என் மலர்
இந்தியா

H-1B விசா விவகாரம்: மோடி பிறந்தநாளுக்கு டிரம்ப் அனுப்பிய பிறந்தநாள் பரிசு - கார்கே விமர்சனம்
- H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
- இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்
* H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.
* ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.
* சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.
* இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
* டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.
இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!
வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார்.






