என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: ராணுவம் முதல் பொருளாதாரம் வரை.. இந்த ஆண்டு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடம்!
    X

    2025 REWIND: ராணுவம் முதல் பொருளாதாரம் வரை.. இந்த ஆண்டு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடம்!

    • நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது.
    • சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை அவ்வபோது வெளியாகி வந்த 2025 உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடங்களை இங்கு பார்ப்போம்.

    பொருளாதார வலிமையை அளவிடும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (IMF) குறியீட்டில் உலகளவில் 193 நாடுகளில் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

    பணப்பரிமாற்றம் குறியீட்டின்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் 1-வது இடம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 129 பில்லியன் டாலர் பணத்தைத் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

    'எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் 151-வது இடத்தில் இந்தியா மிகவும் மோசாமான நிலையில் உள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான சவால்களால் இந்தியா கடந்த ஆண்டை விடப் பின் தங்கியுள்ளது.

    உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனாவை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின்வரிசையில் உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக ஆதரவு மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

    ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் பட்டினி குறியீடு பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை "தீவிரமானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை பாலின இடைவெளிக் குறியீடு அளவிடுகிறது. இதில் இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சறுக்கி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் பொருளாதாரப் பங்களிப்பில் பெண்களுக்கு முன்னேற்றம் தேவை என்பதை இந்தத் தரவரிசை சுட்டிக்காட்டுகிறது.

    புவி வெப்பமடைவதைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பருவநிலை மாற்றச் செயல்பாட்டுக் குறியீடு (CCPI) மதிப்பிடுகிறது. இதில் இந்தியா 10 வது இடம் பிடித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜி20 நாடுகளிலேயே மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு(EPI) படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடிப்பதில் 180 நாடுகளில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது. காற்றுத் தரம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை வைத்து ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 83-வது இடத்தில் உள்ளது. இந்தியக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

    நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் 4-வது சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

    டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு மூலம் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2024 ஊழல் குறியீடு ஒரு நாட்டின் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து அளவிடுகிறது. இதில் 180 நாடுகளில் இந்தியா 96 வது இடம் பிடித்துள்ளது. இது நிர்வாகத்தில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை உணர்த்துகிறது.

    ஒரு நாட்டின் கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் பிற நாடுகளை ஈர்க்கும் திறனை உலகளாவிய மென்சக்தி குறியீடு அளவிடுகிறது. அதன்படி இந்தியா இதில் 30வது இடத்தில உள்ளது. .

    நாட்டின் வணிகச் சூழல், சொத்துரிமை மற்றும் வரிச் சுமை போன்ற காரணிகளை வைத்து பொருளாதார சுதந்திரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியா 128 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் "பெரும்பாலும் சுதந்திரமற்றது" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை என இது குறிப்பிடுகிறது.

    வயதான காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய அமைப்பின் தரத்தை உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு மதிப்பிடுகிறது. இதில் 104 நாடுகளில் இந்தியா கடைசியாக இருக்கும் D பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதிய ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாததே இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

    போக்குவரத்து வசதியை அளவிடும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது.

    சைபர் பாதுகாப்பு குறியீட்டில் 194 நாடுகளில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

    பயங்கரவாதப் பாதிப்பு குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

    உலகப் போட்டித்தன்மை குறியீட்டில் 69 நாடுகளில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது.

    எரிசக்தி மாற்றம் குறியீட்டில் 118 நாடுகளில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.

    மனித மேம்பாடு (HDI) குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.

    சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்தியா பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முதல் 40 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.

    ஆனால், மக்களின் மகிழ்ச்சி, பசி, ஊடக சுதந்திரம் மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளில் 100-வது இடத்திற்கு அப்பால் இந்தியா பின்தங்கியுள்ளது.

    Next Story
    ×