என் மலர்
புதுச்சேரி

அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர் இல்லாததால் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து
- பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டு தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி 4 கிலோ பச்சரிசி, 1கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300கிராம் நெய், சமையல் எண்ணெய் 1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசின் கான்பெட் நிறுவனம் டெண்டர் விட்டது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று மாலை 4 மணிக்கு சண்முகாபுரத்தில் உள்ள ரேசன் கடையில் நடைபெறும் என்றும், இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அனைத்தும் எடுத்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது. பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை என துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
மேலும் அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை இடம்பெற செய்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து விட்டு விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






