என் மலர்
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
- புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.
நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.
- சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
- தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
- மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார்.
- துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றார்.
- லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது.
இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பெங்களூரு, ஜம்மு மற்றும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
- அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.
இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
- வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
- அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.
இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்
நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

- கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

- இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
- வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.
மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.







