என் மலர்
மகாராஷ்டிரா
- முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
- கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.
கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.
445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.
இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
- குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.
அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.
2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- தந்தை நோயால் அவதிப்பட்டு வந்ததால், மகன்கள் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
- தந்தை, தாயை கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சோனாஜி லாகே (51). இவரது மனைவி ராதாபாய் லாகே (45). இவர்களுக்கு உமேஷ் (25), பஜ்ரங் (23) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
ரமேஷ் சோனாஜி லாகே பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களது குடும்பத்தில் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதை இரண்டு மகன்களால் சமாளிக்க முடியவில்லை.
இதனால் தந்தை மற்றும் தாயை கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தந்தை மற்றும் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அத்துடன் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையின் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த நான்கு பேரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதிச்சுமை காரணமாக பெற்றோரை கொலை செய்து, இரண்டு மகன்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரபு நாடுகள் துரந்தர் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
- மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மும்பை:
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 21 நாளான நிலையில், துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
- கரும்புகை பரவியதால் அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி வீராதேசாய் ரோடு பகுதியில் 22 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
நேற்று காலை10 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மாடிகளில் கரும்புகை பரவியது. அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாடி படிக்கட்டுகளில் சிக்கித் தவித்த 40 பேரை பத்திரமாக மீட்டனர்.மின் வயர்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் நவி மும்பை விமான நிலையத்தின் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.
- நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி கலந்து கொண்டார்.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.
இதனையடுத்து அக்டோபர் 8 ஆம் தேதி நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தனது முதல் வணிக விமானத்தின் வருகையுடன் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அந்த விமானம் வந்தடைந்தபோது, அதற்கு பாரம்பரியமான நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் 6E460, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் விமானமாக காலை 08:00 மணிக்கு தரையிறங்கியது. அதற்கு பாரம்பரிய நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் முதல் புறப்பாடாக, ஹைதராபாத்திற்குச் செல்லும் இண்டிகோ விமானம் 6E882 காலை 08:40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கிய நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று விமான நிலையதிக்ரு வருகை தந்தார்.
- ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
- உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.
- அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்த 68 வயது முதியவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ.23.5 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் காவல் துறை அதிகாரிகள் என்றும், அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.
அவரை வீட்டிலேயே 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், அவர்கள் கேட்டபடி பல தவணைகளாக மொத்தம் 23.5 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இது குறித்து தற்போது கல்யாண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
- இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.
மும்பை:
சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
- உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதில் பல இடங்களில் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. சில இடங்களில் பா.ஜ.க.-சிவசேனா, காங்கிரஸ்- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பல்வேறு அரசியல் பரபரப்புக்கு இடையே மராட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னணி வகித்தன.
பா.ஜ.க கூட்டணி 192 இடங்களில் முன்னணியில் உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை யில் உள்ளன.
மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன. சிவசேனா 44 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் 28 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சைகள் 29-ல் முன்னிலையில் உள்ளன.
மொத்தம் உள்ள 42 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜனதா 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனா-8, காங்கிரஸ்-4, உத்தவ்தாக்கரே சிவசேனா-3, தேசியவாத காங்கிரஸ்-3, மற்றவை-2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
- சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
- இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.
புனே:
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1ல் மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல் பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன் முடிவில் ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.
இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
- கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க முடிவு செய்த அவர் கந்துவட்டி நபர்களிடம் தலா 50 ஆயிரம் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி மட்டுமே உயர்ந்து, ஒரு கட்டத்தில் மொத்த கடன் தொகை 74 லட்சம் ரூபாயாக எகிறியது.
கடனை அடைக்க தனது 2 ஏக்கர் விவசாய நிலம், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என அனைத்தையும் விற்றுள்ளார். இருப்பினும் கடன் தீரவில்லை.
கந்துவட்டி கும்பலின் மிரட்டல் அதிகரித்ததால், அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் பேரில், இடைத்தரகர் மூலம் கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இவ்வளவு செய்தும் இன்னும் கடன் தீரவில்லை எனக் கூறி கந்துவட்டி கும்பல் மிரட்டுவதால், காவல்துறையை நாடி தனக்கு நீதி வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.
போலீசில் புகார் செய்த பிறகும் அவர்கள் கவலைப்படவில்லை என்று குற்றம்சாட்டிய விவசாயி தனக்கு நீதி கிடைக்காவிட்டால், மும்பையின் மந்திராலயாவில் உள்ள மாநில தலைமையகத்தின் முன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.






