்குகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள், தாம்பரம்- வேளச்சேரி சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
மேலும் தாம்பரம்- வேளச்சேரி சாலையில், புகழ்பெற்ற தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலையின் இரு பகுதிகளிலும் புதிய புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் பெருமளவு உருவாகி வருகிறது.
வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பெருமளவு உள்ளதால் இந்த சாலை 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.
இந்த நிலையில் தாம்பரம்-வேளச்சேரி சாலை 1990-ம் ஆண்டு வரை, ஒரு வழி சாலையாக இருந்தது. இதன்பின்னர் 1992-ம் ஆண்டில், இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை இரு வழி சாலையாக விரிவுபடுத்தியது. தொடர்ந்து 4 வழிச் சாலை ஆகவும் சில ஆண்டுகளில் மாற்றப்பட்டது.
ஆனால் இந்த சாலை நான்கு வழி சாலையாக விரிவு படுத்தப்பட்ட போது, கிழக்கு தாம்பரம் தொடங்கி கிண்டி ஹால்டா வரையில் ஒரே சீராக, சாலை விரிவுபடுத்தப்படவில்லை.

சாலை அகலப்படுத்துவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், சேலையூர், கேம்ப் ரோடு, ஆதிநகர் உள்ளிட்ட பல இடங்களில், சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால் காலை மாலை நேரங்களிலும், பருவமழை நேரத்திலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மின்கம்பங்கள், அகற்றப்பட்டு தள்ளி நடப்படாததால் பல இடங்களில் சாலை ஓரத்தில் மிக அருகிலேயே மின்கம்பங்கள் உள்ளன. குறிப்பாக சேலையூர் முதல் காமராஜபுரம் வரையில் இதை போல் மின்கம்பங்கள் காட்சி அளிக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறையினர் மின்கம்பத்தை அகற்றாமலேயே அதனை சுற்றிலும் சாலைகள் அமைப்பதற்கு ஜல்லிகளை கொட்டி வைத்துள்ளனர். மின் கம்பங்கள் அகற்றப்பட்ட பின்பு, சாலை போடும் பணிகள் நடைபெறும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட பின்பு அங்கிருந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த பஸ்கள் அனைத்தும் தாம்பரம்- வேளச்சேரி சாலையை பயன்படுத்துவதால் போக்குவரது நெரிசலில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தாம்பரம்- வேளச்சேரி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்து அற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு, தேவையான நிலங்கள் முழுமையாக இன்னும் வருவாய்த் துறையினர் கையகப்படுத்தி கொடுக்கவில்லை.
இதனால் நெடுஞ்சாலை த்துறையினர், தற்போது 6 வழி சாலையாக மாற்றுவதற்கு இடவசதி உள்ள இடங்களில் மட்டும் சாலைகளை பகுதி, பகுதியாக விரிவு படுத்தி உள்ளனர்.
மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் வரையில் சாலையை முற்றிலும் விரிவுபடுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.
எனவே தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, `மின் கம்பங்களை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து, வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு, ஆகும் செலவுகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறை, மின்வாரியத்திற்கு முன்னதாகவே செலுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி தற்போது உள்ள மின்கம்பங்களை எடுத்து, சாலை விரிவு படுத்துவதற்கு வசதியாக ஓரத்தில் நடுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால் அந்த சாலையோர நிலங்கள், தனியாருக்கு சொந்தமானவை ஆகும். அவற்றை முறைப்படி வருவாய் துறையினர் கையகப்படுத்தி நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கவில்லை.
இதனால் நாங்கள் மின்கம்பங்களை தனியார் நிலத்தில் கொண்டு போய் நடுவதற்கு முடியாது. எனவே சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக முதலில் அந்த இடங்களில் நிலங்களை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை இடம் ஒப்படைத்தால் தான், அதை செய்ய முடியும் என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, `கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலையை விரிவு படுத்துவதற்கு வசதியாக, நிலங்களை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தாமதம் ஆனது.
இப்போது நில உரிமையாளர்களிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் வருவாய்த்துறை நிலங்களை கையகப்படுத்தி, ஒப்படைக்க உள்ளனர். சாலையை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றனர்.
- மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கல்.
- முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி:
வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய பையுடன் வந்தார்.
அவரிடம் சோதனை செய்தபோது பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா (38) என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகை யிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தம்.
- வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவைகள் நாளை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 4வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.
- கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.
- கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
அதன்படி கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.
இதையடுத்து பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரெயில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் நிற்காததால் அங்கு காத்திருந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது தொடர்பாக ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூறுகையில்,
பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என்ற தகவலை முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும்.
வழக்கம்போல ரெயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. மீண்டும் ஆட்டோ பிடித்து சிந்தாதிரிப்பேட்டை வந்தோம். இதுபோன்ற தகவல்களை 2 நாட்களுக்கு முன்பே சொல்ல வேண்டும். ரெயில்வே துறை சரியான தகவலை கூறவில்லை என்று கூறினார்.
கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி - கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், இரு சக்கர வாகனம், ஆட்டோ, ட்ரை சைக்கிள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரி:
பம்மல், செல்வ விநாயகர் கோவில் தெரு, சங்கர் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் விஷ்ணு பாண்டியன். இவரது மகன் கோகுல் (வயது 24). கந்தன் சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு (24) என்பவரும் என்ஜினீயராக பணியாற்றினார். இவர் மேற்கு மாம்பலம் கிருஷ்ணன் குட்டி தெருவில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு நண்பர்களான கோகுலும், விஷ்ணுவும் ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், 6-வது தெருவில் வசித்து வரும் மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே மேலும் சில நண்பர்கள் வந்து இருந்தனர். அங்கு மது விருந்து நடந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மேலும் மதுபாட்டில் வாங்குவதற்காக பள்ளிக்கரணை 200 அடி சாலையில் உள்ள மதுபாருக்கு உயர்ரக கே.டி.எம். மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
மதுபாட்டில் வாங்கி கொண்டு திரும்பி செல்லும் போது வேளச்சேரி பிரதான சாலையில் ஆதிபுரீருஸ்வரர் சிவன் கோவில் எதிரே வந்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் நண்பர்கள் கோகுலும், விஷ்ணுவும் மோட்டார் சைக்கிளோடு பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கோகுலின் தலை அதிவேகமாக தடுப்பு சுவரில் மோதியதில் தலை துண்டாகி பலியானார். இதேபோல் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுவும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான 2 என்ஜினீயர்களும் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது
- பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2025, மார்ச் முதல் இந்த தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்தின் செலவு தற்போது ரூ.734 கோடியாக உயர்ந்துள்ளது. பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.
இந்நிலையத்தில் விரிவாக்க திட்டம் நிலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக இடையில் முடங்கியது. நீதிமன்ற தலையீட்டின்பின் 2022 இல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் இணைப்பு பணிகள் முடிந்து ரெயில் பாதை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் மார்ச் 2025 மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சேவை தொடங்கும்பட்சத்தில் சென்னையில் சுமார் 5 லட்சம் மக்கள் பயனடைவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.
- மூன்று ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்பட இருக்கிறது.
- வேளச்சேரியில் இருந்து புறப்படும் ரெயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி வருகிற 25-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் பத்திரமாக திரும்பி செல்லும் வகையில் சென்னை கடற்கரை- வேளச்சேரி, வேளச்சேரி- சென்னை கடற்கரை EMU ரெயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படுகிறது.
41086 என்ற ரெயில் வேளச்சேரியில் இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் நிலையத்திற்கு 10.27 நிமிடத்திற்கு வந்தடையும். 10 நிமிடங்கள் சேப்பாக்கம் நிலையத்தில் ரெயில் நிற்கும். பின்னர் 10.37 மணிக்கு புறப்பட்டு செல்லும் 10.52 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.
41083 என்ற ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். அதற்குப் பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இரவு 22.10 மணிக்கு வந்தடையும். வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
41085 என் ரெயில் வழக்கமாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும். தற்போது இரவு 10.30 மணிக்கு புறப்படும். சென்னை சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு 22.40 மணிக்கு வந்தடையும். இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.






