search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    • சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
    • சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே ராயகிரி வடுகபட்டி வழியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 52), லாசர் (58) ஆகியோர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் 450 கிலோ குட்கா இருந்தது. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லாசரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர்.

    சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
    • வருகிற மே 4-ந்தேதி வரை தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்ப அலை வீசி வரும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து இங்கு தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மேலும் மற்ற மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் படையெடுத்து வருவதால் விடுதிகள் நிரம்பி வருகிறது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
    • படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

    இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

    இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

    இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

    தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    • தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தை தி.மு.க. தலைமை பாராட்டி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரசார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் தி.மு.க.வை வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்த பிரசாரத்தில் காண முடிந்தது. தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். கருணாநிதியை போலவே, தொண்டர்களுடன் நம் உதயா (உதயநிதி ஸ்டாலின்) கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக்கொண்டார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8 ஆயிரத்து 465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரசார முனைகளில் 3 ஆயிரத்து 726 நிமிடங்கள் பேசியுள்ளார்.

    ஒவ்வொரு பிரசார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடி பிரசாரம் செய்துள்ளார். இந்த பிரசார கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும், தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய அரசு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்து, பிரசாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. அந்த ஒற்றைச் செங்கல் பிரசாரம் அந்த தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

    சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டும் எந்தவித தடுப்புமின்றி பிரசாரம் மேற்கொண்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மக்கள் சந்திப்பும், பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டு பதில்கள் தந்த விதமும் இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும். தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாக திகழும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
    • பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

    கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

    அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

    பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

    சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
    • தமிழகத்தில் 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    வாக்குப் பதிவின் போது மக்கள் எந்த அளவுக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும், வாக்களித்த விவரம் தோராயமாக வெளியிடப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுக்க மொத்தமாக 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    இதில் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்பதும், 2 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

    • தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை.
    • தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா சார்பில் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். ஏனெனில் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக கட்டமைப்பு இல்லை. அது உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறு குழு மட்டுமே.

    தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்த்தல், இறுதிப்பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு என தேர்தலை நடத்தி முடிப்பது தமிழக அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தான். மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.

    மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுக்க முழுக்க தி.மு.க. வினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    கோவை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக தி.மு.க. நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் நடைபெற்ற குளறுபடியில் இருந்தே இதை நன்கு உணர முடிகிறது.

    தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.

    குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் போட்டியிடும் வடசென்னை, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

    தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.

    எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக கடைசி நேரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
    • வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

    சென்னை:

    மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;

    தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

    வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

    பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

    தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!

    தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப்பற்றாளர்.
    • எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

    சென்னை:

    இன்று தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    "தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!

    உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப்பற்றாளர்.

    எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

    என்றும் மானமிகு உடன் பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    ×