என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

    தெற்கு டெல்லியில் உள்ள டைக்ரி பகுதியில் நேற்று மாலை நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு ஷூ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பெண்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் சதேந்தர் என்ற ஜிம்மி (38) மற்றும் அவரது சகோதரி அனிதா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

    காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றன.   

    • ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • இந்தக் குடியிருப்பில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

    தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்னும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
    • ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.

    அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

    பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

    அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.

    இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மின்சார கம்பிகளில் தீப்பற்றியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு வணிக வளாகமாகும்.

    இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிஃப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

    மாலில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்கச் சென்றவர்கள் வெளியே காத்திருக்கின்றனர்.

    • இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
    • மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.

    டோக்கியோ:

    ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    • ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
    • ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.

    மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
    • ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரிவிடி மண்டலம், கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்தனர். பின்னர் மொட்டை மாடியில் விளக்கேற்றி வைத்தனர். அந்த விளக்கின் மேல் பகுதியில் தூக்கி செல்லும் வகையில் கம்பி இருந்தது.

    அங்கு வந்த ஒரு காகம் விளக்கை தனது கால்களால் அலேக்காக தூக்கி சென்றது. அதை ஒரு குடிசை வீட்டின் மீது போட்டது. இதனால் வீடு தீப்பிடித்தது. அருகே இருந்த மேலும் 3 குடிசை வீடுகளும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

    குத்தகை விவசாயியான கோபி என்பவரது வீடு முழுமையாக எரிந்தது. அவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் தங்க நகைகளும் எரிந்தன.

    தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர். அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

    தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
    • பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்தனர். பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பஸ்சின் மீது விழுந்தது.

    இதில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. தீ மளமளவென பரவிய நிலையில் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென பரவியதில் 2 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே, கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபோல் தொடர்ந்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளர்.

    • தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..

    தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.

    அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
    • அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.

    பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.

    இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.

    பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். 

    ×