என் மலர்
நீங்கள் தேடியது "bengaluru"
- இந்திய சந்தையில் டெஸ்லா தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
- குருகிராமில் 3 ஆவது டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டது.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
கடந்தாண்டு மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமை டெஸ்லா திறந்தது. அடுத்ததாக குருகிராமில் 3 ஆவது ஷோரூம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் ஷோரூம் திறப்பதாக டெஸ்லா நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
- ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
- இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏஜிபி லேஅவுட்பகுதியில், நள்ளிரவில் வேலை முடிந்து விடுதிக்குத் நடந்து சென்று கொண்டிருந்த 28 வயது பெண் மருத்துவரிடம் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
பின்னர் மருத்துவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். மருத்துவர் சத்தமிடவே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
- இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.
அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.
அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.
ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
- 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
- பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.
நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.
- கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
- தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'கௌரி' சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். பல தொடர்களில் துணை நடிகையாக தடம் பதித்த நந்தினி, கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
'கௌரி' சீரியல் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டில் நந்தினி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில், திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாரக இல்லை என்றும் இதனால் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நந்தினி எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தியின் தற்கொலை சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
- விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.
டிஜிட்டல் கைது மோசடி கும்பலின் வலையில் சிக்கிய அவர், பெங்களூருவில் உள்ள தனது வீடு மற்றும் நிலத்தை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.
பெங்களூருவின் விக்னம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு, கடந்த ஜூன் மாதம் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஆதார் எண் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதாக மிரட்டியுள்ளனர்.
மும்பை காவல்துறை அதிகாரிகள் போல நடித்த கும்பல், அந்தப் பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாக வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து மிரட்டியுள்ளனர். அவரது 10 வயது மகனை குறிப்பிட்டும் மிரட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த மிரட்டலுக்கு பயந்து, ஜூன் முதல் நவம்பர் வரை சுமார் சிறிது சிறிதாக மொத்தம் 2.05 கோடி ரூபாய் பணத்தை அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.
இந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இது தவிர வங்கிக் கடனும் வாங்கியுள்ளார்.
இறுதியாக தடையின்மை சான்றிதழ் (NOC) வாங்க காவல் நிலையம் வைட்ஃபீல்ட் காவல் நிலையம் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்களால் சுமார் 5,474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்வர்களிடம் உதவிக்காக கெஞ்சினார்.
- சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனிதர்கள்களின் அலட்சியத்தால் சக மனிதர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு பாலாஜி நகரில் வசித்த மெக்கானிக்காக வெங்கடரமணன் (34) நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கடுமையான மார்பு வலியை உணர்ந்தார்.
உடனடியாக அவரது மனைவி, தனது கணவரை பைக்கில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பினர்.
அவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு ஈசிஜி எடுக்கப்பட்டு, அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அவசர சிகிச்சை அளிக்கவோ அல்லது ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யாமல், ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தம்பதியினர் மீண்டும் தங்கள் பைக்கில் புறப்பட்டனர். வழியில், அவர்களின் பைக் விபத்துக்குள்ளானது.
இதனால், வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்ற வாகனத்தில் சென்ற ஒவ்வொருவரிடமும் உதவிக்காக கெஞ்சினார்.
சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் பைக்குகள் எதுவும் நிற்காமல் சென்றுவிட்டன.
சிறிது நேரம் கழித்து, ஒரு டாக்ஸி ஓட்டுநர் நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால், ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது, வெங்கடரமணன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்தவருக்கு ஐந்து வயது மகனும் 18 மாத மகளும் உள்ளனர்.
சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.
- அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.
இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.
அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.
இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தில் லண்டன் இடம்பிடித்துள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.
புதுடெல்லி:
கனடாவை தலைமையிடமாக கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது.
தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
- கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
- அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம்.களுக்குப் பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்த கும்பல், துப்பாக்கி முனையில் 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கை துப்பு துலக்கிய பெங்களூரு காவல்துறை ஐதராபாத்தில் வைத்து, கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் அன்னப்பா நாயக், பெங்களூரு கிழக்கு கோவிந்தபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். சேவியர் CMS Info Systems நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.
மூன்றாவது நபர் கோபி பிரசாத், கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தின் வழித்தடத்தை டிராக் செய்வதில் பங்காற்றியவர் ஆவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தான் ஒரு போலீஸ் என்பதால் போலீசிடம் சிக்காமல் கொள்ளையடிப்பதற்கான நுணுக்கங்களை அவரே தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.
சிக்கியது எப்படி?
கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
அன்னப்பா நாயக் அங்கு பணியில் இல்லாதபோதும், அவர் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்துள்ளார்.
அங்குப் பணியில் இருந்த தலைமை காவலரை அணுகிய அவர், கொள்ளை குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று குறிப்பாகக் கேட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் காட்டி அது உண்மையானதா என்றும் கேட்டுள்ளார்.
அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல்தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இங்கு வந்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் என்று தலைமை காவலர் சந்தேகம் அடைந்தார். இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார்.
தீவிர விசாரணையில், கொள்ளையில் தனக்கு இருந்த பங்கை அன்னப்பா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேவியருடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவரது செல்போன் அழைப்புகள் உறுதிப்படுத்தின.
தற்போது, அன்னப்பா நாயக் மற்றும் இரு குற்றவாளிகள் பத்து நாட்கள் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
- ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.






