என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது.
- சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த விற்பனை சூடு பிடித்தது. ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளனர். இன்று முதல் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
அதுபோல தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இன்று இனிப்பு கடைகளில் பார்சல், பார்சலாக இனிப்புகள் விற்பனையானது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இனிப்பு கடைகளில் இருந்து சென்னைக்கு லாரி, லாரியாக இனிப்புகள் கொண்டு வரப்பட்டன. அந்த இனிப்புகளும் இன்று ஒரே நாளில் விற்று தீர்ந்தன.
தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனையும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக தீபாவளி உற்சாகம் இன்றே மக்கள் மனதில் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், தனியார் வாகனங்கள், சொந்த வாகனங்களில் சென்று இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதே போன்று தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் இன்று சாலை பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் இன்று வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர்களை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக வந்து புதிய துணிகளை ஆர்வமுடன் வாங்கினார்கள். இதனால் ஜவுளி கடைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது. இதனால் அந்த பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாடி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இன்று காலை அலைமோதியது. சென்னை புறநகர் பகுதி மக்கள் மற்ற இடங்களுக்கு ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க படையெடுத்ததால் இன்று இறுதிக்கட்ட விற்பனை அமோகமாக நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அலைஅலையாக சென்னைக்குள் திரண்டு வந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
பக்கத்து மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்னைக்கு வந்து இருந்தனர். அவர்கள் ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள், பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இதனால் புறநகர் செல்லும் ரெயில்கள், பஸ்கள் நிரம்பி வழிந்தன.
இன்று பிற்பகல் 4 மணிக்கு பிறகு சென்னை நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கடல் அலைபோல் திரளக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முக்கிய பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் இன்று மதியம் முதல் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மின்சார ரெயில்கள் நிரம்பி வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் போக்குவரத்து போலீசார் இரவு-பகலாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை பட்டாசு மற்றும் இனிப்பு விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது.
- போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.
விக்கிரவாண்டி:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் முதல் செல்ல தொடங்கினர்.
இதனால் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4 மணி முதல் வாகனங்கள் அணிவகுத்து செல்ல தொடங்கியது.
விக்கிரவாண்டி சுங்க சாவடியில் 6 வழிகள் உள்ளது. தற்போது வாகனங்கள் அதிகம் வருவதை தொடர்ந்து சென்னை திருச்சி வழியில் மேலும் 2 வழிகள் திறக்கப்பட்டு 8 வழிகள் வாயிலாக வாகனங்கள் செல்கிறது.
நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது. இன்று காலை சற்று போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றது.
சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதையொட்டி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.
தேவையற்ற மற்ற இடங்களில் சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து விபத்து ஏற்படாத வகையில் பேரிகார்டு வைத்து அடைத்து சாலையில் பாதுகாப்பை ஏற்படுத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆங்காங்கே மேம்பால பணிகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் கனரக வாகனங்களை கும்பகோணம் சாலை வழியாக பண்ருட்டி, மடப்பட்டு வழியாக திருச்சி செல்ல மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இன்று சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக சுங்கசாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
- கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இடைப்பட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வறண்ட நிலையும் காணப்பட்டதால் சோர்வடைந்திருந்த சிறு குறு வியாபாரிகள் தற்பொழுது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதற்கொண்டே வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இவர்கள் மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறைவான எண்ணிக்கையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதில் முழு கவனம் செலுத்தினர். தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவதை விட நிரந்தரமான எண்ணிக்கையில் காவல் துறையினர் போக்குவரத்துக் காவலர்களை அதிகமாக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கும்பக்கரை அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரங்களில் ஒன்று.
குறிப்பாக பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உதவியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நாடியுள்ளார்.
இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியே சில குறிப்பிட்ட வாகன இயக்கத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக என்பதை ஆராய விரும்புகிறேன்.
ஒருவேளை அப்பாதையில் வாகனங்கள் பயணித்தால் பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
- தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
- இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது.
தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், குருகிராமில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தபோது தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் சலித்துக்கொண்டனர்.
இந்த சூழலில், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கி காத்திருந்த இளைஞர் ஒருவர் சோர்வடைந்து தனது பைக்கை தலையில் சுமந்து சென்றார்.
அவருடன் மற்றொரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒத்தாசையாக நடந்து சென்றார். அவர் பைக்கை சுமந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
- திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
- திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.
திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை விடுமுறையை ஒட்டி திம்பம் மலைப்பகுதி சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், கரும்பு ஏற்றி சென்ற லாரிகள் என ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் திம்பம் மலைப்பகுதியில் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனம் வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் இருப்பதால் மேற்கொண்டு நகராமல் வாகனங்கள் அனைத்தும் வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக தமிழகம் -கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
- பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
குறிப்பாக வார விடுமுறை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது சுதந்திர தின விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் படகு குழாம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் மற்றும் காட்சி முனைகளில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் மலைப்பாதை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஏற்காடு ரவுண்டானா மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.
- "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-தேவாஸ் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட 40 மணி நேர போக்குவரத்து நெரிசலால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.
இந்த நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தேவாஸ் வழக்கறிஞர் ஆனந்த் அதிகாரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழக்கறிஞர், "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் இந்த கருத்தை கடுமையாக கண்டித்தது. கடந்த செப்டம்பரிலேயே மாற்றுச் சாலையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டும், அது இன்னும் நிறைவடையவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக NHAI, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுங்கச்சாவடி நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 7 அன்று நடைபெற உள்ளது.
- குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்
- சுரங்க பாதை பணிகளை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.
அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் சாலையை கடப்பதால் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் சில ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கமாக திரும்புவதால் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சாலையில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.அப்போது ஓரளவு வாகனங்கள் சீராக சென்றன.
ஆனால் என்ன காரணத்திற்காகவோ சாலை நடுவில் இருந்து தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையில் அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறுக்கே கடந்து செல்கின்றனர். பல வாகனங்கள் சாலை நடுவில் திரும்புகின்றன.
தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாகவும் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆற்காடு சாலையில் நெரிசலை தவிர்க்க சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி தெரிவித்தனர். ஆனால் அதற்கான வேலை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.
மழை பெய்யும் நேரங்களில் ஆற்காடு சாலையை கடப்பது என்பது கடினமாகிவிட்டது.
இந்த சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை மீண்டும் நடுவில் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக சென்று வர சுரங்க பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
- தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
பல்லடம் :
பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
- பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்,
வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சத்துவாச்சாரி சர்க்கிள் சாலை பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் வேறு வழி பாதையில் அனுப்புகின்றனர்.
இதனால் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






