என் மலர்
நீங்கள் தேடியது "கைது"
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர்.
- அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
திருப்பூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
- ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
- கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் வசித்து வந்தவர் பொறியாளர் பழனியப்பன். இவர் பா.ஜ.க. நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்குள்ள ஒரு கடையை மூர்த்தினி வயல் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சாந்தகுமாரின் நடவடிக்கையால் அவரை கடையை காலி செய்யுமாறு பழனியப்பன் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பழனியப்பனின் தாயார் அமுதா தன்னிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக சாந்தகுமார் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் பழனியப்பன் மீதான முன் விரோதத்தில் போலியான அவணங்களை தயாரித்து சாந்தகுமார் பொய் புகார் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து சாந்தகுமாரையும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் கணேசன் என்பவரையும் காரைக்குடி தெற்கு போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக கூலிப்படையை நாடி உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலிப்படையினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி பழனியப்பனை கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பழனியப்பன் உறவினர்கள் 2 நாட்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாந்தகுமார், அவரது நண்பர் கணேசன் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் நேற்று அழகப்பாபுரம் போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (45). இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 158 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளாக தர்மபுரியை சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் என 5 பேர் கும்பல் என தெரியவந்தது. இதில் சுரேஷ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார்.
- புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து காதலனின் பேச்சை கேட்டு அவரும் இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளார். தீபன்ராஜ் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகில் உள்ள சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தீபன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு அங்கிருந்து தப்பினர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- மூதாட்டி வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
- மூதாட்டிக்கு குப்பை கொட்டிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார். இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.
பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் மீத தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் பங்கு என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
- 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
- இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுடர் வடிவேலு (வயது 57).
இவருக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த தவமாரியம்மாள் என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது சுடர் வடிவேலு தனது குடும்பத்துடன் மனைவி ஊரான ஊத்து மலையில் வசித்து வந்தார். அவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது இளைய மகளுக்கு பாம்பு கடித்ததால் தவமாரியம்மாள் அவரை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் சுடர் வடிவேலு வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதில் அவரது கையும் துண்டானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சுடர் வடிவேலு பஸ் நிறுத்தம் பகுதியில் கடை வைத்திருக்கும் நிலையில் அதன் எதிர் திசையில் சாலையின் மற்றொரு புறத்தில் கார்த்திக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சுடர் வடிவேலு பூக்கடையை விரிவாக்கம் செய்தார். அப்போது சாலையை ஒட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கார்த்திக் அவரிடம் சத்தம் போட்டுள்ளார். அதற்கு சுடர் வடிவேலுவும் பதிலுக்கு சத்தம் போட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடனும், சுடர் வடிவேலு தனது ஆதரவாளர்களுடனும் என இருதரப்பாக பிரிந்து 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊரை சார்ந்த தன்னையே சுடர் வடிவேலு எதிர்க்கிறார் என்று கருதிய கார்த்திக், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது கூட்டாளிகளான அதே பகுதியில் வசிக்கும் கணேசன்(30), மணி வண்ணன் (28), அருள் பாண்டியன், உதயகுமார் ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு சுடர் வடிவேலு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக இருந்த சுடர் வடிவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
- வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.
- கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.
கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அரச்சலூரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48) என்பவர் கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ஆச்சியப்பனை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆச்சியப்பன் கொடுத்த தகவலின் பெயரில் அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்படை போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் மூவர் மீதும் சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி உட்பட போலீஸ் நிலையங்களில் 19-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தோட்டத்து வீட்டில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று முதலில் தேங்காய் பறிப்பது போல் நோட்டமிட்டு அவர்களிடம் பேசி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதேபோன்று தான் சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும் சிறு கத்திகளை கொண்டு காது, கைகளை வெட்டி நகைகளை திருடி சென்றுள்ளனர். மேகரையான் தோட்டத்தில் மண்வெட்டி கத்திகளை வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 4-வது நபராக நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் கொள்ளையடிக்கும் நகைகளை ஞானசேகரன் கடையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 4 பேர் இன்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
- பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர நகையை விற்பனை செய்ய இடைத்தரகர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல், மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சுப்பன் ஆகியோரை அணுகினார்.
இதையடுத்து இடைத்தரகர்கள், வைரத்தை வாங்குவதற்காக லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பரான விஜய், மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்கள் வைர நகையை பார்த்து விட்டு ரூ.23 கோடி விலை பேசி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள் வைரத்தை வாங்க பணம் ரெடியாகிவிட்டது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைர நகையுடன் வந்து அதனை கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து சந்திரசேகர், தனது வளர்ப்பு மகள் ஜானகியுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அப்போது சந்திரசேகர் மட்டும் குறிப்பிட்ட அறைக்குள் வைரத்துடன் சென்றார். ஜானகி ஓட்டலுக்கு வெளியே நின்றார்.
இதற்கிடையே நீண்ட நேரம் வரை சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜானகி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும், அறையில் இருந்த நபர்கள் அவரை தாக்கி வைரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு வைரநகை கொள்ளை குறித்து வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
வைர நகை கொள்ளை குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதியம் புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் சென்னை ஓட்டலில் வைரத்தை கொள்ளையடித்து தப்பி வந்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த ஜான் லயார், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காடு ரதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் மற்றும் தப்பி செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்து சென்று பிடிபட்ட அருண்பாண்டியராஜன் உள்பட 4 பேரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வைரம் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? தூத்துக்குடிக்கு தப்பி சென்றது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இடைத்தரகர்கள், நகை வாங்க வந்தவர்கள் மற்றும் தற்போது பிடிபட்டவர்கள் என குழப்பங்களுக்கு விடை காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கொள்ளையில் 4 பேர் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.






