என் மலர்
நீங்கள் தேடியது "2025 ரீவைண்ட்"
- ஸ்பாடிஃபை இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன.
- அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் முழு வீச்சில் திரும்பிய நிலையில், இசைத் துறை புதிய உச்சங்களைத் தொட்டது.
ஸ்பாடிஃபை போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன. ஜனவரி 1 முதல் டிசம்பர் 30 வரை வெளியான பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஸ்பாடிஃபை வெளியிட்ட டாப் 10 தமிழ் பாடல்கள் பட்டியல், தமிழ் இசையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பட்டியலில் அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்தக் தொகுப்பில் , இந்த டாப் 10 பாடல்களை ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்

1. ஊரும் ப்ளட் (Oorum Blood) – டியூட்
இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்
பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்
ஸ்பாடிஃபை டாப் 10-இன் முதல் இடத்தை சாய் அப்யங்கரின் இசையில் உருவான ஊரும் ப்ளட் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் 8,96,43,074 ஸ்ட்ரீம்களுடன் இது உச்சத்தில் நிற்கிறது. ஆகஸ்ட் 28 அன்று வெளியான இந்தப் பாடல் ஒரு உற்சாகமான ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது
2. மோனிகா (Monica) – கூலி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்
இப்பட்டியலில் 80,679,580 ஸ்ட்ரீம்களுடன் அனிருத்தின் "மோனிகா" பாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

3. கனிமா (Kanimma) – ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
65,618,166 ஸ்ட்ரீம்களுடன் சந்தோஷ் நாராயணனின் "கனிமா" பாடல் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.

4. வழித்துணையே (Vazhithunaiye) – டிராகன்
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே
லியோன் ஜேம்ஸின் இசையில் 62,161,580 ஸ்ட்ரீம்கள் பெற்ற 'வழித்துணையே' பாடல் இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது. டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
5. சித்திர புத்திரி (Sithira Puthiri)
61,073,988 ஸ்ட்ரீம்களுடன் சாய் அப்யங்கரின் இண்டிபெண்டெண்ட் ஆல்பமாக வெளியான இப்பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ரசிகர்கள் இப்பாடலின் யூனிக் சவுண்டை பாராட்டினர், ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட்களில் இப்பாடல் அடிக்கடி இடம்பெற்றது.
6. பவர்ஹவுஸ் (Powerhouse) – கூலி
இசையமைப்பாளர்: அனிருத்
பாடகர்கள்: அனிருத் , அறிவு
அனிருத் ரவிச்சந்தரின் பவர்ஹவுஸ் பாடல் 60,811,993 ஸ்ட்ரீம்களுடன் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.
கூலி படத்தின் மாஸ் ஆன்தெம் ஆக வெளியான இப்பாடல் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

7. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
கண்ணாடி பூவே பாடல் 7,457,598 ஸ்ட்ரீம்களுடன் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.
8. பதிக்கிச்சு (Pathikichu) – விடாமுயர்ச்சி
இசையமைப்பாளர்: அனிருத்
பாடகர்கள்: அனிருத்
பதிக்கிச்சு பாடல் 45,027,321 ஸ்ட்ரீம்களுடன் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது. விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
9. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பொட்டல முட்டாயே பாடல் 37,609,275 ஸ்ட்ரீம்களுடன் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

10. முத்த மழை ரெப்ரைஸ் (Muththa Mazhai Reprise) – தக் லைஃப்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சின்மயி
சின்மயி குரலில் உருவான முத்த மழை பாடல் 34,686,401 ஸ்ட்ரீம்களுடன் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.
முடிவுரை:
2025 ஆம் ஆண்டு தமிழ் இசை, ஸ்ட்ரீமிங் யுகத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. அனிருத் (3 பாடல்கள்), சந்தோஷ் (3), சாய் (2) ஆதிக்கம், புதிய ட்ரெண்ட்களை உருவாக்கின. இந்தப் பாடல்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகின்றன.
- சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
- 860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு "2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத பாரதம்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படைகள் நக்சலைட்டுகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.

சுமார் 1,973-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பொதுவாழ்விற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அதிகளவில் நிகழ்ந்துள்ளது.
860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்த ஆண்டில் வீழ்த்தப்பட்டனர்.
மத்வி ஹித்மா: நக்சல் இயக்கத்தின் மிகவும் தேடப்பட்ட மற்றும் கொடூரமான கமாண்டர்களில் ஒருவரான இவர், நவம்பர் 2025-ல் சத்தீஸ்கர்-ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

கணேஷ் உய்கே: மத்திய குழு உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரான இவர், டிசம்பர் 2025-ல் ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.1.1 கோடி வெகுமதி இருந்தது.

கேசவ ராவ் (எ) பசவராஜ்: ஜூன் 2025-ல் மற்றொரு மூத்த தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சலபதி மற்றும் அருணா: ஜனவரி 2025-ல் சத்தீஸ்கர்- ஒடிசா எல்லையில் நடந்த தாக்குதலில் மத்திய குழு உறுப்பினர் சலபதி மற்றும் அவரது மனைவி அருணா உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

சத்தீஸ்கரின் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் 21 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த வேட்டையில், 27 கடினமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இங்கிருந்த மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலை மற்றும் பயிற்சி முகாம்களைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்தன.
நக்சல் பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்
அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2014-ல் 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025-ல் வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதில் மிகத் தீவிர பாதிப்புள்ள மாவட்டங்கள் வெறும் 3 மட்டுமே மிஞ்சியுள்ளன.
அபுஜ்மர் (Abujhmad) மற்றும் வடக்கு பஸ்தர் போன்ற பல ஆண்டுகளாக நக்சல் கோட்டைகளாக இருந்த இடங்கள் இப்போது "நக்சல் அற்ற பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன.

வெறும் ஆயுதப் போர் மட்டுமின்றி, "பேச்சுவார்த்தை - பாதுகாப்பு - ஒருங்கிணைப்பு" என்ற மும்முனை உத்தியையும் மத்திய அரசு கையாண்டது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை அரசு வழங்குகிறது.
நக்சல் பகுதிகளில் 17,500 கி.மீ சாலைகள், 5,000 மொபைல் கோபுரங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் 2025-க்குள் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபடி, 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற இலக்கை நோக்கி 2025-ம் ஆண்டின் வெற்றிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.
- காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
- முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் ஆறு நாட்களை கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா கூறுகையில், மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தை பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை என்று கூறினார்.
இந்தப் பிரச்சனையின் பின்னணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியார்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது பிரதான கோரிக்கை.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது.
தி.மு.க.வின் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 356-இல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், "இப்போது ஆட்சியே முடிவடையும் தருவாய் நெருங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேனும், 2021-ல் அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அருகில் கடந்த 18-ந்தேதி பட்டினிப் போராட்டத்தை நடத்த செவிலியர் சங்கம் முடிவு செய்தது. அந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.
அன்று பிற்பகலில் மருத்துவத் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாக செவிலியர் சங்கம் அறிவித்தது.
அன்று இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரும் காவல் துறையால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அடுத்த நாள் அமைச்சர் தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்தது.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அமைச்சர் அறிக்கையின் மூலம் அறிவித்தார்.
- 'எமர்ஜென்சி' முதல் 'துரந்தர்' வரை சினிமாவை அரசியல் ஆயுதமாக மாற்றின
- அதில், சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனாலும், பல படங்கள் இணையத்தில் ட்ரோல் ஆகின.
2025 ஆம் ஆண்டு இந்திய சினிமாவுக்கு ஒரு அரசியல் அலை போல இருந்தது. பாலிவுட் முதல் பிராந்திய சினிமா வரை, பல படங்கள் 'Propaganda' என்ற பெயரில் சர்ச்சையை கிளப்பின.
இந்துத்துவா கதைகள், வரலாற்று சித்தரிப்புகள், மத வன்முறை காட்சிகள் என இவை அரசியல் கட்சிகளின் அஜெண்டாவை பிரதிபலித்தன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதில், சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனாலும், பல படங்கள் இணையத்தில் ட்ரோல் ஆகின. அவ்வகையில் இந்த ஆண்டின் டாப் சர்ச்சை பிராபகண்டா படங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' முதல் 'துரந்தர்' வரை, இவை எப்படி சினிமாவை அரசியல் ஆயுதமாக மாற்றின என்பது சுவாரசியமானது!

1. எமர்ஜென்சி (Emergency) -
கங்கனா ரனாவத் இயக்கி, நடித்த இந்த படம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை சித்தரிக்கிறது. ஆனால், இது காங்கிரஸ் எதிர்ப்பு பிராபகண்டா என்று விமர்சகர்கள் கூறினர். கங்கனாவின் பாஜக தொடர்பு காரணமாக, படம் அரசியல் பாரபட்சம் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படம் ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே, சோஷியல் மீடியாவில் #BoycottEmergency ட்ரெண்ட் ஆனது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியை தழுவியது.
2. சாவா (Chhaava) -
சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், விக்கி கௌஷல் நடிப்பில் வெளியானது. ஆனால், அவுரங்கசீப் எதிர்ப்பு காட்சிகள் காரணமாக, தவறான வரலாற்று தகவல்கள் இப்படத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படத்தின் காரணமாக நாக்பூரில் வன்முறை ஏற்பட்டது.
இப்படம் இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டியது. இருப்பினும் பிராபகண்டா ஜெனரில் இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

3. உதய்பூர் ஃபைல்ஸ் (Udaipur Files) -
கன்ஹையா லால் டெய்லர் மர்டர் (Udaipur Files) - ஹேட் ஸ்பீச் ஹாட் டாபிக்!
முகமது நபியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். உதய்பூரில் நடந்த இந்த சம்பவத்தை மையமாக கொண்டு உதய்பூர் ஃபைல்ஸ் வெளியானது.
முஸ்லிம் - இந்து பிரச்சனையை தூண்டும் வகையில் இப்படம் இருந்ததாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.

4. தி பெங்கால் ஃபைல்ஸ் (The Bengal Files) -
விவேக் அக்னிஹோத்ரியின் 'ஃபைல்ஸ்' சீரிஸின் மூன்றாவது படம். காஷ்மீர் ஃபைல்ஸ் போன்றே எடுக்கப்பட்ட தி பெங்கால் ஃபைல்ஸ் படுதோல்வி அடைந்தது. இது உண்மை வரலாறு" என்று விவேக் கூறினாலும், இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பிராபகண்டா படம் என்ற விமர்சனம் எழுந்தது.

5. அஜெய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் எ யோகி (Ajey: The Untold Story of a Yogi) -
யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இது ஒரு ஹிந்துத்வா கதையாக உள்ளது என்று இணையத்தில் விமர்சிக்கப்பட்டது. அதன்விளைவாக இப்படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.

6. தி தாஜ் ஸ்டோரி (The Taj Story) -
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹால் ஒரு இந்து கோவில் என்ற இந்துத்துவ பிரசாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இபபடத்தின் மீது கடுமையான விமர்சனம் எழுந்தநிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஃப்ளாப் ஆனது.

7. துரந்தர் (Dhurandhar) -
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த இந்த ஸ்பை ஃபில்ம், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையை சித்தரிக்கிறது. முஸ்லிம் வெறுப்பு பிராபகண்டா படமான துரந்தர் இந்தாண்டின் அதிகம் வசூலித்த இந்தி படம் என்ற சாதனையை படைத்தது. நன்றாக எடுக்கப்படும் பிராபகண்டா படங்கள் தான் மிக ஆபத்தானவை என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாகும்.
இந்த படங்கள் 2025-ஐ சினிமாவின் அரசியல் ஆண்டாக மாற்றின. சில ஹிட் ஆனாலும், பல ஃப்ளாப் - ஆனால் சர்ச்சைகள் சினிமாவை சமூக பிரச்சினை ஆக்கின.
- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்தது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-வயது மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்துக்கு வந்த கொடூரமான வழக்கு தான் பெள்ளாச்சி பாலியல் வழக்கு. கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27) சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரன்பால் (29), பாபு என்ற மைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் 2021-ம் ஆண்டு கைதானார்கள்.
இவர்கள் 9 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்:-
2019 பிப்ரவரி தொடக்கம்:- பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2019 பிப்.12:- பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
2019 பிப்.24:- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2019 மார்ச்.5:- தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2019 மார்ச் கடைசி:- இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
2019 ஏப்.25:- சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.
2019 மே.24:- பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2021 ஜன.6:- வழக்கில் தேடப்பட்டு வந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
2021 பிப்.22:- அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோர் மீது 2-வது கூடுதல் குற்றப்பத்திரிகை கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2021 ஆக.16:- 9-வது குற்றவாளியான அருண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2024 பிப்.23:- சி.பி.ஐ. கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2025 ஏப்.5:- குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் கேள்விகள் கேட்பதற்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2025 ஏப்.28:- இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்தது.

2025 மே 13:- காலை 10.30 மணிக்கு குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 12.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை அவர் விசாரித்து வந்தார்.
குற்றவாளிகள் 9 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக்கொண்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும், 48 சாட்சியாக இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன.
இத்தனையையும் அலசி ஆராய்ந்த நீதிபதி நந்தினி தேவி, 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான ஒரு முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
- நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது.
- சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை அவ்வபோது வெளியாகி வந்த 2025 உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடங்களை இங்கு பார்ப்போம்.
பொருளாதார வலிமையை அளவிடும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (IMF) குறியீட்டில் உலகளவில் 193 நாடுகளில் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
பணப்பரிமாற்றம் குறியீட்டின்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் 1-வது இடம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 129 பில்லியன் டாலர் பணத்தைத் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

'எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் 151-வது இடத்தில் இந்தியா மிகவும் மோசாமான நிலையில் உள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான சவால்களால் இந்தியா கடந்த ஆண்டை விடப் பின் தங்கியுள்ளது.

உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனாவை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின்வரிசையில் உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக ஆதரவு மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் பட்டினி குறியீடு பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை "தீவிரமானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை பாலின இடைவெளிக் குறியீடு அளவிடுகிறது. இதில் இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சறுக்கி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் பொருளாதாரப் பங்களிப்பில் பெண்களுக்கு முன்னேற்றம் தேவை என்பதை இந்தத் தரவரிசை சுட்டிக்காட்டுகிறது.
புவி வெப்பமடைவதைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பருவநிலை மாற்றச் செயல்பாட்டுக் குறியீடு (CCPI) மதிப்பிடுகிறது. இதில் இந்தியா 10 வது இடம் பிடித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜி20 நாடுகளிலேயே மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு(EPI) படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடிப்பதில் 180 நாடுகளில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது. காற்றுத் தரம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை வைத்து ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 83-வது இடத்தில் உள்ளது. இந்தியக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் 4-வது சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு மூலம் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2024 ஊழல் குறியீடு ஒரு நாட்டின் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து அளவிடுகிறது. இதில் 180 நாடுகளில் இந்தியா 96 வது இடம் பிடித்துள்ளது. இது நிர்வாகத்தில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை உணர்த்துகிறது.
ஒரு நாட்டின் கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் பிற நாடுகளை ஈர்க்கும் திறனை உலகளாவிய மென்சக்தி குறியீடு அளவிடுகிறது. அதன்படி இந்தியா இதில் 30வது இடத்தில உள்ளது. .
நாட்டின் வணிகச் சூழல், சொத்துரிமை மற்றும் வரிச் சுமை போன்ற காரணிகளை வைத்து பொருளாதார சுதந்திரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியா 128 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் "பெரும்பாலும் சுதந்திரமற்றது" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை என இது குறிப்பிடுகிறது.

வயதான காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய அமைப்பின் தரத்தை உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு மதிப்பிடுகிறது. இதில் 104 நாடுகளில் இந்தியா கடைசியாக இருக்கும் D பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதிய ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாததே இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து வசதியை அளவிடும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு குறியீட்டில் 194 நாடுகளில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.
பயங்கரவாதப் பாதிப்பு குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.
உலகப் போட்டித்தன்மை குறியீட்டில் 69 நாடுகளில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது.
எரிசக்தி மாற்றம் குறியீட்டில் 118 நாடுகளில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.
மனித மேம்பாடு (HDI) குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.
சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியா பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முதல் 40 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.
ஆனால், மக்களின் மகிழ்ச்சி, பசி, ஊடக சுதந்திரம் மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளில் 100-வது இடத்திற்கு அப்பால் இந்தியா பின்தங்கியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசினார்.
- மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார்.
வைபவ் சூர்யவன்ஷி மார்ச் 27, 2011-ம் ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இடது கை துவக்க ஆட்டக்காரராக விளையாடும் இவர், 2025 ஆம் ஆண்டில் பல உலக சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.
இந்த ஆண்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
2025 ஏப்ரலில் 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் அறிமுகமான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே மூன்று சாதனைகளை படைத்தார்.
முதல் போட்டியில் செய்த மூன்று சாதனைகள்:
1. 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை, மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 மட்டுமே (14 வயது 23 நாட்கள்).இதன் மூலம் 2019-ல் 16 வயது 157 நாட்களில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரயாஸ் ரே பர்மனின் சாதனையை சூரியவன்ஷி முறியடித்தார்.
2. ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றார். இந்த சாதனையை ஆர்ஆர் அணிக்காக விளையாடும் ரியான் பராக் வைத்திருந்தார். பராக் ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்த போது, அவருக்கு 17 வயது 161 நாட்கள்
3. ஐபிஎல்லில் பவுண்டரி அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றுள்ளார். பிரயாஸ் ரே பர்மன் இந்த சாதனையை ஆறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார்.
மேலும் ஐபிஎல் தொடரில் வைபவ் செய்த சாதனைகள்:
1. டி20 வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் (வயது: 14 வருடம், 32 நாட்கள்)
2. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இரண்டாவது வீரர் (35 பந்துகள்)
3. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இந்திய வீரர் (35 பந்துகள்)
4. ஐபில் தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் (11 சிக்ஸர்)
5. அடித்த ரன்களில் அதிகப்பட்ச பவுண்டரி சதவீதம் (93 %)
6. ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்
அதனை தொடர்ந்து யூத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா U19-க்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் இந்திய U19 வீரர்களில் இதுதான் அதிவேக சதமாக பார்க்கப்படுகிறது. உலக U19 டெஸ்ட்டில் இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.
2025 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து, அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.
இந்தப் போட்டியில் வைபவ் அடித்த 171 ரன்கள், அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் அம்பத்தி ராயுடு - 177 ரன்களுடன் இருக்கிறார். அவர் 2002 ஆம் ஆண்டில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். மேலும், ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையையும் வைபவ் படைத்தார்.
அதனை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரில் சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-
வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)
ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)
ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)
மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.
இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:
35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024
36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று
40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010
41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023
42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021
ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-
59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)
64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)
65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)
பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு குழந்தைகளுக்கான இந்தியாவின் உயரிய விருது பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு. அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
- 2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது.
- கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.
திரை உலகில் கதாநாயகர்களால் படங்கள் வெற்றி பெற்று நல்ல வசூலை பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.
2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. அதிக வசூல் பெற்று தந்த 5 கதாநாயகிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

ராஷ்மிகா மந்தனா:-
2025-ம் ஆண்டில் பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்து முதல் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சாவா, சிக்கந்தர், தம்மா மற்றும் குபேரா, தி கேர்ள் பிரெண்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான படங்களில் 5 படங்கள் மொத்தமாக ரூ.1347.71 கோடி வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த நடிகை என ராஷ்மிகாவை திரை உலகம் கொண்டாடி வருகிறது.

ருக்மணி வசந்த்-
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்த ருக்மணி வசந்த் நடிப்பில் காந்தாரா அத்தியாயம் 1, ஏஸ், மதராசி ஆகிய மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு அவரது படங்களின் மொத்த வசூல் ரூ.963.33 கோடி மதிப்பில் ருக்மிணி 2-ம் இடத்தில் இருக்கிறார்.

சாரா அர்ஜுன்:-
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். முதல் படத்திலேயே ரூ.836.75 கோடி அவர் நடிப்பில் வெளியான துரந்தர் படம் வசூலை பெற்று தந்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் அதிக வசூலை பெற்று தந்த நடிகைகளின் 3-வது இடத்தில் சாரா இருக்கிறார்.
அனீத் பத்தா:
4-ம் இடத்தில் இருக்கும் அனீத் பத்தா நடிப்பில் வெளியான சாயாரா ரூ.570.33 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

கியாரா அத்வானி:-
கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர், வார்2 படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ரூ.550.63 கோடி வசூலை பெற்று இருக்கிறது.

ஸ்பெஷல் மென்ஷன்:
கல்யாணி பிரியதர்ஷன்:-
டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் தான் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. மேலும், கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் அதிக வசூல் குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.
இதனால் தான் இந்த பட்டியலில் உள்ள மற்ற நடிகைகளை விட கல்யாணி பிரியதர்ஷன் தனித்து தெரிகிறார். அதற்காகவே அவருக்கு இந்த ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
- உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
- ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் 'கோல்ட்ரிப் இருமல்' (Coldrif Cough Syrup) மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
அந்த மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியது.
இதனைத் தொடர்ந்து 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (Coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரித்த இந்த மருந்து, குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானதால், மருந்துப் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும் (WHO) கவலை தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் இது...
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி பிறந்தவர் குமரி அனந்தன்.
பெருந்தலைவர் காமராஜரின் தீவிர ஆதரவாளராக விளங்கியவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978-ல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, பாராளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர். இதுகுறித்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, "தனிமரம் தோப்பாகாது" என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர்.
தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர். எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.
பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர். வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.
நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியவர்.
சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சென்று சொற்பொழிவாற்றியதோடு, மாணவ, மாணவிகளுக்கும் இக்கலையில் பயிற்சி அளித்ததோடு, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்தியவர் என போற்றி, தமிழ் மக்கள் மனதில் தனக்கெனத் தனியிடம் பெற்ற, இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு 2024-ல் சுதந்திர தின விழாவில் 'தகைசால் தமிழர் விருது' வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி குமரி அனந்தன் தனது 93 வது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இவரது மகளாவார். மறைந்த தொழிலதிபர் எச். வசந்தகுமார் இவரது தம்பி ஆவார்.
- மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
- இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடியின் திருமணம் மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான சாங்லியில் (23-ந்தேதி) நடைபெற இருந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடும் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. அதில் பல இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சலின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு காரணம் இல்லை என்றும் வேறு காரணம் எனவும் கூறப்பட்டது. அதாவது பலாஷ் முச்சல் வேறு சில பெண்களுடன் பேசிய ஆடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகின. இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக இருவரும் ஏதும் பேசவில்லை.

சில நாட்களில் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதில், இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய விரும்புகிறேன். இதை மேலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு எங்கள் வழியில் முன் நகர்ந்து செல்ல அவகாசம் கொடுங்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பலாஷ் முச்சல் கூறியதாவது:-
வாழ்க்கையில் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலக நிற்க முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் புனிதமாக இருந்த ஒன்றைப் பற்றி பரவும் ஆதாரமற்ற வதந்திகள் மீது மக்கள் எளிதாக கருத்து தெரிவிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது எனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம். எனது நம்பிக்கைகளின் மீது உறுதியாக நின்று அதனை கையாள்வேன். உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு ஒரு சமூகமாக நாம் நிறுத்தி, யோசிப்போம் என நம்புகிறேன் என கூறினார்.
உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது. அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
- தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
- சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.
"பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இது சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் பெண் பயணிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
நோக்கம்: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துதல். இந்த ஆட்டோக்கள் GPS உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மானியம்: தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 100 ஆட்டோக்கள் தொடங்கப்பட்டன, பின்னர் 250 வரை விரிவாக்கம்.
தொடக்கம்: 2025 மார்ச் 8ஆம் தேதி (சர்வதேச மகளிர் தினம்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
விதிமுறைகள்: இந்த ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கட்டணம்: சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.
விண்ணப்பம்: சென்னையில் வசிக்கும் தகுதியான பெண் ஓட்டுநர்கள் (ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள்) மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பயன்கள்: பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து. பெண் ஓட்டுநர்களுக்கு சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரம்.
இந்த திட்டம், சென்னையின் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும்.






