என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள்.
- ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே.
கோவையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில் வருமானத்தில் தி.மு.க. அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
- இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.
- காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சீலநாயக்கன்பட்டி செரியன்காடு தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான காற்றாலை எந்திரங்கள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடி எந்திரம் உடைந்து விழுந்தது. மேலும் 6 துண்டுகளாக சிதறியது. காற்றாலை அமைந்துள்ள பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.
சேதமடைந்த காற்றாலை எந்திரத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும். காற்றாலை எந்திரம் அருகே உள்ள மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் அவதிக்கு உள்ளாகினர். எனவே காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
- தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.
அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை இன்று காலை பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அப்போது சென்ட்ரல் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். கமிஷனர் அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தை தாண்டி பெண் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். அதற்குள் சரக்கு வாகனம் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் விபத்தில் பலியான பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ஸ்ரீதேவி. 42 வயதான இவர் புதுப்பேட்டை ஷேஷாத்திரி தெருவை சேர்ந்தவர் ஆவார். புரசைவாக்கம் பகுதிக்கு சென்று விட்டு புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது தான் இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.
அதன் பிறகே விபத்தை ஏற்படுத்தியது சரக்கு வாகனம் என்பது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 13-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது.
- ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தை பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை அருகே வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குளாகினர்.
நேற்று கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்று தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
- சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன்.
* 2011, 16-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது.
* மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கிறது.
* தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
* நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
* சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
* கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி தருகிறேன்.
* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து இந்த நீர்வரத்து 43 ஆயிரம் கன் அடியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
- மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
- மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இளம் மாணவர்களை சந்திக்கும்போது எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது.
* கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும். அது சமூகத்திலும் எதிரொலிக்கப்பட வேண்டும்.
* கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து.
* மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
* மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.
* கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது.
* காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.
* நான் அரசியல் பேசவில்லை, மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன்.
* ஓரணியில் திரண்டால் தமிழகத்தை யாராலும் வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
- பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம் என்பவர் சில நாள்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பாரிஜாதம் பணி தொடர்பாக தம்மை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளும், ஓர் ஆசிரியரும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரே மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஆனாலும் கூட பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தான் அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்த சிக்கலில் அரசும், காவல்துறையும் இனியும் தாமதிக்காமல் பாரிஜாதத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
- செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர் தூங்கிதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெயில் வருவதாக விமல் என்ற அதிகாரி பங்கஜ் சர்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை.
அவர் தூங்கி விட்டதாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.
செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் தகவல் தொடர்பாக அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.
இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராக 13 பேருக்கு திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பள்ளி வேன் டிரைவர் சங்கர் உள்பட 13 பேரும் நாளை திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.