என் மலர்
நீங்கள் தேடியது "Rangasamy"
- தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார்.
- சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கூட்டணிக்காக காத்திருக்கிறது. த.வெ.க.வை காட்டி காங்கிரஸ் தி.மு.க.வுடன் தனது பேரத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் த.வெ.க. உள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரசுக்கும், த.வெ.க.வுக்கும் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப த.வெ.க. பொதுச்செயலளர் புஸ்சி ஆனந்த் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய் இடையே நட்புறவு இருந்தது.
ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசின் உதவியின்றி நிர்வாகத்தை செயல்படுத்துவது கடினம். இதையெல்லாம் உணர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இதையடுத்து புதுவைக்கு 30 பேர் கொண்ட நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர். புதுச்சேரி மக்களும் அரசியல் கட்சிகளை தாண்டி அவர்களுக்கு வாக்களிப்பது வழக்கம். இதனால் தமிழகத்தை போல புதுச்சேரியில் விஜய்யை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக த.வெ.க. காலூன்றுவது கடினம்.
தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார். தமிழகத்தில் 1967-ல் தி.மு.க. முதலமைச்சராக அண்ணா துரையும், 1977-ல் அ.தி.மு.க. முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் ஆட்சியில் அமர்ந்தனர். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே 1972, 1974 என 2 முறை புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது.
அதுபோன்ற மாற்றம் ஏற்பட புதுச்சேரியிலும் த.வெ.க. காலூன்ற விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியிலும் விசில் சத்தம் ஒலிக்கும்.
- கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
- புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14-ந்தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஒரு சில தொகுதிகளை மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவைக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள்தான் இந்த சந்திப்பு நடந்தது.
இதன் பின்னர் சுரானா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதேநேரத்தில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்மல் குமார் சுரானா வெளியேறியுள்ளார்.
புதுவையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பார்கள்.
இதுபோல கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.
அதுபோல தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
- என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு.
காரைக்காலில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சட்டசபை தேர்தலில் கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
ஏற்கனவே, பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது மற்றும் பா.ஜ.க மற்றும் என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
- காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பள்ளி கல்வி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அவசியம். அதற்காக காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 37 பேர் மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். இது மட்டுமின்றி என்ஜினீயர், செவிலியர் கல்லூரி என அனைத்து கல்லூரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.
இப்போது மாணவர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப் கொடுத்தால் எளிதாக இருக்கும் என என்னிடம் கேட்டனர்.
எனவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
- ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் நிதி ஆண்டான 2026-27க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக புதுவை சட்டசபை இன்று கூடியது. சபையில் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு மூலம் இடைக்கால பட்ஜெட்டுக்கு சபையின் ஒப்புதல் பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய அரசு அமையும். புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
புதுவை சட்டசபையில் 2025-26ம் நிதி ஆண்டிற்கான அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவு அறிக்கையை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் துணை கொடையாக கோரினர். ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி இந்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற்றார்.
- தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார் எதிர்க்கட்சி தலைவர் சிவா.
- மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்துவோம் ரங்கசாமி பேச்சு.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது.
ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.
மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார்.
இத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என கூறினார்.
- பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
- வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தற்போதைய என்.ஆர். காங்.,-பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது. அதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை வரவழைத்து, அரசு விழா நடத்தி மத்திய, மாநில அரசுகள் சார்பில் மெகா திட்டங்களை அறிவிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி இன்று 12-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 14, 16 மற்றும் 21-ந் தேதிகள் அறிவிக்கப்பட்டது. பிரதமர் புதுச்சேரிக்கு வரும் தேதி உறுதி செய்யாத நிலையிலும், பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வருகைக்கு முன்பாக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேசி முடிவு செய்து பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகளை பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.
- முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
- வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருவது உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்த வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் விமான நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடு தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பிரதமரின் வருகையின்போது அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
- 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.
- 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதோடு தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக சட்டசபை கூடி அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
அன்றைய தினம் முதலமைச்சரும் நிதி அமைச்சருமானா ரங்கசாமி அரசின் 4 அல்லது 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி அன்று கூட்டப்பட்டு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கவர்னர் உரையுடன் தொடங்கிய அந்த கூட்டத்தொடர் 13 நாட்கள் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதன் 2-ம் பகுதி கடந்த செப்டம்பர் 18-ந்தேதி அன்று கூட்டப்பட்டு பேரவையின் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேற்றப்பட்டு மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளகத்தில் உள்ள பேரவைக் கூட்டத்தில் மீண்டும் கூட்டப்படும்.
அரசின் அன்றைய தினத்தில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். பேரவையில் முன்வைக்க வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அன்றைய தினம் வைக்க அரசு துறைகளுக்கு அறுவுறுத்தப்படும். மேலும் 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.
சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடிதான் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்று முடிவு செய்யும்.
அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி புதுச்சேரி வரவுள்ளார். அரசியல் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. முழுக்க அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே வருகிறார். அரசியல் கூட்டமும் அன்றைக்கு கிடையாது.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,157 கோடி. இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.86 கோடி கூடுதல் நிதியை வழங்கியுள்ளது. இதுபோல் புதுச்சேரி மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஒப்புதல் அளிக்குமாறும் அதைத் தொடங்கி வைக்குமாறும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இந்த திட்டம் ரூ.657 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு கடனாக வாங்கிக் கொள்ளுமாறும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி கொடுத்தால் போதும் என்றும் அரை பைசா வட்டியில் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு 2025 டிசம்பர் மாதமே ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர்.
- இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 226 செவிலியர் அதிகாரிகள் மற்றும் சுகாதரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் 67 மருந்தாளுநர், இ.சி.ஜி. டெக்னீஷியன், சுகாதார உதவியாளர், தியேட்டர் உதவியாளர், ஏ.என்.எம் ஆகியோருக்கு பணியாணை வழங்கும் விழா நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணியாணை வழங்கி பேசியதாவது:-
இந்த பணியாணை கொடுப்பதை பெரிய விழாவாக எடுக்கலாம். ஆனால் அதற்குள் யாரேனும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிடுவார்களோ என்ற பயம். இதனை எவ்வளவோ சிரமப்பட்டு செய்துள்ளேன். இந்த பணியாணை வழங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. துறையாக இருந்தால் கோப்பை சுத்த விடுவார்கள். பல்வேறு துறைகளுக்கு சென்று வரவேண்டும். சிரமங்கள் இருக்கும். இது சொசைட்டியாக இருந்தும் முறையாக நிரப்புவதற்கு 2 ஆண்டுகள் ஆனது.
இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் செவிலியர் பணி தேர்வில் ஊழல் என்று சில அரசியல்வாதிகள் சொல்கின்றனர். செவிலியர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஆனால் எதையாவது பேச வேண்டும் என்று பேசுகின்றனர். எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் யாரும் குறை சொல்ல முடியாத அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வேகமாக அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது. அப்போது பல சிரமங்கள் இருக்கும். இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கத்தான் வேகமாக பணி செய்து வருகிறேன். இன்னும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓரிரு நாள்களில் 190 ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்க உள்ளோம். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கிறோம். இன்னும் 100 செவிலியர் விரைவில் எடுக்க உள்ளோம். அடுத்த 2 மாதத்தில் 400 மேல்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுவை காங்கிரசார் கடந்த 21-ந் தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் புதுவை அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் முகமது யாசின், இயக்குநர் செவ்வேள், மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது.
- பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை திறப்பு விழா நடைபெற்றது.
அதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 500 ஓய்வூதியம் பிப்ரவரி 7-ந்தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 உதவித் தொகை வருகிற பிப்ரவரி 10-ந் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப்பள்ளிகளில் 190 ஆசிரியர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள்.
இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர்கள் 400 பேர் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்த உள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியார் மூலம் வேலை தரப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளையோருக்கு வேலை கிடைக்கும். மீனவ சமூக மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம்.
மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார். நிறைய திட்டங்கள் தரவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ 450 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது.
- ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






