என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • பள்ளி பையுடன் சிறுமியை குழி தோண்டி புதைக்க நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
    • குற்றவாளிகள் தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள்.

    கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தில் முன்பு துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஒரு தலித் நபர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோரின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக தட்சிண கன்னடா காவல்துறையிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கோரியுள்ள அந்த நபர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஜூலை 3 அன்று தர்மஸ்தலா காவல் நிலையத்தில் தட்சிண கன்னடா எஸ்.பி. அருண் கே தெரிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் எஸ்.பி. கூறினார்.

    மேலும் புகார் அளித்தவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கோரியுள்ளார். அவர் தனது புகாருடன், சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களின் புகைப்படங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.

    அவரது புகாரில், "நான் புதைத்த உடல்களின் எச்சங்களை தோண்டி எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தோம்.

    நாங்களும் கொல்லப்படுவோம் என்ற பயம் தினமும் எங்களை வாட்டுகிறது. நான் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன், 1995 முதல் டிசம்பர் 2014 வரை தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் நேத்ராவதி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்தேன்.

    ஆரம்பத்தில் நான் பல உடல்களைப் பார்த்தேன், அவர்கள் தற்கொலை அல்லது தற்செயலான நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதினேன். பெரும்பாலான உடல்கள் பெண்களின் உடல்கள், அவற்றில் பெரும்பாலானவை ஆடைகள் இல்லாமல் இருந்தன. சில உடல்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலின் அறிகுறிகள், கழுத்தை நெரித்தல் மற்றும் பிற காயங்கள் இருந்தன.

    1998 இல், எனது மேற்பார்வையாளர் உடல்களை ரகசியமாக அப்புறப்படுத்தும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று சொன்னபோது, நான் கொடூரமாக தாக்கப்பட்டேன். என்னையும் என் குடும்பத்தைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். 

    எனது மேற்பார்வையாளர் உடல்கள் கிடந்த குறிப்பிட்ட இடங்களுக்கு என்னை அழைப்பார், அவற்றில் பலவும் சிறுமிகளின் உடல்கள். இதில் ஒரு சம்பவம் என்னை என்றென்றும் துரத்துகிறது. 2010 இல், கல்லேரியில் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி இறந்து கிடந்தார். அவர் பள்ளி சீருடை அணிந்திருந்தார், அவரது பாவாடை மற்றும் உள்ளாடைகள் காணாமல் போயிருந்தன, மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அவரது பள்ளி பையுடன் அவரை புதைக்க ஒரு குழி தோண்டும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

    மற்றொரு சம்பவத்தில், 20 வயது பெண்ணின் முகம் ஆசிட்டால் எரிக்கப்பட்டிருந்தது, அவரது உடல் செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது, மேலும் அவரது உடலை எரிக்கும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அந்த கொலைகளுக்கு நான் ஒரு சாட்சியாக இருந்தேன். நான் பல உடல்களை புதைக்கவும் சிலவற்றை எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

    2014 இல், எனது குடும்பத்தில் ஒரு சிறுமி எனது மேற்பார்வையாளருக்குத் தெரிந்த ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். நாங்கள் தப்பிச் செல்ல முடிவு செய்தோம், நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவிலிருந்து ஓடிவிட்டேன். அப்போதிருந்து நாங்கள் அண்டை மாநிலத்தில் எங்கள் அடையாளங்களை மறைத்து, வீடுகளை மாற்றி வாழ்ந்து வருகிறோம்.

    பாதிக்கப்பட்டவர்களையும், அந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம். சமீபத்தில் நான் தர்மஸ்தலாவுக்குச் சென்று ரகசியமாக ஒரு உடலின் எச்சங்களை தோண்டி எடுத்தேன். படங்கள் எடுக்கப்பட்டு காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    குற்றவாளிகள் தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். உடல்களைப் புதைக்கும்படி என்னை மிரட்டி, சித்திரவதை செய்வார்கள். குற்றவாளிகள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், தங்களை எதிர்ப்பவர்களை அவர்கள் அளித்துவிடுவார்கள்.

    எனக்கு பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களின் பெயர்களையும், அவர்களின் பங்களிப்புகளையும் வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மேலும் உண்மையை நிலைநாட்ட பாலிடெக்ட் அல்லது வேறு எந்த சோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். புதைக்கப்பட்ட உடல்கள் மரியாதைக்குரிய இறுதி சடங்குகளைப் பெற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே உடல்களை தோண்டி எடுக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். 

    • பூசாரி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்தார்.
    • குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது மகள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் சிறுமியை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர்கள் கூறினர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் ரூ. 7 லட்சம் வரை செலவு செய்த பூசாரியால் இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.

    இதையடுத்து பூசாரி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் பயாஸ் என்பவரது செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் உதவி கேட்க கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை தொடர்பு கொண்டு குழந்தையின் தந்தை மற்றும் அவரது ஊரை சேர்ந்த சிலர் பயாஸ்சை சந்தித்து விபரங்கள் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து பயாஸ், கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கினார். பின்னர் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மாலை 6 மணிக்கு அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி கேட்டனர். இதையடுத்து மறுநாள் காலை 10.30 மணிக்கு ரூ.75 லட்சம் வசூலானது. வீடியோ வெளியிட்ட சுமார் 16½ மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ. 75 லட்சம் வசூலானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.

    • குடகு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக மழை நின்றதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
    • அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    • கல்லூரி பேருந்தை பிடிக்க அவசரமாக சாலையைக் கடக்க முயன்றபோது மோதியது.
    • அரசுப் பேருந்து வந்து அவர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுந்தார்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    கல்லூரி பேருந்தை பிடிக்க அவசரமாக சாலையைக் கடக்க முயன்றபோது மாணவர் ஒருவர் மீது அதிவேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் மாணவர் பலத்த காயமடைந்தார்.

    விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியில், மாணவர் ஓடிக்கொண்டே சாலையைக் கடக்க முயற்சிப்பதைக் காணலாம். அப்போது முன்னால் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்து வந்து அவர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுந்தார்.

    விபத்து நடந்த உடனேயே, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவரைத் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    • தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
    • ICMR மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

    தடுப்பூசிகளுக்கு அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற சித்தராமையாவின் கூற்று உண்மைக்கு மாறானது என்றும், அது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான பீக்கன் லிமிடெட் நிர்வாகத் தலைவரும் தொழிலதிபருமான கிரண் மஜும்தார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பதில்களைத் தேடுவதைக் குறை கூறுவதாகக் கருத முடியாது என்று சித்தராமையா கிரண் மஜும்தாருக்கு  பதிலளித்துள்ளார்.

    முதலமைச்சராக, மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது எனது கடமை. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்பாராத விதமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். ஒரு விஷயத்தில் தெளிவு கோருவது தவறான பிரச்சாரம் அல்ல. தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    உலகளாவிய சுகாதார அவசரநிலையின் போது இந்த தடுப்பூசி அவசரமாக அங்கீகரிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. ஒரு தொற்றுநோய் காலத்தில் இவ்வளவு அவசரம் தவறு அல்ல. ஆனால் இதன் விளைவுகளைப் புரிந்துகொள்வது நல்லது என்று கூறினார்.

    இதற்கிடையே கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் அறிக்கைகள் தவறானவை என்றும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் முக்கிய காரணிகள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
    • அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏசிபி) நாராயணா பரமணியை நோக்கி கர்நாடக முதல்வர் சித்தராமையா கை ஓங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி, நாராயணா பரமணி விருப்ப ஓய்வு கோரி கடிதம் அளித்திருந்தார். அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து ஏற்பட்ட அவமானத்தையும், ஆதரவின்மையையும் இதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.

    கன்னடத்தில் எழுதப்பட்ட மூன்று பக்க கடிதத்தில், இந்தச் சம்பவத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவமதிக்கப்பட்டதாகவும் உணர்வுபூர்வமாக விளக்கினார்.

    "முதலமைச்சரை நான் நேருக்கு நேர் சந்திக்க விரும்பினேன்... ஆனால் பொதுவெளியில் அது ஏற்படுத்தும் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்த்தேன்" என்று அவர் எழுதினார். இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பரமணி தனது ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார்.

    இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    • பெங்களூரு கிராமப்புற (RURAL) மாவட்டம் "பெங்களூரு வடக்கு மாவட்டம்" என மாற்றப்படும்.
    • பாகேபள்ளி நகரம் "பாக்யநகரா" எனவும் பெயர் மாற்றப்படும் என அறிவித்தார்.

    கர்நாடக காங்கிரஸ் அரசு, இன்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நினைவாக பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் 'டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம்' எனப் பெயர் மாற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

    மேலும், பெங்களூரு கிராமப்புற (RURAL) மாவட்டம் "பெங்களூரு வடக்கு மாவட்டம்" எனவும், பாகேபள்ளி நகரம் "பாக்யநகரா" எனவும் பெயர் மாற்றப்படும் என அறிவித்தார்.

    சட்டவிரோத சுரங்கத்தைப் பற்றி ஆய்வு செய்ய, சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டில் தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மொத்தம் ரூ.3,400 கோடி நிதி ஒதுக்கீட்டில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியிருப்புப் பள்ளிகள் கட்ட ரூ.1,025 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    பெங்களூருவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்க ரூ.10 கோடி செலவில் இரண்டு குடியிருப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    சட்டவிரோத சுரங்கங்கள் பற்றி ஆய்வு செய்ய சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டில் தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.

    யெத்தினஹோல் குடிநீர் திட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 9 மாவட்டங்களில் உள்ள 75 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    • முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும் என்றார் சித்தராமையா.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டு முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவில் முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், எனக்கு என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவரை (சித்தராமையா) ஆதரிக்க வேண்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. கட்சி உயர்மட்டம் என்ன சொன்னாலும், அது என்ன விரும்பினாலும், அது நிறைவேறும் என தெரிவித்தார்.

    • சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது.
    • முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு அங்கு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களைச் சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது.

    இதற்கிடையே, சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு அங்கு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என கூட்டுறவுத்துறை மந்திரி ராஜண்ணா சமீபத்தில் கூறியிருந்தார்.

    ஆனால், கர்நாடகாவில் தற்போதைக்கு முதல் மந்திரி மாற்றம் குறித்து ஆலோசிக்கவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 5 ஆண்டுகளும் நான் முழுமையாகப் பதவியில் இருப்பேன் என உறுதிபடக் கூறினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறை போல் உறுதியாக ஆட்சியில் இருக்கும்.

    ஆம், நான் ஆட்சியில் இருப்பேன். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என கேள்வி எழுப்பினார்.

    • இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
    • அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.

    ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.

    இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.

    மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது. 

    மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

    • கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
    • நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் செல்லுங்கள்.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா,

    "கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

    இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 10 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே குழுவிற்கு கடந்த பிப்ரவரி மாதமே, மாநிலத்தில் இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்களுக்கான காரணங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த தொடர்பாக, இதய நோயாளிகளை பரிசோதிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையும் எதிர்காலத்தில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் நாங்களும் மதிப்பளிக்கிறோம், அவர்களின் குடும்பங்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

    இதுபோன்ற விஷயங்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் செயல்களை நான் கண்டிக்கிறேன். கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.

    ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும்.

    ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்.

    ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    ×