search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    X

    சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன

    மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    • ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் தினமும் அதிக ரெயில்கள் கடந்து செல்லும் நிலையமாக திகழ்வது வாடிப்பட்டி ரெயில் நிலையம். தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக வெளி மாநிலங்கள், வெளி ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.

    மேலும் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகா, அஸ்ஸாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் டிராக்டர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதே போன்று வடமாநிலத்திற்கு டிராக்டர்கள் ஏற்றி செல்வதற்காக சரக்கு ரெயில் ஒன்று 24 பெட்டிகளுடன் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 1.20 மணியளவில் மதுரை ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த ரெயிலின் நடுப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

    மேலும் தடம்புரண்ட பெட்டிகள் நடைமேடையில் மோதியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். நடைமேடையில் ரெயில் பெட்டிகள் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

    முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன. பின்பு மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் இழுவை என்ஜின் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டன.

    மீட்பு பணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான ரெயில்கள் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு பிறகே மதுரையை கடந்து செல்லும்.

    மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதால் அந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    3-வது நடைமேடையை தவிர மீதமுள்ள நடைமேடைகள் வழியாக ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இதனால் அனைத்து ரெயில்களும் காலதாமதமாக மதுரையை கடந்து சென்றன.

    சென்னை-கொல்லம், பெங்களூரு-நாகர்கோவில், கோவை-நாகர்கோவில், சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

    தடம்புரண்ட ரெயில்பெட்டிகள் பிளாட்பாரத்தில் மோதியதால் அவை சேதமடைந்தன. அதே போல் பெட்டிகள் மோதியதில் பிளாட்பாரமும் சற்று சேதமடைந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தொடங்கி மீட்பு பணி இன்று காலை 5.50 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.

    மதுரை ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சரக்கு ரெயிலின் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கூடல்நகர் பகுதியில் இதே போன்று சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது. * * * தடம்புரண்ட சரக்கு ரெயில் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. * * * சேதமடைந்த ரெயில் பெட்டிகள். * * * தடம்புரண்ட ரெயில் பெட்டி நடைமேடையில் மோதி நிற்கும் காட்சி.

    Next Story
    ×