என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரவீன் சக்ரவர்த்தி"

    • தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.
    • கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

    கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.

    * தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான்.

    * தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் எந்த பிரச்சனையுமே இல்லை.

    * கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

     * விஜயின் பிரசாரத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகின்றனர். அதில் இருந்து மக்களின் எண்ணம் தெரிகிறது.

    * அது ஒரு சக்திதான். அதை யாராலும் மறுக்கவே முடியாது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டில் அரசியல் சக்தியாக உருவாகி விட்டார்.

    *  அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இது காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது
    • ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது.

    'நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்திக்கு பதிலளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது

    இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது.

    நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது.

    நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, உத்தரப்பிரதேசத்தின் நிலுவைக்கடன் தொகையை விட தமிழ்நாட்டின் நிலுவைக்கடன் மதிப்பு அதிகம் என தெரிவித்திருந்தார். 

    • ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது.
    • 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும்.

    கடந்த சிலநாட்களாகவே காங்கிரஸின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உள்கட்சி மோதலுக்கு வழிவகுத்து வருகிறது. சசி தரூர், திக்விஜய சிங் ஆகியோரை தொடர்ந்து தற்போது காங்கிரஸின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கனிமொழி பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன்நிலுவை தொகை அதிகமாக இருக்கிறது என அவர் கூறிய கருத்து தற்போது இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இவரது கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் பிரவீன் சக்ரவர்த்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸும் தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், 

    'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.

    60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.

    'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.

    'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×