search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    • காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.
    • காங்கிரஸ் அரசுக்கு எதிரான சதியின் ஒரு பகுதிதான் முடா மோசடி குற்றச்சாட்டு.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம் சித்தராமையா முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜக-வினர் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் முடா ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான பாஜக சதியின் ஒரு பகுதி என துணை முதல்வர் சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெறும் என பாஜக ஒருபோதும் நினைக்கவில்லை. ஆகவே, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், முடிந்தவரை பேரணிகளை நடத்தட்டும். அவர்களுடைய பிரசாரத்திற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுவோம்.

    இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    முடா (MUDA) முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனை அமைப்பதற்காக 3.16 ஏக்கருக்கும் அதிகமாக 14 இடங்களை ஒதுக்கியதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.

    எந்த தவறும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கும் சித்தராமையா, இந்த நிலங்கள் 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஒதுக்கப்பட்டது. என்னுடைய மனைவி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டுமனை ஒதுக்க ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

    மேலும், முடா தனது மனைவியின் சொத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வர் கூறி வந்தார். இதுகுறித்து முடா அதிகாரிகளின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றபோது, அவர்கள் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு பதிலாக மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்தனர் என்றார்.

    இது தொடர்பாக சிவக்குமார் கூறுகையில் "நிலத்தை இழந்த பலர் மாற்று இடங்களை பெற்றுள்ளனர். மற்றவர்கள் மாற்று தளங்களைப் பெற்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார். நானும் தகவல் சேகரித்து வருகிறேன். இது தொடர்பாக முதல்வர் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு மாற்று நிலத்தை முடா வழங்கியது" என்றார்.

    • சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததாக பாஜக புகார்.
    • சட்டசபையில் இரவு பகலாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தலையணைகள் மற்றும் போர்வைகளை எடுத்துச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு அவையிலே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று மூடா ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

    • நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • ஜூலை 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    இத்தனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், "தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது, மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி, இமலாசப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.

    மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

    • நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார்.
    • மோடியால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை பார்க்க முடியவில்லை.

    மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடகாவின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    மேகதாது, மகதாயிக்கு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நமது விவசாயிகளின் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி இன்னும் நமக்கு கனவாகவே உள்ளது.

    நரேந்திர மோடியின் பார்வை பிரதமர் பதவியில் இருப்பதால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை அவரால் பார்க்க முடியவில்லை. நீதிக்கான எங்கள் போராட்டத்தில் எங்கள் மாநில மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்களான, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • வால்மிகி மோசடி தொடர்பாக மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை.
    • அனைத்து எம்.எல்.ஏ.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ரூ.187 கோடி வால்மிகி மோசடி தொடர்பாக மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இந்த மோசடி வழக்கில் கர்நாடக முதல்-மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குநரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் அளித்து இருந்தார்.

    இந்த புகாரை தொடர்ந்து 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக நலத்துறை உதவி இயக்குநரை முதல்-மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்க வற்புறுத்திய அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று மந்திரிகள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சுதந்திரமான, நியாயமான விசாரணைக்கு ஒத்துழைக்க மந்திரியே ராஜினாமா செய்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50 சதவீத தொகையை மீட்டு பலரை கைது செய்துள்ளது.

    தற்போது அமலாக்கத்துறை தலையிட்டு உதவி இயக்குநரை வற்புறுத்துகிறார்கள். என்னையும் வழக்கில் தொடர்புபடுத்த குறி வைத்துள்ளனர். என்னை போன்றவர்களை சி.பி.ஐ. துன்புறுத்துகிறது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும். விசாரணையில் தலையிட விரும்பவில்லை. சட்ட சபையிலும் இதுதொடர்பாக விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது.
    • 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு...,

    கர்நாடக மாநில மந்திரிசபையில் தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் தொடர்பான வேலையில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத வேலையில் 75 சதவீதம் ஒதுக்கீடு என மசோதாவில் திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பணபரிமாற்றம் செயலியான போன்பே (PhonePe) சிஇஓ சமீர் நிகம் "தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது. என்னுடைய தந்தை அவரது பணிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்திய கடற்படையில் பணிபுரிந்துள்ளார். என்னுடைய கேள்வி, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு வேலை மறுக்கப்படுமா? என்பதுதான் எனக் கூறியிருந்தார்.

    இதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். PhonePe-ஐ புறக்கணிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போன்பே சிஇஓ சமீர் நிகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று கூறவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதலாவதாக, முதன்மையாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

    என்னுடைய நோக்கம் ஒருபோதும் கர்நாடகா மற்றும் அங்குள்ள மக்களை இழிவுப்படுத்துவது இல்லை. என்னுடைய கருத்து யாருடைய உணர்வை காயப்படுத்தியிருந்தால், உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    போன்பே (PhonePe) நிறுவனம் பெங்களூருவில்தான் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத் திறமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் உள்ள நம்முடைய அடித்தளம் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் துறையில் 100 சதவீதம் பேர் கன்னடர்கள் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மசோதா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அதை களைவோம். விரிவான ஆலேசானை நடத்தப்படும்.

    எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்ததுபோல் கர்நாடக மாநிலத்தில் துக்ளக் அரசு இல்லை. சித்தராமையா அரசு நடக்கிறது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பரிசீலிப்போம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா "சித்தராமையா தனது முதல் எக்ஸ் பதிவில் தனியார் செக்டாரில் 100 சதவீத இடஒதுக்கீடு என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் நிர்வாகப் பிரிவில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத பிரிவில் 70 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இறுதியாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கர்நாடகாவில் துக்ளக் ஆட்சி நடப்பதாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடக சட்டசபையில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழுவினர் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 27.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன்காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
    • நீர் குறைவாக உள்ளதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் இந்த மாதம் முழுவதும் (ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது சித்தராமையா கூறியிருப்பதாவது,

    காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.

    கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீத நீர் குறைவாக உள்ளது. நீர் குறைவாக உள்ளதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம்.

    ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை.

    காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு கர்நாடக அணைகளுக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதை திறந்து விடுகிறோம்.

    இதுகுறித்து வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

    • மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த 19 இடங்களில் வெற்ற பெற்றதுடன், 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்றோம்.

    கர்நாடக மாநில மக்கள் பயனற்ற வாக்குறுதிகள், பண பலம் மற்றும் அதிகார பலத்தை புறந்தள்ளியுள்ளனர். மக்களவை தேர்தலில் மக்கள் பாஜவை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-

    சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த தயாரா? என சாவல் விடுகிறேன். அதன்பிறகு உங்களுடைய நிலை என்ன? என்பது உங்களுக்கு தெரியவரும். தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக 140-ல் இருந்து 150 வரையிலான இடங்களை பிடிக்கும்.

    மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றோம். ஒரு வருடத்திற்கு முன்னதாக 134 இடங்களில் வெற்றி பெற்று கார்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்களின் சட்டமன்ற இடங்களில் பாஜக உடன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

    இது ஊழலில் ஈடுபட்டு, மக்களின் நலனை புறந்தள்ளி ஒரு வருடத்திற்குள் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இதன்மூலம் ஆட்சியில் தொடர் தார்மீக உரிமை இல்லை. மக்கள் பண அதிகாரம் உள்ளிட்டவைகளை புறந்தள்ளி, மோடியின் மீது தங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    பயனற்ற வாக்குறுதிகள் காரணமாக அனைத்து பொருட்களின் விலைவாசியையும் அதிகரித்து விட்டது. பணவீக்கத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

    • கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
    • கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

    • சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.
    • அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பதவிச் சண்டையில் ஆட்சி கவிழ்வது, ஆட்சி மாற்றம் ஏற்படுவது, முதல்வர்கள் மாற்றம் என்பது தொடர் கதைதான்.

    தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.

    காங்கிரஸ் வெற்றி பெற்றதும் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் டி.கே. சிவகுமாரை சமாதானப்படுத்தி சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

    அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் பதவி வகிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.

    இதனை இப்போதும் சித்தராமையா கோஷ்டி மறுத்து வருகிறது. டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.

    ஆனால் சித்தராமையா கோஷ்டியோ, துணை முதல்வர் டி.கே சிவகுமாரை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்கிறது. இதனை டி.கே.சிவ குமார் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. அப்படி கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டால் முதல்வர் பதவியை டி.கே. சிவகுமாருக்குதான் தர வேண்டும் என்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி.கே.சிவகுமாருக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என முதல்வர் சித்தராமையா மேடையில் அமர்ந்திருக்கும் போதே ஒக்கலிகா ஜாதி மடாதிபதி வலியுறுத்தி இருந்தது பெரும் சர்ச்சையானது.

    இதனைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம், துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்கும் விவகாரங்கள் அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இரு கோஷ்டியாக பிரிந்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல லிங்காயத்து மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-

    கடந்த 2013-ல் நான் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்த ராமையா முதல்-அமைச்சர் ஆனார். எனக்கு 2018-ல் தான் துணை முதல்வர் பதவி வழங்கினார். ஆனால் கடந்த ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றதும் நான் துணை முதல்வர் பதவி கேட்டபோது கட்சி மேலிடம் மறுத்தது.

    ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த லிங்காயத்து, சிறுபான்மையின பிரிவினருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வில்லை.

    குறிப்பாக பட்டியல் இனத்தவரின் ஆதரவின் காரணமாகவே காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த பிரிவினருக்கு துணை முதல்வர் பதவி கட்டாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் பொதுப் பணித்துறை மந்திரி சதீஷ் ஜார்கி கோளி, கூட்டுறவுத்துறை மந்திரி ராஜண்ணா ஆகியோர் சாதி வாரியாக பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    இதே போல் வீட்டு வசதித்துறை மந்திரி ஜமீர் அகமது கான் சிறுபான்மை யினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி யதால் கடும் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே பதவி சண்டை இருந்து வந்த நிலையில் 3 அமைச்சர்கள் துணை முதல்வர் பதவி கேட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார். இனி மேல் முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி யாரும் பேசக்கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் மீறிப் பேசினால் நோட்டீஸ் கொடுப்போம் என்றார்.

    ஆனால் சித்தராமையா மந்திரி அமைச்சர் ராஜண்ணா இதனை உடனே நிராகரித்திருக்கிறார். டி.கே.சிவகுமார் கொடுக்கும் நோட்டீசுக்கு எங்களுக்கு பதிலளிக்க தெரியும்; நாங்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாது என ஆவேசமாக பேசியிருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் பதவி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

    ×