என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"
- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
- மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மகாராஷ்டிராவின் பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் தொடர்ந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார்.
அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் இன்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
முன்னதாக இந்த விஷயத்தில் உண்மையை முன்வைப்பதாவும், மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஒரு கொலை குற்றவாளி பாஜக தலைவராக உள்ளார் என அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி
- மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வீடியோவில் பேசிய ராஜ் சிங், " மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருந்தார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது.
- நான்காவது வகை "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்"
மும்பையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா ஒன்றில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் நான்கு வகை என்றும், இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர்,
'இந்துத்துவாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். உங்கள் மத நடைமுறையையோ அல்லது உங்கள் மொழியையோ. இந்துத்துவா உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இந்துக்களில் நான்கு வகையினர் உள்ளனர். முதலாவது, பெருமையுடன் நாங்கள் இந்துக்கள் எனக்கூறுவார்கள். இரண்டாவது பிரிவில், "நாங்கள் இந்துக்கள், அதனால் என்ன? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?" என்று கூறுபவர்கள். மூன்றாவது பிரிவில், "வீட்டிற்குள் மட்டும் இந்துக்கள்" என்று கூறுபவர்கள்.
நான்காவது "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்" அடங்குவர். மேலும் அதிகமான மக்களை மறக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன'. என்று கூறினார். மேலும் இந்து பாவம் அல்லது இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
"மதத்தின் காரணமாகப் பிரிவினை ஏற்பட்டது. நாங்கள் இந்துக்கள் என்பதால் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று சொன்னோம். இது தவறு என்று கூறும் மக்கள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் இந்தியாவில் உள்ளன. மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது. 'இந்து பவ் கா விஸ்மரன்' என்பது இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்தது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேச வன்முறைகள் தொடர்பாக பேசியவர், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள 1.25 கோடி இந்துக்கள் அங்கேயே இருந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடிவு செய்தால், அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் பாடகர் அட்னான் சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
- வட மாநிலங்களில் கையாளும் 'வியூக, வித்தைகள்' தமிழ்நாட்டில் செலாவணி ஆகாது!
- 2026 இல் ஸ்டாலின் ஆட்சி' என்பது உறுதி!
தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி தன் சாதனைகளால் வெற்றி பெற்று மீண்டும் (2026 இல்) ஸ்டாலின் ஆட்சி என்பது உறுதி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின் அமித்ஷாக்கள் பல தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் முதலில் நுழைந்து, பிறகு கூடாரத்தையே தன் வசமாக்கும் தந்திரம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த சூழ்ச்சி வாண வேடிக்கைகளைக் காட்டினாலும், மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணியே வெற்றி பெறும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி, நேற்று (23.1.2026) வந்து, மதுராந்தகத்தில் தங்களது கூட்டணியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். வட நாட்டில் பார்க்கும் 'சுப நாள்' என்னும் ('வசந்த பஞ்சமி' நாளாம்!) நாளில் தொடங்கி வைத்துள்ளார்!
கடந்த ஆறு மாதங்களாக பி.ஜே.பி.யின் சிந்தனை எத்தகையது?
கடந்த ஆறு மாதங்களாக, தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்களது தலைமையில் அமைந்து, தொடர்ந்து வெற்றிக் கனிகளைப் பறித்து வரும், கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சித்து, அது தனது சொந்தக்காலில் நிற்க முடியாததால், அ.தி.மு.க. போன்ற 'திராவிட' முத்திரையுள்ள எதிர்க்கட்சியான 'பெரிய கட்சி'யின் தோள்மீது சவாரி செய்தால்தான் முடியும்; இல்லையேல், தி.மு.க. கூட்டணியை அசைக்கவே முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உணர்ந்துள்ளதால்,
உள்துறை அமைச்சரான அமித்ஷாமூலம், அச்சுறுத்தல்களின் காரணமாக – எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) எடப்பாடி பழனிசாமிமூலம், ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியை – அ.தி.மு.க. என்ற பெரிய (தமிழ்நாட்டில்) கட்சியைத் தங்களது அரசியல் கூண்டுக்குள் (சாக்கில்) அடைத்து, சவுக்கெடுத்த ரிங் மாஸ்டர் போல பா.ஜ.க. தனது வெகுநாளைய ஆசையான, தமிழ்நாட்டைக் காவி அரசியல் மண்ணாக்கிட 'வியூகம்' வகுத்துக் களம் இறங்கி, வடக்கே செய்த வித்தைகளைக் கையாண்டு பார்த்தது.
இது தந்தை பெரியாரின் பகுத்தறிவு – சுயமரியாதை மண் ஆகும்.
இதில், ஜாதி, வர்ணாசிரமப் பாதுகாப்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ேஸா, அதன் அரசியல் அமைப்போ ஆழமாக ஒருபோதும் காலூன்றிவிட முடியாது என்பது பட்டாங்கமான சுவரெழுத்து.
கூடாரத்தில் நுழையும் ஒட்டகம்!
வட மாநிலங்களில் அமித்ஷா போன்றவர்கள் கையாண்ட வித்தைகளும், வியூகங்களும் இங்கே செலாவணி ஆகாது!
அந்தக் கட்சித் தாவல் எம்.எல்.ஏ.,க்கள் ''ஆயாராம் காயாராம்'' பாடிக்கொண்டே முதலில் கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம், பிறகு கூடாரத்துக்காரர்களையே வெளியே துரத்திவிட்டு, கூடாரத்தைத் தனதாக்கிக் கொண்ட பழமொழி – தத்துவப்படி நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது இங்கே ஒருபோதும் பலிக்காது!
சென்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த 4 உறுப்பினர்களின் எண்ணிக்கையாவது, இம்முறை கிடைக்குமா? என்பதே சந்தேகந்தான்! கட்சிகளைப் பிளந்து, ''விபீடணர்களையும், சுக்ரீவன்களையும்'' தங்கள் வசம் – ஆசைகாட்டியோ, பயமுறுத்தியோ ''திரிசூல'' அரசியலை எல்லாம் பயன்படுத்தியோ, களம் காண ஆயத்தமாகிய நிலையில்தான், பா.ஜ.க.வின் தலைமைத் தேர்தல் பிரச்சாரகரையே முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, அரசியல் ஆலாபனக் கச்சேரி செய்துள்ளனர்!
ஆனால், அவரது அணியோ, பரிதாபத்திற்குரிய கூட்டணியாக மேடையை ''அலங்கரித்தது!'' மாநிலத் தலைவர் மீதே 4 கோடி ரூபாய் தேர்தல் வழக்கு நிலுவை!
பிரதமர் மோடி பேசிய கூட்ட மேடையில், கூனிக் குறுகி உட்கார்ந்தோர் எத்தகையவர்கள்?
வழக்கில் சிக்கிக்கொண்டோர், வெளியே வருவதற்கு வழி தேட முனைவோர், வழக்கில் சிக்கி விடக்கூடாதே என்று கவலையோடு, முகவரி இழந்து முகாரி பாடிய சிலர், தனது பேச்சுகள் தன்னையே வறுத்தெடுக்கும் என்ற நிலையில்,
''ஆசை வெட்கமறியாது' அச்சுறுத்தலால் பணிவு வேறு வழியறியாது'' என்பதால்,
'சரணம்', 'சரணம்', 'காவிச் சரணம்' என்று மேடையில், கூனிக் குறுகி, 'தம் நெஞ்சே தம்மைச் சுடும்' என்று அமர்ந்திருந்தனர் சிலர்.
சென்ற முறை இருந்த கட்சிகள்கூட, அந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முழுமையாகக் கூட இல்லை. வெடிப்புகள், சுவர் போல ஒன்று சேர்ந்து, மகிழ்ச்சியில்லாத ஒரு கூட்டணிக் காட்சியாகவே இருந்தது.
பேசிய பிரதமர் மோடி 45 நிமிடங்களில், முன்பு அரைத்த மாவையே அரைத்தார்; இதனால் அவர்களுக்கு எந்த உருப்படியான அரசியல் அறுவடையும் கிடைக்காது!
மழையிலே நனைந்து ('சாவி'யான) நெற்கதிர்கள் மூலம் என்ன கிடைக்கும்? அதைத்தான் அவர்கள் தங்கள் அரசியல் களத்து மேட்டு அறுவடைப் பயனாகப் பெற முடியும்?
ஒரு என்ஜினால் இழுக்க முடியாதோ!
'டபுள் என்ஜின்' என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தால், ஒரு எஞ்சினால் இழுக்க முடியாது போனதாலோ என்னவோ அப்படி ஒரு சொல்லாடல்!
ஆனால், தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அமைதி, வளர்ச்சி என்பன வட மாநிலங்களில் இருக்கும் 'டபுள் என்ஜின்'கள் - பா.ஜ.க. அரசுகள் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று, உலகப் பாராட்டைப் பெற்று வலம் வருகின்றன!
தமிழ்நாட்டு மக்கள் தெளிவும், உறுதியும் பெற்று, பலனடைந்தவர்கள், நன்றியை மறக்காதவர்கள் என்பதால்,
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சுருக்கென்று சொன்ன 'டப்பா என்ஜின்'களால் பிரச்சாரம் வெறும் பெருவெளிக் கூத்தாகவே முடிவது உறுதி!
எவ்வளவு 'மத்தாப்பு – வாண வேடிக்கைகளை'க் காட்டினாலும், தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டு, தி.மு.க. கூட்டணி என்ற கொள்கைக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்ற முத்திரைப் பதிப்பார்கள் என்பது முக்காலும் உண்மையே!" என்று தெரிவித்துள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
- மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். பாணியில் பிளவுப்படுத்தும் அரசியலை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வழியான அதே பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு அதரவு தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறியதாவது:-
UDF ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் என்று சி.பி.எம். தலைவர் ஏ.கே. பாலன் கூறிய கருத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரிக்கிறார். அதேவேளையில் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் காசர்கோடு நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதத்தை பற்றி அமைச்சர் சஜி செரியன் குறிப்பிடுகிறார். கேரள மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்று எந்த உறுப்பினரும் வகுப்புவாதம் குறித்து கருத்து தெரிவித்ததில்லை. வெற்றி பெற்றவர்களின் மதத்தை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மாநிலத்தின் முக்கிய மதிப்பை அழித்துவிடும். மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது. பினராயி விஜயனும் தானும் ஒரு நாள் நினைவுகளாகிவிடுவார்கள், ஆனால் கேரளா தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிபிஐ(எம்) கட்சி கேரளாவின் அடித்தளங்களையே எரித்துக்கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு கொடூரச் செயலாகும். வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அநீதியை இழைத்துவிடாதீர்கள்.
இவ்வாறு சதீசன் தெரிவித்தார்.
- ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது.
- 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும்.
கடந்த சிலநாட்களாகவே காங்கிரஸின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உள்கட்சி மோதலுக்கு வழிவகுத்து வருகிறது. சசி தரூர், திக்விஜய சிங் ஆகியோரை தொடர்ந்து தற்போது காங்கிரஸின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கனிமொழி பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன்நிலுவை தொகை அதிகமாக இருக்கிறது என அவர் கூறிய கருத்து தற்போது இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் பிரவீன் சக்ரவர்த்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸும் தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.
60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.
'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.
'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலிமைகளை பாராட்டி திக் விஜய் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் தலைவர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.
தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார். இது பேசும்பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக திக் விஜய் சிங்கை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். என்பது வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. அது வெறுப்பைப் பரப்புகிறது. வெறுப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்-கொய்தா ஒரு வெறுப்பு அமைப்பு. அது மற்றவர்களை வெறுக்கிறது. அந்த அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 140 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்தது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பு வெறுப்பு அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
- அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.
அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
- பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போதிலிருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? அதுபோல இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள்; இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு.
நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் நாடு ஒரு இந்து நாடு. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படி ஏதாவது (முஸ்லிம்களுக்கு எதிராக) நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். (ஆர்எஸ்எஸ் பற்றி) புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்தார்.
- வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது
- பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று கூறி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிறுத்தினார். சீமானின் இந்தப் பேச்சை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எல்லாம் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை எனக்குறிப்பிட்டு, சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக த.மு.எ.க.ச வெளியிட்டுள்ள பதிவில்,
"பாரதியார், காந்தியடிகள், நேரு உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமைகளை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறுகிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்தவர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால் நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால் முற்போக்காளர்களாக அறியப்பட்ட சில பெரியாரியவாதிகளின் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சரியான செயல் ஆகாது.
எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்ப்பதும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மன்னரின் அதிகாரத்திற்கு எதிராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமாயணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரசும், அதன் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிரான மனோநிலையோடே தான் விரும்பும் தேசத்தை கற்பனையில் 'அயோத்தி' என்று எழுதிப்பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதையும் அவர் தன் வாழ்நாளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத்திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார்.
பாரதியின் எழுத்துக்களில் ரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனின்-ஐ விமர்சித்தார். காரணம் 100ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மையில் தாண்டியுள்ள ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதினார். ஆனால் அதன் பின் ரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனின்-ஐ தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷெவிக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார்.
பாவேந்தரை பாரதி முதன் முதலில் பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்து பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா? தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் பிறந்த சாதியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும்.
பொய்யயை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. வலதுசாரிகள் எல்லா ஆளுமைகளையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. இந்தச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமைகளை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும்.
சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசாமல், அதை மைய அரசியலாக கொண்டுவராமல் வலதுசாரிகள் எப்படி திசைதிருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்த வித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது.
வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவைகளை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
- காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும்.
நேற்று மக்களவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்கும் ஜனநாயக நிறுவனங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும். இந்தியா 1.5 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நெய்த துணியைப் போன்றது, வாக்குகள் இல்லாமல், இந்த நாட்டில் எந்த நிறுவனங்களும் இருக்காது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருவதாக கூறினார்.
ஆர்எஸ்எஸ் குறித்து ராகுலின் பேச்சைக் கேட்ட பாஜக வரிசை எம்பிக்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் தேவையில்லாததை பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்தார்.
- உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
- இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.
இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
"உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
"தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.






