search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry"

    • கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    • மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.

    ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.

    மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    • ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது.
    • மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் மூகத்துவாரத்தில் உள்ளது.

    ஆந்திர பகுதியில் தொடர் கன மழை பெய்தால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும்.

    இருப்பினும் ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு, முன்னெச் சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜீவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் ஏனாமில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.

    கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட வில்லை.

    அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறை களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கு துறையும் வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன.

    மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும், மரங்கள் விழுந்தாலும் மழையில் சிக்கினாலும் அவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளதாக மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார். 

    • 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை இருந்தார்.
    • விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஜார்க்கண்ட், தெலுங்கானா கவர்னரான சி.பி.ராதா கிருஷ்ணன், புதுச்சேரிக்கும் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு முதல் புதுச்சேரிக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு கவர்னர்கள் தான் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதேபோல கேரளா கவர்னர் ஆரீப்முகமதுகான் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    இதோடு புதுச்சேரிக்கும் தனியாக நிரந்தர கவர்னரை நியமிக்கலாமா? எனவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏனெனில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர்கள்தான் புதுச்சேரியை நிர்வகித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
    • நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    புதுச்சேரி:

    தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு இன்று பிறந்தநாளாகும்.

    தனது பிறந்தநாளை புஸ்சி ஆனந்து இன்று புதுவை சின்ன மணிக் கூண்டு அருகில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார். அவருக்கு செல்போன் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுவையை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர் பிறந்தநாளை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜய் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் அவர்கள் வந்தனர்.

    புதுவை ரெயில் நிலையம் அருகிலிருந்து தமிழகத்தின் மாவட்டம் வாரியாக பேண்டு வாத்தியம், மேள தாளங்கள் முழங்க ஊர்வலாக புஸ்சி ஆனந்து வீட்டுக்கு அவர்கள் வந்தனர்.

    அங்கு அவருக்கு ஆளுயர மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சில மாவட்டங்களில் இருந்து கேக் அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரி வித்தனர்.

    கேக்கை அவர் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி னார். தொடர்ந்து பல பகுதிகளில் இருந்தும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் வருகையால் நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி புஸ்சி ஆனந்து, சின்னசுப்பராய் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    • ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.
    • மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்திருந்தார்.

    அதன்படி காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் கலெக்டராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.

    இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு நாள் கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.

    மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    • அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

    மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதியான நேற்று புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

    விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

    பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி

    பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் கடந்த 30-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பிரான்சு நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.

    தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4 ஆயிரத்து 535 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்களிக்க தகுதியுடையோர் ஆவர். இதற்காக புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்களான 4535 பேரில் 892 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் 12 வாக்குகள் செல்லாதவை. 3 வாக்குச் சீட்டில் வாக்கே செலுத்தப்படவில்லை.

    சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஜோட் பிராங்க் அதிகளவாக 542 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் 12 விழுக்காடு வாக்குபெற்று முதல் 2 இடங்களை பிடித்த 2 பேர் இடையே 2-ம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடக்கிறது.

    • கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
    • கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.

    இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.

    அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.

    இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.

    • பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின் தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வருகிறது.

    பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று காலையும் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தி ருந்தது.

    இதற்கு ஏற்றார்போல நேற்று இரவு 8 மணிக்கு மேல் பயங்கர வெளிச்சத்துடன் மின்னலும், பெரும் சத்தத்துடன் இடியும் புதுவை மக்களை மிரட்டியது.

    இதன்பின் மழையும் கொட்டத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நகர பகுதியில் பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோடியர் மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது.


    இடி, மின்னல் காரணமாக புதுவை நகரம் மற்றும் ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மர கிளைகள் விழுந்தது.

    இதேபோல நகரை ஒட்டியுள்ள புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது. சாய்ந்த மரங்களை புதுவை, கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.

    வழக்கமாக இரவு நேரத்தில் புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். ஆனால் நேற்று கடுமையான இடி, மின்னல் இருந்ததால் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இன்று காலையில் 10 மணி வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. தற்காலிக பஸ்நிலையம் சேறும், சகதியுமாகியுள்ளது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.
    • தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் கவர்னர் தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை துச்சமென நினைத்து இழிவாக பேசியுள்ளார்.

    தேர்தல் தோல்வி இவரை இப்படி பேச சொல்கிறதோ என்று எண்ணத்தோன்று கிறது.

    இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பி.க்கள்தான் இந்த பாரதத்தின் வலிமையான எதிர்க்கட்சிக்கு தூண்களாக திகழ்கின்றனர். நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் அநீதி இழைக்கப்படு கிறதோ அப்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.

    எங்கள் தலைவருடைய நாடாளுமன்ற உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்திலே மக்கள் மனதிலே நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களேயன்றி தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல என்பதை தமிழிசை புரிந்து கொண்டு இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×