என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார்கே"
- ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது.
- அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தோ்தல் நடை பெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது. மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி யாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.
அரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அரியானாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
- கடந்த 2022 -23 காலகட்டத்தில் இருந்த வேலைவாய்ப்பினை விகிதம் சற்றும் குறையாமல் 3.2 சதவீதமாகவே நீடித்து வருகிறது
- போட்டோ சூட் நடத்துவதை தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த மோடி யோசித்ததுண்டா?
பிரதமர் மோடி இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள கார்கே, ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு இளைஞரிடமும் இருந்து அவரது வேலைவாய்ப்பு பாஜக அரசால் பறிக்கப்படுவதை மோடி நினைவுகூர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கார்கேவின் இந்த விமர்சனம் சமீபத்தில் வெளியான பிரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே (PLFS) எனப்படும் காலநிலை தொழிலாளர் கணக்கெடுப்பு வெளியானதை ஒட்டி அமைந்துள்ளது. PLFS கணக்கெடுப்புப்படி 2023 - 24 ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது.
கடந்த 2022 -23 காலகட்டத்திலும் வேலைவாய்ப்பினை விகிதம் 3.2 சதவீதமாகவே இருந்தது. இதன் பொருள் புதிதாக நிலையான எந்த வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படாமல் இருப்பதால் போதுமான வேலை இல்லாமல் வேலைவாய்ப்பின்மை சிறிதளவும் குறையாமல் அப்படியே இருப்பதே ஆகும் என்பதை முன்வைத்து கார்கே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் பதிவிட்டுள்ள அவர், பாஜக அரசின் எவ்வளவு முயற்சித்தும் இளைஞர்கள் முற்றிலும் கைவிடப்பட்ட இந்த உண்மையை பாஜக அரசால் மறைக்க முடியவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதில் மோடிஜி முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு 10.2 இருப்பதை மோடி அறியமாட்டாரா?, வண்ணமயமான வாசகங்களை மேடை தோறும் பேசுவதையும் , போட்டோ சூட்களையும் நடத்துவதையும் தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த மோடி யோசித்ததுண்டா? நிலையான சம்பளம் கொண்ட வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த 7 ஆண்டுகளில் முற்றிலுமாக கீழிறங்கியுள்ளது என்று கார்கே தெரிவித்துள்ளார்.
- நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
- பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் சூழலில் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியைப் பாகிஸ்தானோடு தொடர்புப்படுத்தி பாஜக விமர்சித்து வருகிறது. சட்டப்பிரிவு 370 விவகாரத்தில் காங்கிரஸ்-என்சிபி மற்றும் பாகிஸ்தான் ஒரே பக்கத்தில்தான் உள்ளது என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை வைத்து காங்கிரசை தேச விரோத சக்தி என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கார்கே, காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சொல்கின்ற அனைத்துமே சுத்த பொய்கள். மக்களை திசை திருப்புவதற்காக இந்த பொய்களை அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் ஒருபோதும் பிரியாணி சாப்பிடவோ, அவரை[ நவாஸ் செஷரீப் -ஐ] கட்டித் தழுவவோ செல்லவில்லை. பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வரும் வேலையில் காஷ்மீர் அமைதியாக இருப்பதாகவும் வளர்ச்சி அடைத்துள்ளதாகவும் மோடி கூறி வருகிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள போதும் இன்னும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்காதது ஏன்?
பாஜகவை தேர்தலில் ஓரம்கட்டவே காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்களின் முதன்மையான நோக்கம் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கச் செய்வதே என்று பேசியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோடி பாகிஸ்தான் சென்று அப்போதைய பிரதமர் நவாஸ் செஷரீப்- ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர்
- ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
பாஜகவினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு இந்தியாவில் உள்ள சூழல் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக சாடினர்.
ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மையான பயங்கரவாதி என்றும் அவரின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத் தொகை அளிப்பதாக அறிவிக்கும் அளவுக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக பேசியிருத்த நிலையில் இதை கண்டித்து கார்கே தற்போது மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கார்கே தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது,
நமது நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் ஏற்பட்டுள்ள நேரடி பிரச்சனையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கூறப்பட்ட ஆட்சேபனைக்குரிய வன்முறையான கருத்துக்கள் கூறப்பட்டது உங்களின் கவனத்துக்கு வந்திருக்கும். மத்திய ரெயில்வே இணை அமைச்சர் [ரவ்நீத் பிட்டு], உத்தரப்பிரதேசம் பாஜக அமைச்சர்[ரகுராஜ் சிங்], ஆகியோர் ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர். உங்களின் கட்சியை சேர்ந்த மகாராட்டிர எம்.எல்.ஏ ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
டெல்லி பாஜக முன்னாள் எம்.எல்.ஏ, ராகுலின் பாட்டிக்கு ஏற்பட்ட விதிதான் ராகுலுக்கு ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். உலகத்துக்கு அகிம்சையையும், அன்பாயும் போதிக்கும் இந்தியாவில் பொது வாழ்கையில் இருப்பவர்கள் எப்படி கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உதாரணமாக விளங்கினர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே உள்ள பிரச்சனைகள் ஆரோக்கியமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.
ஆனால் தற்போது பாஜக தலைவர்கள் பரப்பி வரும் வெறுப்பு நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர்கள் மீது நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . வருகாலங்களில் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோல பேசாமல் இருக்க அவர்களுக்கு மரியாதையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
- 2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனி
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு இங்கிருந்து வெளியேறும் கதவை இளைஞர்கள் நிச்சயம் காண்பிப்பார்கள். கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பணியில் உள்ள 60,000 அரசு ஊழியர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வருமானம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலருக்கு பணி உறுதி செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Deception is the only policy of the BJP for the youth of Jammu and Kashmir!?Youth Unemployment rate in Jammu & Kashmir as on March 2024 is a staggering 28.2%. (PLFS)?Many exam paper leaks, bribes and rampant corruption have delayed hiring across departments for 4 years now.… pic.twitter.com/edf5ox2uGx
— Mallikarjun Kharge (@kharge) September 1, 2024
- 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் பாஜக எம்.பி கூறுகிறார்
- உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார்.
பாலியல் பலாத்காரங்களும் தூக்கில் தொங்கிய உடல்களும்
பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை வங்கதேச வன்முறையோடு ஒப்பிட்டு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. எங்கும் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா பேசியுள்ளார்.
வெட்ட வெளிச்சம்
விரைவில் அரியானா சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக மேலிடமே கண்டனம் தெரிவித்துள்ளது. தான் பேசியதற்கு கங்கனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கங்கானாவின் கருத்து பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
கீழ்த்தரமான கருத்து
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில், அளித்த வாக்குறுதிகளை நிறவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம் விவசாயிகளை தொடர்ச்சியாக அவமானப் படுத்தி வருகிறது. தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் ஒரு பாஜக எம்.பி கூறுவது பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உறைந்து கிடக்கிறது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று கடுமையாக சாடியுள்ளார்
பாஜகவின் மரபணு
கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியே பாராளுமன்றத்தில் வைத்து விவசாயிகளை கிளர்ச்சிக்காரர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் கீழ்த்தரமாகப் பேசினார். பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டார். உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். எனவே மோடி அரசின் மரபணுவிலேயே ஊறியுள்ள இந்த விவசாய எதிர்ப்பு மனநிலை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மதவாத ஆங்கிலேய கைக்கூலிகள்
கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு அகில இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) விவசாய சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா, காலநிலை என எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து, ஆங்கிலேயர் பக்கம் நின்ற மதவாத கைக்கூலிகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்தார்.
- சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
- நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.
காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.
இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்
இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
- மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
- உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.
இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
- கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர்.
- இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய மரணங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கார்கேவுக்கு ஜே.பி நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "திமுக - இந்தியா கூட்டணிக்கும் சட்டவிரோத சாராய மாபியாவுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயத்தால் பலியான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு நிகழ்ந்த இத்தகைய பேரழிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஏன் அமைதி காக்கிறது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை பதவியை விட்டு நீக்கவும் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க வேண்டும் அல்லது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
- நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
- மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.
நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.
நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.
அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன.
- எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் "இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. விடாமுயற்சி, உறுதியுடன் எந்த எதிரியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும். மக்களை தேர்தலில் காங்கிரசின் மீது நம்பிக்கை வைத்து சர்வாதிகார, அரசியலமைப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்" கார்கே தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. சசி தரூர், டி.கே. சிவக்குமார் உள்ளி்ட்ட தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்