என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது
    • தவெக, என்.ஆர். காங்கிரஸ் இடையே உருவாகும் புதிய கூட்டணி?

    புதுச்சேரியில் தற்போது பாஜக, என்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

    இந்நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம். புதுச்சேரி வளர்ச்சி குறித்து பாஜக செயல் தலைவர் நிதின் நபீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்" என தெரிவித்தார்.  

    முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா , புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதலமைச்சருடன் வழிபட்டனர்.

    • நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
    • புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.

    நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.

    • புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
    • தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

    இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.

    தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
    • எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25-ம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    ரூ.57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீத தொகையை இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே அதற்கான தொகையை ஏற்கும்.

    இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பொது போக்குவரத்தை மேம்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.

    மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் பஸ்களை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவும் மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

    புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

    எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.

    பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    • வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.

    புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    • புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
    • காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.

    பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.

    அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.

    புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.

    இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.

    • புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்
    • லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.

    தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்

    நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது

    கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.

    இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.

    தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ள சார்லஸ் மார்ட்டின், அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.

    இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.

    இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.

    பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

    இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.

    இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.

    • விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.

    மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.

    • புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது.
    • எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

    டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கள், எஸ்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநில காவல்துறை 2 நிலைகளில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கி கடைபிடிக்க வழிமுறைகள் வகுத்தது. புதுச்சேரி மாநிலம் 90 நாட்களுக்குள் 80 சதவீத குற்றபத்திரிகையை தாக்கல் செய்து இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் பிரிவில் கேரளா, புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி புதுச்சேரி அரசை பாராட்டியுள்ளார். அகில இந்திய அளவில் பாகூர் போலீஸ் நிலையம் 8-ம் இடம் பிடித்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.

    பாகூர் போலீஸ் நிலைய போலீசார் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். வாரந்தோறும் காவல் துறையினர் மக்கள்மன்றம் நடத்தி குறைகளை தீர்த்து வருகின்றனர்.

    இதுவரை 10 ஆயிரத்து 866 புகார் மனு பெற்று 98 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த டி.ஜி.பி., ஐ.ஜி. மாநாட்டில் புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் மன்றத்தை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் இதை நடத்த அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் புதுச்சேரி மாநிலத்துக்கு கவுரவம் அளித்துள்ளார்.

    புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் போது த.வெ.க. நிர்வாகிகளிடம் எனது வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள் என்று ஆவேசமாக பேசியவர் ஆவார். இவரது இந்த ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
    • தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.

    இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.

    தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.

    இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

    புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

    • சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
    • 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

    டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.

    இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×