என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Thamizhar katchi"

    • மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடு, மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 'ஆதி நீயே, ஆழித்தாயே' என்ற முழக்கத்தை முன்வைத்து கடலம்மா என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் இந்த கடலம்மா மாநாடு சீமானின் மற்ற மாநாடுகளை போல சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

    • ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.
    • நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரமாக மாறி உள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.

    ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.

    துரோகத்தைப் பற்றி, சமூக நீதி, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழன் என்று வந்தால் பார்ப்பனர்கள் நானும் தமிழன் என்று உள்ளே வந்து விடுவார் என்று வீரமணி போன்றவர்கள் பேசுகிறார்கள்.

    அதே கருத்தை தான் அ.தி.மு.க.வினரும் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா தலைமையை இவர்கள் எப்படி ஏற்றார்கள்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் பா.ஜ.க. தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும்.

    ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. 2 மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும். பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள்.

    அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றும் ஒரு பீகாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்து உள்ளார். இந்த முறையே தவறு, இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுகிறார்.

    அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து ஓட்டு போடட்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார்.

    மற்ற நாடுகளில் இங்கு செய்வது போன்ற பிரசாரம் போன்ற நிலை இல்லை.

    வருகின்ற தேர்தலில் இங்கு கட்சிகளுக்கு போட்டி அல்ல கருத்துகளுக்கு தான் போட்டி. நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உடன் இருந்தார்.

    • ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?.
    • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

    இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?

    விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

    மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

    இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப்போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

    உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

    கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் - சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின் புகழ் வரலாற்றை பொன்னர் - சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே?

    இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?

    ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் திமுக ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?

    எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?

    சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?

    பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?

    தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?

    இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.

    ஆகவே, கோவை - அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.



    • பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி, காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெறுவதாகவும் நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் பிரமான பத்திரத்தில் உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடிகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

    • ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார்.
    • தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். 



    • துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
    • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.

    தூத்துக்குடி :

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது?

    * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    * தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது.

    * துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    * ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.

    * கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜயே முதல் காரணம்.

    * காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய்.

    * 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே.

    * இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.

    * எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார். 

    • துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
    • சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம்.

    * உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.

    * கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.

    * நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.

    * எல்லோரும் சேர்ந்த இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * விஜயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது.

    * பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.

    * துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது.

    * சந்தேகங்கள் இருப்பின் அவை விசாரணையில் தெளிவாகும் என்றார். 

    • அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்.
    • இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சட்ட பேரவை தலைவராக சி.பா. ஆதித்தனார் சிறப்பாக பணியாற்றினார்.

    அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்னை அமர வைத்தார் . இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

    தினத்தந்தி பத்திரிகையை நிறுவி அதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் என்றார். பின்னர் அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த சனியின் மொத்த உருவமாக சீமான் இருக்கிறார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர்.பற்றி சீமான் தெரிவித்த கருத்து குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மறைந்த தலைவர்கள் பற்றி இது போன்று பேசுவது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கது என்றார்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் கூறும்போது, கட்சித் தலைவர்களை சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல. அவரது கட்சிக்கும் நல்லது கிடையாது.

    சீமான் தனது பேச்சையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அவரையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மறைந்த தலைவர்களை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

    • மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.
    • 2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை.

    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவருடைய உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நடிகை விஜயலட்சுமிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருப்பதாக கேட்கிறீர்கள். நீங்களாக ஒரு தீர்ப்பை எழுதக்கூடாது.

    முதலில் ஜி.எஸ்.டி. வரியை விதித்தது யார்.? அதன் பின்பு வரியை குறைத்தது யார்.? ஏன் குறைத்தார்கள் என்றால் இந்த வரி மக்களுக்கு சுமையாக இருந்தது.

    சுமையாக இருக்கும் என்று கூட தெரியாமல் வரியை விதித்த நீங்கள் என்ன ஆட்சியாளர்? என்ன தலைமை? இதில் பயன் இருக்குமா? வளர்ச்சிக்கு உதவுமா இல்லை வீழ்ச்சிக்கு தள்ளி விடுமா என்று கூட தெரியாமல் அதிகாரத்திற்கு எப்படி வந்தீர்கள்?

    மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும். இதேபோல் தான் பணம் செல்லாது என்று சொன்னார்கள். அதனால் நடந்த ஒரே ஒரு நம்மை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்..? இதனால் ஊழல் ஒழியும் என்றார்கள் ஒழிந்துவிட்டதா?

    2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை. இது ஒரு தேசிய இனத்தின் விடுதலை. பா.ஜ.க. என் கொள்கை எதிரி திமுக என் அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார்.

    அப்போது தி.மு.க.வின் கொள்கையில் உடன்பாடா? பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடா?

    பா.ஜ.க. கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? என்ற கேள்வி வருகிறது. பா.ஜ.க. கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள்.

    பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே கொள்கைதான். கட்சியின் பெயர்தான் வேறு. கொடியில் வண்ணம் மாறும் கொள்கையில் எண்ணம் மாறாது.

    விஜய்யை எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் வரும் தேர்தலில் விஜய் எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கக்கூடாது. அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் கருத்து முரண் இருக்கின்றது அதை சரி செய்துகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.

    உன் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருகிறேன். 'அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு' உனக்கு எழுதி கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறேன். அது அவருக்கு புரியவில்லை.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கொடுக்கட்டும் கொடுக்கட்டும். என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வது போல உள்ளது என்றார்.

    • நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் காஜா தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதவாது:-

    கோவையில் அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், த.வெ.க கட்சி தலைவரான நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.
    • நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும்.

    * ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.

    * நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    * நான் இப்போது பேசுவது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தெரியும்.

    * உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீட்டை வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை என் பிள்ளைகளுக்கு வாழறதுக்காக வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன்.

    * நீங்க காசை சேர்த்துவைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீங்க. நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும்னு நினைக்கிறேன்.

    * கனிம கொள்ளையை தடுக்க ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பதுதான். வேறு வழியே கிடையாது

    * கனிம கொள்ளை குறித்து என்கிட்ட கேட்குறீங்க.. நேற்று ரொம்ப கூட்டம் வந்ததுல அவர் கிட்ட கேட்க வேண்டியதுதானே என்றார்.

    • மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார்.

    திருத்தணி:

    நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்த நிலையில் அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் இன்று மரங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.

    மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார். மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் வெளியிட்டார். பின்னர் மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில் பேசினார்.

    ×