என் மலர்
நீங்கள் தேடியது "Bombay High Court"
- தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
- உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.
மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.
லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.
- ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.
ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.
பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.
இதற்கிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.
அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.
பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.
படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்த முச்சல், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு விக்ஞான் மானே மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு வணிக ரீதியானது என்றும், திருமணத்தை கலைத்தல் போன்ற தனிப்பட்ட விஷயங்களுடன் அதை இணைப்பது பொருத்தமற்றது என்றும் கூறியது.
விக்யானின் கருத்துக்கள் அவதூறானவை என்று கூறி, முச்சல் குறித்து பொதுவெளியில் அவர் கருத்து வெளியிட தடை விதித்தது.
மேலும், விக்யான் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை மார்ச் 11க்கு ஒத்திவைத்தது.
- 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா சிக்கியுள்ளார்.
- 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது.
அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்யாமல் வழக்கை விசாரிக்க முடியாது எனத் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றால், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா, நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த டிசம்பர் மாதமே நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
தற்போது அவருக்கு இது தொடர்பாகப் பதிலளிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் கௌதம் அங்கட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
மல்லையா இந்தியா திரும்புவாரா என்பது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
- வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
- மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சென்னை ஐகோர்ட்டு, சுங்க இலாகா அலுவலகம், மும்பை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே செயல்படும் மத்திய சுங்க இலாகா தலைமை அலுவலகம், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதேபோல், மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் ஐகோர்ட்டு வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் கிடைக்கவில்லை.
மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மும்பை:
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பை புறநகர் மேற்கு வழித்தடத்தில் பல ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் 189 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனை யும் , 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் அப்பீல் செய்து இருந்தனர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அனில் கிலோர், ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு அளித்தது. 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
அரசு தரப்பு கோர்ட்டில் அளித்து இருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.
- தனது மனுவின் நகலை படிக்க ராகுலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
- அவர் பிரதமரானால், அவர் பேரழிவை ஏற்படுத்துவார்.
இந்துத்துவா தலைவர் சாவர்க்கரைப் பற்றி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி படித்துப் புரிந்துகொள்ள உத்தரவிட வேண்டும் என்ற மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
இந்த மனுவை அபினவ் பாரத் காங்கிரஸின் நிறுவனத் தலைவரான பங்கஜ் குமுத்சந்திர பட்னிஸ் தாக்கல் செய்துள்ளார். சாவர்க்கர் குறித்து தான் ஆராய்ச்சி செய்ததாகக் கூறிய இவர், சாவர்க்கர் பற்றி முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற முறையில் ராகுல் பேசுவதால், தனது மனுவின் நகலை படிக்க ராகுலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் சந்தீப் மார்னே ஆகியோர் அடங்கிய அமர்வு, உங்கள் மனுவை எப்படி படிக்கும்படி அவரை கட்டாயப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் குழப்பத்தை உருவாக்குகிறார் என்றும், அவர் பிரதமரானால், அவர் பேரழிவை ஏற்படுத்துவார்நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், "அவர் பிரதமராவார் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா?" என்று அது கேட்டனர். சாவர்க்கரின் பேரன் ஏற்கனவே ராகுலுக்கு எதிராக புனேவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களுக்காக உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த இதுபோன்ற கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி சாவர்க்கரை விமர்சித்தார். சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார்.
- ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது.
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், மைனர் குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், 2013 இல் பிரிந்தபோது, மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.
கணவர் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரினார். ஆனால், விவாகரத்து மனுவில் அவர் குழந்தையின் தந்தை இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மைனர் குழந்தைக்கு DNA சோதனைக்கு உத்தரவிட்ட குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி ஆர்.எம். ஜோஷி உத்தரவிட்டார்.
இத்தகைய மரபணு பரிசோதனைகள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கள்ளத்தொடர்பு காரணமாக விவாகரத்து கோர ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதாலேயே, DNA சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த அவர், மனைவி மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு இருந்தால், அதை DNA சோதனை மூலம் அல்லாமல், வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கலாம் என்று தெரிவித்தார்.
குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார். ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார்.
- 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது.
- 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
RSW நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.
இதற்கு எதிராக RSW நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ரூ.555 கோடி இழப்பீடு கோரப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி வழங்க BCCI-க்கு உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு வழங்கப்போகிறதா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோகிறதா என பிசிசிஐ தரப்பு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
- சர்ச்சைக்குரிய பதிவிற்காக இன்ஜினியரிங் கல்லூரி அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது.
- ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா?
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக 19 வயது பொறியியல் மாணவியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய பதிவிற்காக சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டதற்கும் கல்லூரியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் அந்த மாணவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌரி கோட்சே தலைமையிலான அமர்வு, உடனடியாக மாணவியை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும், "ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா? உங்களால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது. மாணவியின் வாழ்க்கையில் விளையாட அரசும், கல்லூரி நிர்வாகமும் யார்? என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நீதிபதிகள் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
- 4 சட்ட கல்லூரி மாணவர்கள் வழக்கை தொடர்ந்திருந்தனர்
- மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிப்பதை தவிர்த்தது நீதிமன்றம்
உத்தர பிரதேச அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.
நாளை, ஜனவரி 22 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்தியாவில் 15 மாநிலங்கள் இந்நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்தன. அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலமும் ஜனவரி 22 அன்று அரசு விடுமுறை என அறிவித்தது.
ஆனால், இந்த விடுமுறையை எதிர்த்து 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று சிறப்பு அமர்வில், ஷிவாங்கி அகர்வால், சத்யஜித் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா எனும் 4 சட்ட கல்வி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது:
விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மதசார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர். இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல; பொது விளம்பர வழக்கு (publicity interest litigation). எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள் என கருதி, அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, விசாரணைக்கு எடுத்து கொள்ளும் முன்பே வழக்கு குறித்த விவரங்கள் ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டதற்கு, தங்களுக்கும் அது தெரியாது என அவர்கள் பதிலளித்தனர்.
- 2017 ஆம் ஆண்டு 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார்.
- கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான்.
தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
- மாமியார் கொடுமையால் தான் தங்களது மகள் தற்கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் புகார்
- பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தன் மாமியார் வீட்டில் துன்புறுத்தப்பட்டதால் தான் தங்களது மகள் தற்கொலை செய்துள்ளார் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
எங்களது மகளின் தனிப்பட்ட சுதந்திரங்களை கணவனின் குடும்பத்தினர் பறித்தனர் என்று இந்த கிழக்கில் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர். டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது. கம்பளத்தின் மேல் தான் படுத்து தூங்க வேண்டும் என்று எங்கள் மகளை கணவனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக கணவன் வீட்டார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது என்று கூறி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.






