என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children"

    • ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தின் மூலம் ஜானிடெப் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
    • தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    ஜானிடெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானிடெப் சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசிஜானிடெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    • கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம். இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான். அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

     

    * கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.

    * மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.

    * குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.

    * மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    * ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.

    * பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.

    எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.

    இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.

    • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

    அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
    • குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.

    ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.

    இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!


    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.

    இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.

    நேர்மறை எண்ணம் வளர்தல்

    குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.

    இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.


    புரிதல் திறன் அதிகரித்தல்

    குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.


    சொல் அறிவு

    ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.

    நல்லொழுக்கம் வளர்கிறது

    கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.


    கலாசாரங்களை அறிதல்

    குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

    எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.

    • அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
    • உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!


    குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.

    சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.

    உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.


    காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.

    குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.

    கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.


    குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

    குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.

    • ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
    • குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.

    இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.

    அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


    குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    • 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
    • குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மழைக்காலத்தில் காய்ச்சல் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார், மனித உரிமைகள் ஆணையம் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கூறும்போது, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.

    குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    • பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
    • உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சி பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகள் தர்ஷன் (வயது 4), காவ்யா (4), ரெனீஸ் வருண் (3), பெத்ரு பாண்டியன் (2), ஜான்சன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் தக்காளி சாதம் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30), ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர்.

    அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் அதனை சாப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனையங்கால் அங்க ன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று 7 குழந்தைகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 4 குழந்தைகளுக்கு உணவு பரிமாறி 5-வது குழந்தைக்கு உணவு பரிமாற செல்லும் போது உணவில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.

    உணவு சாப்பிட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதுடன் அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளார்கள். யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹீர் உசேன் கூறுகையில், அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் நலமாக உள்ளனர் என்றார்.

    • திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் :

    உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது
    • மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில்

    புதுக்கோட்டை,

    மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில், முதல்வர் ஜலஜாகுமாரி முன்னிலையில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைவர் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.

    இணைத்தலைவர் பேசும் போது, மாணவர்கள் தெளிந்த சிந்தனையோடு , கற்பதை ஆழமாக கற்று , சாதனை ஒன்றை நோக்கமாக கொண்டு, இலக்கு நோக்கி நேர்கொண்ட பாதையில் பயணிக்க வேண்டும். நன்மை தீமை என்ற இரண்டு பக்கங்கள் கொண்ட வாழ்க்கையில் நன்மையை பற்றிக் கொண்டு , தீமையில் இருந்து விலகி நடக்க வேண்டும் என்றார்.

    ஆசிரிய ஆசிரியைகளின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்வாக இருந்தது என்று கூறி, பள்ளியின் முதல்வர் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

    • ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல்.
    • குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் வேண்டும்.

    சுவாமிமலை:

    மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பேரணியில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் ஆகியவைகளை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    ×