என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.






