என் மலர்
இந்தியா

ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்கிய சித்தராமையா - வரவேற்க யாரும் இல்லாததால் அதிர்ச்சி!
- ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது.
- விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ஷரணகவுடா பாட்டீல் பையாபுராவின் மகனின் திருமணம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரு என்ற இடத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜர்கிஹோலி தனிதனி ஹெலிகாப்டர்களில் வர முடிவு செய்தனர். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வருகைக்காக ராய்ச்சூர் சாலையில் 2 ஹெலிபேடுகள் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு கலபுரகி சாலையில் உள்ள எம்.எல்.ஏ., மணப்பா வஜ்ஜலின் ஹெலிபேடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க நெறிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பைலட் தவறாக தரையிறக்கினார். அப்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் சித்தராமையாவை வரவேற்க யாரும் இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து தவறை உணர்ந்த விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் முதல்-அமைச்சர் சித்தராமையா திருமணத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சித்தராமையா இறங்க வேண்டிய ஹெலிபேடில் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
முதல்-அமைச்சர் சித்தராமையாவின் பைலட் குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.






