search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Abduction"

    • வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது

    கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6-ம் தேதியன்று குழந்தைகள் கடத்த போவதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து, வடமாநிலத்தவர்கள் 5 பேரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

    வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் நேற்று இரவு (மார்ச் 8) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவல்துறையினருடன் , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினர். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, " இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    * 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
    • கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

    சென்னை:

    ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.

    அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.

    மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
    • பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுடன் அவரது தாயார் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை. மேலும் அவருடன் தங்கி இருந்த அவரது தாயாரையும் 2 வயது குழந்தையையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் குழந்தையை காணவில்லை என்று கூச்சலிட்டார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்று எண்ணி கொண்டு விசாரித்தனர்.ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த குழந்தைகளை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பொதுமக்களிடமிருந்து இருந்து விடுவித்து அனுப்பி வைத்தனர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெட்டியம்மா ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
    • இளம்பெண் ஒருவர் ஒரு ஆணுடன் குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி கொத்த குண்டா, புளிச்சேர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவரது மனைவி ரெட்டியம்மா.

    திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆனதால் நேற்று காலை ரெட்டியம்மாவை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்ப இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த 2 பேர் ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்தி சென்றனர். ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ரெட்டியம்மா ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அவர்கள் உடனடியாக திருப்பதி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தையை கடத்தி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்தனர்.

    அப்போது இளம்பெண் ஒருவர் ஒரு ஆணுடன் குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணையும், அவரது கணவரையும் அலிப்பிரி ரோட்டில் உள்ள விவேகானந்தா சர்க்கிளில் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் இது தன்னுடைய குழந்தை தான் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குழந்தையை பறிகொடுத்த ரெட்டியம்மாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காண்பித்தபோது அது அவருடைய குழந்தை என தெரியவந்தது. அதனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்கு அர்ஜுனவாடாவை சேர்ந்த லதா (வயது 24), அவரது கணவர் வெட்டி சுமன் என தெரியவந்தது.

    லதா கர்ப்பமாக இருந்து கரு கலைந்து விட்டதால் இனி குழந்தை பிறக்காது என்ற எண்ணத்தில் குழந்தையை கடத்திச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ஆந்திராவில் சட்டவிரோதமாக தத்தெடுப்பு மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், ஜி கோந்தூரு மண்டலத்தை சேர்ந்தவர் துர்கா இவருக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் துர்கா 3-வதாக கர்ப்பமானார். 3-வதாகவும் ஆண் குழந்தையாக பிறந்தால் தனது கணவர் ஏற்க மாட்டார் என பக்கத்து வீட்டை சேர்ந்த ஆர்.எம்.பி. டாக்டர் புஷ்பலதாவிடம் தெரிவித்துள்ளார்.எனவே குழந்தையை தத்து கொடுக்க விரும்புவதாக துர்கா புஷ்பலதாவிடம் கூறினார்.

    ஆனால் துர்காவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதை கவனிக்காத டாக்டர் புஷ்பலதா மருத்துவமனைக்குச் சென்று பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பயிற்சி ஆர்.எம். பி டாக்டரான அம்ருதாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, இந்த குழந்தை விற்பனைக்கு உள்ளதாக கூறினார்.

    டாக்டர் அம்ருதா குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி ரூ.3 லட்சத்திற்கு குழந்தை விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டு ஏலம் விட்டுள்ளனர்.

    இந்த செய்தியை பார்த்த கமலாகர் ராவ் என்பவர் உடனடியாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அஜித் சிங் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் துர்காவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது அனுமதியின்றி அனைத்தும் நடந்ததாகவும், சமூக ஊடகங்களில் நடந்தவை தனக்கு தெரியாது என்று கூறினார்.

    இதையடுத்து சட்டவிரோதமாக தத்தெடுப்பு மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் புஷ்பலதா, அம்ருதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதியில் கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தையை மராட்டிய போலீசார் உதவியுடன் திருமலை போலீசார் மீட்டனர். #Tirumala #Maharashtra #BoyAbducted
    திருப்பதி:

    மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது இவருடைய 1½ வயது ஆண் குழந்தை வீரேசை காணவில்லை.



    இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது உறுதியானது.

    இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இந்தநிலையில் மராட்டிய போலீசாரின் உதவியுடன் திருமலை போலீசார், லத்தூர் பகுதியில் குழந்தையோடு சுற்றித்திரிந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் லத்தூர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (57) என்பது தெரியவந்தது. அவர் குழந்தையை கடத்தியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், குழந்தை வீரேசை பத்திரமாக மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    திருப்பதியில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது 1½ வயது மகன் வீரேஷ். பிரசாந்த் ஜி ஜாதவ் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கினர்.

    இந்தநிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் ஜி ஜாதவ் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமலையில் குழந்தை கடத்தல் சம்பங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தேவஸ்தானம் பல்வேறு இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளது. அதன்பின் சற்று குறைந்திருந்த குழந்தைக் கடத்தல் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

    குழந்தையை கண்டு பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    திருப்பதியில் உள்ள நடைபாதை மார்க்கத்தில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அவ்வழியாக மர்மநபர் திருப்பதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திருப்பதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்காரர்கள் என கருதி பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தில் 3-வது மாடியில் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளது. இந்த வார்டு பகுதியில் இன்று காலை 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக திரிந்தனர். அங்கு மிங்குமாக சிறிது தூரம் சுற்றிய இருவரின் நடவடிக்கைகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது.

    அவர்கள் இருவரும் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக வார்டில் இருந்தவர்கள் கருதினர். இதையடுத்து 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களிடம் நீங்கள் யார்? இங்கு உங்களது உறவினர்கள் யார் தங்கியிருக்கிறார்கள்? எதற்காக இங்கு சுற்றுகிறீர்கள்? என கேட்டனர்.

    அதற்கு இரு வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எதற்காக ஆஸ்பத்திரிக்குள் சுற்றினர்? என போலீசார் கேட்ட போது, உரிய பதிலை கூறவில்லை.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார்.

    சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

    போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

    இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ×