என் மலர்
மதுரை
- தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார்.
- கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள்
மதுரை:
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, அனைவருக்கும் சமமான ஆட்சி, அமைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்தேன்.
தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.
நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து எடை போடக்கூடாது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தால் கூட அதிக அளவில் கூட்டம் வரும். ஆனால் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் .
மதுரையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சியில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துள்ளனர் இதற்கு தீர்வே இல்லை.
மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்சினை தீராமல் உள்ளது . மதுரை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்.
இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி போல இருக்கிறது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் அமேசான், சுமேட்டோ, சுகி போன்றவர்கள் வீடுகளில் பொருட்களை கொடுப்பது போல போதைப்பொருளும் வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவது வேதனையளிக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்ததற்கு இதுவே சான்றாக உள்ளது.
அன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். தற்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
- குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள்
- உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மதுரை:
திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த பெண் திடீரென மாயமாகி உள்ளார். பணிபுரியும் மருத்துவமனைக்கும் பெண் வராததால் அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை ஆஜார்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப்பெண் நான் உடன் பணி புரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார்.
அதற்கு நீதிபதிகள் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். காதலிக்க அல்ல. காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல ஏற்றமும் உண்டு இரக்கமும் உண்டு.
நீங்கள் விரும்பியவருடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்தவர்கள், பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை இப்படி நீதிமன்றம் வாயிலாகவா உங்களை காண செய்வது. உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம்.
மேலும் தற்போதைய கால கட்டத்தை பெற்றோர்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நீதிபதிகள் அந்த பெண்ணிடம், உங்கள் கணவருடன் சென்று உங்கள் பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என அறிவுரை கூறினார். பின்னர் பெற்றோர்கள் நாங்கள் வயதானவர்கள் எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து நீதிபதிகள், பெண் திருமணம் ஆகி அவர் கணவர் உடன் சென்று விட்டார் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது.
- இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.
மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
- பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பரங்குன்றம்:
மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
எனவே இது தொடர்பாக பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
சி.ஐ.எஸ்.எப். வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு தி.மு.க.வின் அரசாங்கமும், காவல் துறையும், ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசாங்கம் என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். தமிழக மக்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்க ளுக்கு துரோகத்தை இழைத்து கொண்டிருப்பவர் திருமாவளவன். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
- நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.
அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது.
- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். தி.மு.க. மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம். இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை. கடந்த ஆண்டு உழவர்களின் பயிர் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை. முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி மட்டும் ரூ.62 ஆயிரம் கோடி கட்டுகிறார்கள்.
தென்மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கு காட்பாதராக தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு ஒரு வரம். அந்த மழையை அழித்தொழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில இருக்கிறார்கள். உறுதியாக கனிமவள கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயன்பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதை யெல்லாம் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும் தான் தெரியும். அதைக்கூட நடத்த மாட்டேன் என்று சொல்லும் முதலமைச்சரை பார்த்திருக்கீங்களா?. அவர் தான் மு.க.ஸ்டாலின்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒரிசா, பீகார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசு உள்ளது. தமிழ்நாட்டில் சமூக அநீதி தான் உள்ளது. இவர்கள் பெரியாரின் பெயரை சொல்ல தகுதி இல்லாதவர்கள்.
சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கணக்கெடுப்பு நடத்த என்ன பிரச்சனை.
தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை தி.மு.க. அரசு பரப்பி வருகிறது. நான் அது தொடர்பாக ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி கிடைத்து உள்ளது என்று பொய்யை முதலமைச்சர் சொல்லி வந்தார். தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8 சதவீதம் தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ரூ.ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்து உள்ளார்கள். ஆனால் தி.மு.க.வினர் பொய் சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறிடித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்று கூட்டணி குறித்து எதுவும் என்னால் பேச முடியாது. ஆனால் நிச்சயமாக பெரிய கூட்டணி முடிவாகும்.
ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது இதுதான் எனது நிலைப்பாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது.
- ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவை கமிட்டி அமைத்து நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு கடந்த 21-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெறும் என தர்கா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது. இந்நிலையில் தர்கா தரப்பில் அச்சிடப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில் கந்தூரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட கூடாது என்றும் அதற்கான தீர்வை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்கா தரப்பில் இதுவரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த வருடம் கந்தூரி நடைபெறும் என்றும், அதற்காக மாவட்ட நிர்வாக தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது எனவும் செய்தித் தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஏற்கனவே மூன்று நீதிபதிகள் மரபு கந்தூரி விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
- ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. சார்பில் கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை. நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யவில்லை.
அதேபோல கடந்த நான்கரை ஆண்டு காலம் மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல 10 லட்சம் மடிக்கணினியை வாக்கு வங்கி உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஒரு சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அடித்தளம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதிலே அடிப்படைக் கல்விக்கான பள்ளிகளில் நாம் சரியான அடித்தளம் அமைத்தால்தான் சரியாக இருக்கும்.
இன்றைக்கு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து தொழிற் கல்வியில் ஒரு சகாப்தம் படைத்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு வாக்களிக்கிற உரிமை உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசு மடிக்கணினி வழங்க அக்கறை செலுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலே நாம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்காக அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 46-வது வார திண்ணை பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையான கூட்டணி வெல்வது நிச்சயம் என்று கூறினார்.
- தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
- தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை மற்றும் தமிழகத்தின் முக்கியப் பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ஆதியோகி ரத யாத்திரை நேற்று (25/12/2025) மதுரையை வந்தடைந்தது. அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென்கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.
அந்த வகையில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தென்மண்டல யாத்திரை தேனி வழியாக இன்று மதுரையை வந்தடைந்தது. நேற்று (டிசம்பர் 25) முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரதம் பயணிக்க உள்ளது.
மதுரையில் ஆதியோகி ரதம் ஜங்ஷன், அண்ணா நகர், பி.பி.குளம் போன்ற முக்கியப் பகுதிகள் வழியாக பயணிக்க உள்ளது. குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், செல்லூர் திருவாப்புடையார் மற்றும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள் வழியாக செல்ல உள்ளது.
மதுரையை தொடர்ந்து, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் இந்த ரத யாத்திரை தொடர உள்ளது. அதனைத் தொடர்ந்து டிச'31-ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ளது.
பின்னர் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தென்காசி, சுரண்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கூடங்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாகப் பயணிக்கும் இந்த ரதமானது, பிப்ரவரி 1 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, நாட்டாலம், மார்த்தாண்டம், மேல்புறம் மற்றும் புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகப் பயணிக்க உள்ளது.
ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகச் சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.
இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாகக் கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.
- திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார்.
- தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டினை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த்(வயது 25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் திருமணத்தினை அனிதா வீட்டில் ஏற்கவில்லை. அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனிதா பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் 2 தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பினர்.
திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். இதில் கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இவர்களின் தகராறினை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வம் அவரது பேத்தியை அழைத்து கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்தநிலையில் இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அஷ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பியோடிவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அதே நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியாரின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கபணம் 2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுத்தார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மகன் கௌசிக் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
- கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.
ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.






