என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry Assembly"
- முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர்.
- புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் இரங்கல் குறிப்பை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வாசித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர். தொடர்ந்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டமுன்வரைவு, சரக்கு சேவை வரி சட்டதிருத்த மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிகுறைப்புக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு புதுவை சட்டசபையை கால வரையின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஒத்திவைத்தார். ஒட்டுமொத்தமாக 45 நிமிடத்தில் புதுச்சேரி சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.
- சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். பேரவை முன்பு முதல்-அமைச்சர் தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார்.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முதல்-அமைச்சருடன் கலந்து பேசி சபையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
புதுச்சேரியின் மக்கள் நல பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் காரணம் என கூறவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது.
இதுதொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 நாட்களாவது சபையை நடத்துங்கள் என பேசினார். அப்போதும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சபையை தொடர்ந்து நடத்த அமருங்கள். முதல்-அமைச்சருடன் பேசி சபையை நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
இந்த நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தனது இருக்கையிலிருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையை நடத்த இடையூறாக இருந்தது. இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியகராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார்.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது.
- சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
- சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும்.
அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் எனத்தெரிகிறது. எத்தனை நாள் சபை நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும்.
- தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
- சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.
6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.
15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
- ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக தேக்கத்தை சரி செய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
- 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12-ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர். பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனல் பறந்தது. நேற்று 9-ம் நாள் கூட்டம் காலை 9.30 மணி தொடங்கியபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேச வேண்டும் என்பதால் மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
இதன்படி நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் 2.20 மணி வரை நடந்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு 10.40 மணி வரை நீடித்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10.40 மணி வரை நடத்தப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி இரவு 9 மணிக்கு சட்டசபையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் மதிய உணவு இடைவேளை 2 மணி நேரம் தவிர்த்து 11 மணி நேரம் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் இல்லை.
இதைத்தொடர்ந்து 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
இதில் 27-ந் தேதியை தவிர்த்து மற்ற 3 நாட்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கின்றனர்.
- 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
- புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
- காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது.
- அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சபையின் முதல் அலுவலாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களை பேச சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைத்தார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- புதுவையில் எத்தனை மொழிகள் உள்ளது என தெரியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- இருமொழி கொள்கைதான் வேண்டும். தமிழை எதிர்க்கிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது எப்போது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது. இந்தியை திணித்ததும் காங்கிரஸ்தான். அவர்களோடுதான் கூட்டணியில் உள்ளீர்கள்.
இதையடுத்து அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பேசினர்.
இதனால் சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தொடர்ந்து மணி அடித்து சபையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.
ராமலிங்கம் (பா.ஜ.க.): 3-வது மொழி விருப்ப பாடமாக உள்ளது. விரும்பும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம்.
அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்: கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொண்டால் அறிவு வளரும். தமிழகத்தில் தமிழ்நாடு என பெயர் வர யார் காரணம் என தெரியுமா?
ராமலிங்கம்: தமிழ்நாடு என பெயர் வர சுந்தரலிங்கனார் உயிர் நீத்தார், அதனால்தான் தமிழ்நாடு என பெயர் வந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- தமிழக முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக தமிழ்நாடு என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இது 4 ஆண்டு பா.ஜ.க.காரருக்கு தெரியாது.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: புதுவையில் இருமொழி, மும்மொழி கொள்கை இல்லை, 4 மொழி கொள்கை உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழி உள்ளது.
செந்தில்குமார்(தி.மு.க.): இது 22 மொழிகள் கொண்ட தேசம்.
அனிபால்கென்னடி (தி.மு.க.): எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: காங்கிரஸ் ஆட்சியில்தான் மொழி போர் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம்: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் எப்படி வந்தது? அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது? உங்கள் கட்சி தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுங்கள். புதுவை அரசின் கொள்கை மும்மொழி கொள்கைதான். முதலமைச்சர், கவர்னர் ஏற்றதால்தான் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழி கொள்கைதான் அமலில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் சிவா: அமைச்சரின் அராஜக பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறினார். அவருடன் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்.
- நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரை வாசித்தார். நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசி கருத்துகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே பெஞ்சல் புயல் நிவாரணம் முழுமையாக வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பன உள்பட ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
- புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
- அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்தினார்.
பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுகிறது. இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.
புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்துவருகிறார்.
தலைமைச்செயலாளருடன் இணைந்து அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம் இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
- குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.
சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
- புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.
புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
இதற்காக அனைத்து துறைகளும் முழு வீச்சில் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையொட்டி கடந்த 26-ந்தேதி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் திட்ட வரையறையாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி ரூ.3.117.17 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
இதனால் புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






