search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai railway station"

    • ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர்.
    • தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.

    மதுரை:

    சென்னையில் அருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறினார். நீண்ட நேரமாக கைக்குழந்தை பசியால் அழுவதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினர்.

    இதனையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியவுடன் அவரை பின்தொடர்ந்து சில பயணிகள் சென்றனர். ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலோ என்ற அச்சத்தில் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குழந்தையுடன் வந்த பயணியை பிடித்து சக ரெயில் பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கி வந்தது தெரிந்தது.

    இதனையடுத்து அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து மனைவியிடம் குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. பலர் பாட்டில் மூலமாக பால் கொடுத்தபோதும் குழந்தை பால் அருந்தவில்லை. தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.

    இதற்கிடையே ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர். அப்போது அங்கு வந்து கோவை செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்தார்.

    கோவை செல்லும் ரெயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் குழந்தையின் அழுகையை உணர்ந்து தாயுள்ளத்தோடு வந்து பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி குழந்தையின் பசியாற்றினார். பசியால் பல மணிநேரம் அழுத குழந்தைக்கு கருணையோடு தாய்ப்பால் புகட்டிய பெண்ணை பலரும் பாராட்டினர். மேலும் பயணிகள் சிலரும், ரெயில்வே போலீசாரும் அவருக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

    • இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன.
    • மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன.

    மதுரை:

    மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் அருப்புக் கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் புதிய மின்மயமாக்கல், ரெயில் பாதை இணைப்புகள், சைகை மின்னணு கைகாட்டி, காலி ரெயில் பெட்டிகளை ரெயில் நிலையத்தில் இருந்து எடுத்து செல்ல தனிப்பாதை அமைப்பு, ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, புதிய நடைமேடை, நடைமேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. அவை நேற்றுடன் முடிந்தன.

    எனவே ஏற்கனவே மதுரை வழியாக சென்று வந்த அனைத்து ரெயில்களும் இன்று(8-ந்தேதி) முதல் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 65 பயணிகள் ரெயில், 10 சரக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் ரெயில்கள் பாதுகாப்பாக இயக்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் 75 செ.மீ. அகல கணிப்பொறி திரைகள் நிர்மானிக்கப்பட்டு உள்ளன.

    இதில் ரெயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல், ரெயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. எனவே நிலைய அதிகாரி கணிப்பொறி "மவுஸ்" மூலம் ரெயில்களின் பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம். அதேபோல் எந்தெந்த பாதைகளில் ரெயில்கள் உள்ளன? என்பதையும் தெளிவாக அறிய இயலும்.

    தென்னக ரெயில்வேயில் மதுரை ரெயில் நிலையத்தில் தான் அதிக அளவில் 385 ரெயில் பாதைகள், 88 ரெயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் கடந்த 2012-ம் ஆண்டு மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேனி அகல ரெயில்பாதை தொடக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் சமீபத்தில் இணைப்பு பணிகள் நடந்தபோது, அதில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நிலைய அதிகாரிகள் விரைவாக முடிவு எடுத்து ரெயில்களை தாமதம் இன்றி பாதுகாப்புடன் இயக்க முடியும்.

    திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி-நெல்லை மற்றும் செங்கோட்டை-புனலூர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் தினமும் அதிக ரெயில்கள் கடந்து செல்லும் நிலையமாக திகழ்வது வாடிப்பட்டி ரெயில் நிலையம். தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக வெளி மாநிலங்கள், வெளி ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.

    மேலும் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகா, அஸ்ஸாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் டிராக்டர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதே போன்று வடமாநிலத்திற்கு டிராக்டர்கள் ஏற்றி செல்வதற்காக சரக்கு ரெயில் ஒன்று 24 பெட்டிகளுடன் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 1.20 மணியளவில் மதுரை ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த ரெயிலின் நடுப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

    மேலும் தடம்புரண்ட பெட்டிகள் நடைமேடையில் மோதியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். நடைமேடையில் ரெயில் பெட்டிகள் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

    முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன. பின்பு மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் இழுவை என்ஜின் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டன.

    மீட்பு பணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான ரெயில்கள் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு பிறகே மதுரையை கடந்து செல்லும்.

    மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதால் அந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    3-வது நடைமேடையை தவிர மீதமுள்ள நடைமேடைகள் வழியாக ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இதனால் அனைத்து ரெயில்களும் காலதாமதமாக மதுரையை கடந்து சென்றன.

    சென்னை-கொல்லம், பெங்களூரு-நாகர்கோவில், கோவை-நாகர்கோவில், சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

    தடம்புரண்ட ரெயில்பெட்டிகள் பிளாட்பாரத்தில் மோதியதால் அவை சேதமடைந்தன. அதே போல் பெட்டிகள் மோதியதில் பிளாட்பாரமும் சற்று சேதமடைந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தொடங்கி மீட்பு பணி இன்று காலை 5.50 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.

    மதுரை ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சரக்கு ரெயிலின் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கூடல்நகர் பகுதியில் இதே போன்று சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது. * * * தடம்புரண்ட சரக்கு ரெயில் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. * * * சேதமடைந்த ரெயில் பெட்டிகள். * * * தடம்புரண்ட ரெயில் பெட்டி நடைமேடையில் மோதி நிற்கும் காட்சி.

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியால் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts

    மதுரை:

    இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

    இதையடுத்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி தமிழகத்தில் விமானநிலையம், வழிபாட்டு தலங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இலங்கை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க தமிழக கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். கடல் பாதுகாப்பு குறித்து கடலோர காவல் படை டி.ஐ.ஜி. ராமேசுவரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரையில் கடந்த 2 நாட்களாக முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 5 கோபுர நழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மதுரை விமான நிலையத்தில் மத்திய படை போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாகம், தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று சோதனை நடத்தினர்.

    மேலும் மதுரையில் இருந்து புறப்படும் ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #SrilankanBlasts

    மதுரை ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரெயில்கள் பராமரிப்பின்றியும், சுகாதார மின்றியும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

    இது குறித்து பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இது குறித்து ரெயில்வே பணியாளர்களிடம் கேட்ட போது, மதுரை ரெயில் நிலையத்தில் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் கதவுகள் பூட்டப்படுவதில்லை.

    எனவே காதல் ஜோடிகள் மற்றும் ‘குடி’மகன்கள் ரெயில் பெட்டிக்குள் ஏறி கழிவறைகளை அசுத்தம் செய்கின்றனர். தட்டிக் கேட்டால் மிரட்டுகின்றனர். இதனால் எங்களால் துப்புரவு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை.

    போதிய அளவு போலீஸ்காரர்கள் இல்லாததால் பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

    குடிமகன்கள் மது பாட்டில்களை கழிப்பறைகளில் வீசிச் செல்வதால் தற்போதுள்ள பயோ டாய்லெட்டுகளில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே பிளாட்பாரங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படும் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்களின் கதவை உடனே மூடி விடவேண்டும். ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கதவை திறக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.

    சுதந்திர தினத்தையொட்டி மதுரை பஸ், ரெயில் நிலையங்களில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    மதுரை:

    இந்திய சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் ஜெயந்தி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் 2,500 போலீசார் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை விமான நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தின் உட்புற பகுதியில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நவீன பாதுகாப்பு நுழைவு வாயில் கருவி (ஸ்கேன்) பொருத்தப்பட்டு உள்ளது. இதன் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பயணிகளின் உடைமைகள், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மோப்ப நாய்களுடன் ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாட்டுத் தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்ச் சோலை, அழகர்கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    நாளை சுதந்திர தினவிழா நடைபெறும் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காலை 9.20 மணிக்கு கலெக்டர் வீரராகவராவ் கொடி ஏற்றுகிறார்.

    மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஆணையாளர் அனிஷ்சேகர் கொடி ஏற்றுகிறார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரெயில் நிலையத்தில் ஸ்மார்ட் டி.வி. மூலம் இந்தி சொல்லித் தரப்படுகிறது. #MaduraiRailwayStation
    மதுரை:

    தமிழகத்தில் முதல்முறையாக மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ‘தினமும் ஒரு இந்தி வார்த்தை’ என்கிற திட்டத்தை ஸ்மார்ட் டிவி மூலம் சொல்லி தரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதாவது ஸ்மார்ட் டி.வி.யில் 30 இந்தி வார்த்தைகள் படத்துடன் இடம்பெறும். அத்துடன் தமிழ்- ஆங்கில உச்சரிப்பு, பொருள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதுதவிர ஒருசில இந்தி படங்களின் இனிமையான காட்சிகளும் நடுவில் வரும்.

    ஸ்மார்ட் டி.வி. வாயிலாக இந்தி வார்த்தைகள் கற்பிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். கே. குல்ஸ்ரேஷ்டா தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனுஇட்டியொரா மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #MaduraiRailwayStation

    மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏற்கெனவே ஒரு மின்சார பேட்டரி கார் இருந்தது. இந்தநிலையில் மேலும் 2 புதிய மின்சார பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏற்கெனவே ஒரு மின்சார பேட்டரி கார் இருந்தது. இந்தநிலையில் மேலும் 2 புதிய மின்சார பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதன் வாயிலாக ஒருவர் ரெயில் நிலைய வெளிப்பகுதியில் இருந்து நடைமேடை வரை செல்ல முடியும். அப்போது பயணிகள் தங்களுடன் சிறிய கைப்பைகளையும் எடுத்து செல்லலாம்.

    பேட்டரி கார் பயணத்துக்காக நபர் ஒன்றுக்கு ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

    ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

    பேட்டரி கார் சேவை தேவைப்படுவோர் 89395-06248, 96557-41663, 75020-00570 ஆகிய செல்போன் எண்களில் டிரைவரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

    பேட்டரி கார் சேவையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், 89398-06999 என்ற செல்போன் எண்ணில் புகார் செய்யலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அகில இந்திய அளவில் தென்னக ரெயில்வேயில், மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக விருது வழங்கப்பட உள்ளதாக முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
    மதுரை:

    இந்திய ரெயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் பயணிகளை கவருவதற்காக ரெயில்நிலைய வளாகங்கள், பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வேயில் மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ரெயில்நிலையங்களிலும் பயணிகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு தற்போது ரெயில்வே மந்திரியின் விருது கிடைத்துள்ளது.

    இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெயில்வே துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் பயணிகளை கவரும் வகையிலான ஓவியங்கள் அனைத்து மண்டலங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ரெயில்வே வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதில் இந்திய ரெயில்வேக்கு உள்பட்ட 16 ரெயில்வே மண்டலங்களில் இருந்தும் ரெயில்நிலையங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் மதுரை ரெயில்நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ரெயில்வே அமைச்சகத்தின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் தானியங்கி படிக்கட்டு பகுதியில் வரையப்பட்ட ஓவியத்துக்காக கண்ணன் என்ற ஓவியருக்கும், ரெயில்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக ரமேஷ் என்பவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ரெயில்வே மந்திரி தலைமையில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதற்காக இந்த ஓவியர்கள் 2 பேரும் டெல்லி செல்கின்றனர். இந்த ஓவியம் குறித்து முதன்முதலாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×