என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry govt"

    • ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
    • முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.

    குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ்,

    * பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    * இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    * விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

    * ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.

    * விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    * முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    * தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

    இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    • பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அங்கீகாரத்துடன் பாதுகாப்பான பயணத்துக்கான 'நம்ம ஊரு டாக்டாக்ஸி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த செயலியில் நியாயமான கட்டணம், நேரடி சவாரி கண்காணிப்பு, சரி பார்க்கப்பட்ட ஓட்டுனர் சுய விவரம், 24 மணி நேரமும் உதவி மையம், எஸ்.ஓ.எஸ். பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த செயலி புதுச்சேரியில் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. பணம் அல்லது யு.பி.ஐ. கட்டண பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

    பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பயணிகளுக்கும், எலெக்ட்ரிக் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளது.

    போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.

    இந்த தகவலை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

    • ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை.
    • 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. 

    • அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சனிக்கிழமையான நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.

    • தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
    • சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.

    6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.

    15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

    மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
    • அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.

    அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.

    எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு 2003-ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வந்தது.

    மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, செயல்படுத்தியது. தொடர்ந்து மத்திய அரசு, பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்-2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தியது.

    இந்த புதிய திட்டத்தையும் புதுச்சேரி அரசு காமராஜர் வீடு கட்டும் திட்டத்துடன் ஒன்றிணைத்தது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியை உயர்த்தி அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 மூலம் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.2.25 லட்சத்துடன், புதுச்சேரி மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2.75 லட்சமும் சேர்த்து பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள வீடற்ற பயனாளிகள், தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை இணையதளமான www.tcpd.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மத்திய அரசின் இணையதளமான https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/Auth/Login.aspx மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

    உயர்த்தப்பட்ட வீடு கட்டும் நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்.

    • கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது.
    • கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேசத்தின் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி ரூ. 9 ஆயிரத்து 369 கோடி கடன் உள்ளது.

    மொத்த நிலுவை தொகையில், பெரும்பாலான தொகை வெளிசந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை ஏலம் விட்டு மாநில மேம்பாட்டுக்காக திரட்டப்பட்டது.

    ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி, வெளி சந்தை கடன்கள் மூலம் ரூ. 7 ஆயிரத்து 980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ.219 கோடி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் பெற்ற கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளடக்கம்.

    சட்டத்தின் விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடன் வரம்பு 25 சதவீதத்தை கடக்கக்கூடாது.

    நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28 சதவீதம் ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை 4-வது இடத்தில் உள்ளது.

    கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ.618 கோடியை மரபுக் கடனாக திருப்பி செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ.425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்டது.

    இருப்பினும், நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.

    அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.

    இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

    இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    • புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது.
    • மக்களுக்கான பல திட்டங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி தராத மாநில அரசைக் கண்டித்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது.

    முதலானவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டிப்பது புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காது பொது விநியோகத்திட்டத்தை அமல்படுத்தாது அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்பு கூறு நிதியை முறையாக செயல்படுத்தாதது, மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.டி. பார்க் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது, சட்டமன்றத்தில்அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்சனை, மின் கட்டணம் வசூலிப்பத்தில் பிரிபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டுவரப்படுவது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள் அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உள்ளிட்ட மாநிலம் சம்பந்தமாகன பல்வேறு பிரச்சனைகளில் பாராமுகமாக இருந்து வருவதை கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 10-ந் தேதி காலை 10 மணிக்கு கடலூர் சாலை ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்ற பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் எம்.பி. தலைமையில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சியினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×