search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai"

    • யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
    • மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஒருவருக்கு செல்போன் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதேபோல் பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி காம்பஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் வேலம்மாள் பள்ளி அருகிலேயே மருத்துவக்கல்லூரியும் அமைந்துள்ளது.

    அடுத்தடுத்து வந்த தொடர் மிரட்டலையடுத்து மூன்று பள்ளிகளுக்கும் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 6 தனியார் பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்பேரில் மேற்கண்ட அந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை மாநகரில் அதிகாலையில் செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் 9 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வரை மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தொடர்பான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த பள்ளிகளுக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சென்றிருந்தனர். தகவல் கிடைத்ததும் பள்ளிகளுக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    • செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.

    ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது. 

    • 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்த விழா நான் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதிலும், 72 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு வினருக்கு கடனுதவி வழங்கியதிலும் இடம் பிடித்துள்ளது.

    மதுரை என்றாலே அமைச்சர் மூர்த்தி, மூர்த்தி என்றாலே மதுரை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். இன்று நடைபெறும் விழாவில் 12 ஆயிரத்து 307 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு ரூ.108 கோடியில் கடனுதவியும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.


    கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நான் மதுரையில் தான் தொடங்கினேன். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டேன்.

    அவர்களும் வாக்களித்து எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி மாணவர் என்றால் தேர்வு நடத்தியும், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாட்டுத் திறன் மூலமாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

    தேர்தல் என்றால் வாக்காளர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வெற்றியின் அடிப்படையில் அரசின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

    அந்த வகையில், திராவிட மாடல் அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விதமாக பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை 40-க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்து இன்னும் எங்களை கூடுதலாக உங்களுக்கு உழைக்க நிர்பந்தித்து உள்ளீர்கள்.

    தமிழ் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் இன்று நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிகளவில் வந்துள்ளார்கள்.

    அரசின் சேவைகளை நீங்கள் தேடிச்சென்ற காலம் மாறி இன்று உங்களை தேடி அரசின் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


    கடந்த காலத்தில் ரூ.30 ஆயிரத்து 75 கோடி என்று இருந்த வங்கி கடன் இணைப்பு தற்போது ரூ.35ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.17 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி உள்ளது.

    31 ஆயிரம் மகளிர் குழுவைச்சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ரூ.290 கோடி கடன் வழங்கியிருக்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

    ஆனால் இன்றைய விழாவின் மூலம் வீட்டுமனை பட்டா பெற்ற 12 ஆயிரம் பேரும் இனிமேல் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம். உங்களின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.

    2-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் 520 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் மட்டும் 21 கோடி பேர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காலை உணவுத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேரும், மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பேர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். மதுரையில் மட்டும் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த உரிமைத்தொகையை பெறுகின்றனர்.

    இதேபோல் உயர்கல்வியில் தமிழக முதலிடத்தை பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்கள், மகளிர் குழுவினர் அரசின் சாதனைகளை பிறருக்கும் எடுத்துக்கூற வேண்டும். மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டது வெறும் கடன் அல்ல.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. இந்த கடன் உதவியை கொண்டு மகளிர் குழுவினர் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசும், முதல்-அமைச்சரும் துணை நிற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
    • தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
    • தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-

    தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

    என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.

    மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • மதுரைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட இறைச்சி மாயம்.
    • 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல்

    சென்னை

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    5 நாட்களுக்கு முன்னர் வெட்டப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில் வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை மடக்கி வைத்து ரெயிலில் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே ஒரு கண்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி மாயமாகி உள்ளது. 30 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டிகள் அனைத்தும் மாயமாகி உள்ளது.

    அவை சென்னை வருவதற்கு முன்பே ரெயில் பெட்டியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கெட்டுப்போன இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சில்லரை விலையில் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜஸ்தானில் இருந்து இறைச்சியை கடத்தி வந்த கும்பல் இதுபோன்று பலமுறை கெட்டுப்போன இறைச்சியை எடுத்து வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு ஒரு கிலோ இறைச்சி ரூ.500 என நிர்ணயம் செய்து விற்பனை செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து சென்னையில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை மாநகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது அசைவ உணவு பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஓட்டல் உணவுகள் ஆபத்தாவை

    தானோ? என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகிறது.

    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் விதிகளை மீறி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    முள்ளிபள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை ஆக்கிரமித்து 128 வீடுகள் கட்டப்பட்டுள்ள தாகவும், இதனை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் அகற்றக் கூடாது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராதா முத்துக் கிருஷ்ணன், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் 4 ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    வீடுகளை இடிக்கும் போது அந்தப்பகுதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை 1.2 கிலோ மீட்டரில் கட்டப்பட்டிருந்த 128 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும். நாளையும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுமார் 50 ஆண்டுகாலம் குடியிருந்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் அந்தப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் காணப்பட்டனர். தொடர் ந்து முள்ளிப்பள்ளத்தில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
    • நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும்.

    சென்னை:

    மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இரவில் ஒளிரும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,

    தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!

    சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!

    இவற்றைப் போலவே, நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
    • பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    அலங்காநல்லூர்:

    மதுரை தல்லாகுளம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகன் காதர் இஸ்மாயில் (வயது 29). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் முருகன், ராஜா உசேன் ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் காதர் இஸ்மாயிலின் நண்பரான சரவணக்குமார் என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சசிகலா (24) என்பவரை காதலித்து வருகிறார். நேற்று சசிகலாவுக்கு பிறந்த நாளாகும். இதனை கொண்டாடுவதற்காக அவரது தோழிகளான சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வினோதினி, அண்ணா நகரை சேர்ந்த பபிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    இதையடுத்து தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர். அந்த காரில் அவர்களுடன் பரவை பொற்கூடல் நகரை சேர்ந்த முருகன் (32), கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்த ராஜா உசேன் (24) ஆகியோரும் சென்றிருந்தனர். தனது காதலி பிறந்த நாளுக்கு முருகன், ராஜா உசேன் சென்றதை அறிந்த சரவணக்குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    இதற்கிடையே டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் ஆகிய இருவரும் சரவணகுமாரின் காதலியான சசிகலாவுடன் மதுரை-நத்தம் சாலையில் காஞ்சாரம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சென்றிருந்தனர். இதையடுத்து சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு காதலி சென்றிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

    முன்னதாக டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததோடு, சசிகலா மற்றும் அவரது தோழிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சரவணக்குமார், அவர்களை தட்டிக்கேட்டதோடு, என்னுடைய காதலியை நீ ஏன் காரில் அழைத்து வந்தாய் என்று கேட்டு வாக்கு வாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக காதர் இஸ்மாயிலும் முருகனை தட்டிக் கேட்டார்.

    இந்தநிலையில் உணவகத்தை பூட்ட வேண்டும் என்று கூறிய அதன் நிர்வாகத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். அதே சமயம் பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரையொருர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர் இஸ்மாயிலை சரமாரியாக குத்தினார்.

    தடுக்க சென்ற சரவணக்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே காதர் இஸ்மாயில் பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணுக்காக நடந்த மோதலில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.

    இந்த விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இன்று இரவில் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும்.

    நாளை தீர்த்தவாரி, 23-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.

    • எம்.பி. சு வெங்கடேசன், கேரள எம்.பி A.A. ரஹீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி மற்றும் சில கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.

    மதுரையில் நேற்று ஜூலை 14, 2024 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காந்தி அருங்காட்சியகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு(DYFI) மாநில குழு சார்பாக நடத்தப்பட்ட 'காதலைப் போற்றுவோம்'என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மதுரை எம்.பி. சு வெங்கடேசன் உள்ளிட்ட பல கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆணவக் கொலை உள்ளிட்ட பல காரசாரமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நிகழ்ச்சியில் பேசிய மதன் கௌரி, ஓட்டுப் போட்டாலும் போடாமல் விட்டாலும், நியாய தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் கம்யினிஸ்டுகள் என்று புகழாரம் கூறினார். மேலும் மதுரையின் ஒரு சிறப்பம்சமாக காசு கொடுக்காமல் தேர்தலில் நின்ற எம்பியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் என்று கூறினார். நாம் தெய்வமாக வணங்கும் மீனாட்சி அம்மன் கூட இமயமலை சென்று அங்கு ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்ததாகவும், மீனாட்சி அம்மன் அப்போதே சாதியை எதிர்த்து உள்ளார் என்பதையே காட்டுவதவாத தெரிவித்தார்.

    கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம். ஆனால் இன்னும் ஆங்கிலத்தில் 'ஹானர் கில்லிங்' என்றே கூறப்பட்டு வருகிறது, அதில் பெருமை எதுவும் இல்லை. என்னுடைய சேனலில் ஆணவக் கொலைகளை நான் குறிப்பிடும் போது இனி 'அடாசிட்டி கில்லிங்' என்றே கூறுவேன், அது ஆணவக் கொலைகள் தான், கௌரவக் கொலைகள் கிடையாது என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    மதுரை:

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது., பெருந்தலைவர் காமராஜர் சிலையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் ரூ.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.?

    சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.?

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.

    சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் 2-வது இடம் பெற்றோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதியை வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடவில்லை என தான் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.

    நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டுக் கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம், கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தார்கள். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?

    குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்.

    மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை"

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில் தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×