search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donald Trump"

    • இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.

    • டிரம்ப் சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.
    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். பெரும் தொழில் அதிபரான அவர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

    இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் டிரம்ப், முதல் முறையாக புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 ஆயிரம் கோடி) ஆகும்.

    அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.

    இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
    • உக்ரைனுக்கு ஆயுத உதவியை நாம் வழங்கினால் புதினை நிறுத்த முடியும் என்றார் பைடன்

    நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும், ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" (State of the Union Address) எனப்படும் இந்த உரையை நிகழ்த்தினார்.

    தனது உரையில், முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, பெயர் குறிப்பிடாமல் கடுமையாக பைடன் விமர்சித்தார்.


    சுமார் 1 மணி நேரம் பைடன் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது:

    எனக்கு முன்பு அதிபராக இருந்தவர் மக்களுக்கான அடிப்படை கடமைகளையே ஆற்றவில்லை.

    தற்போது அவர் ரஷிய அதிபர் புதினிடம், "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என கூறுகிறார்.

    ரஷிய அதிபரிடம் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறலாமா? இது ஆபத்தானது.

    புதின் உக்ரைனுடன் நிறுத்தி கொள்ள மாட்டார். நாம் உக்ரைனுக்கு தேவைப்படும் ஆயுத உதவி வழங்கினால் புதினை நிறுத்த முடியும்.

    நான் புதினுக்கு அஞ்ச மாட்டேன்.


    டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    தற்போது அமெரிக்காவில், அமெரிக்காவை கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் நிலைநிறுத்த நினைப்பவர்களுக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது.

    எனது வாழ்வு எனக்கு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம், ஆகியவற்றுடன் இணைத்து கொள்ள கற்று தந்துள்ளது. அந்த இரண்டிற்காகவே நான் போராடுவேன்.

    இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

    • போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் இருவருக்கும்தான் என்பது உறுதியாகி விட்டது
    • "பிறர் தன்னை கவனிக்க வேண்டும்" என டிரம்ப் ஏங்குகிறார் என பைடன் தரப்பு தெரிவித்தது

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி கொண்ட டிரம்பிற்கு போட்டி வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியை சேர்ந்த தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே, நேற்று, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதனையடுத்து அதிபர் பதவி போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும்தான் என்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    "நமது நாட்டு நலனுக்காகவும், அமெரிக்கா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் நானும் பைடனும் விவாதிக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை நான் விவாதிக்க அழைக்கிறேன். எந்த இடத்திலும், எந்நேரமும் விவாதிக்கலாம்" என டிரம்ப் தனது பிரத்யேக வலைதளமான "டிரூத் சோஷியல்" (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என ஏங்குகிறார் டிரம்ப். அதிபர் பிரசாரத்தில் ஒரு நிலையில் விவாதங்கள் நிச்சயம் நடைபெறும். ஆனால், பைடனை பார்த்தே ஆக வேண்டும் என டிரம்ப் விரும்பினால் அவர் அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை; எப்போதும் சந்திக்கலாம்" என பைடனின் பிரசார குழுவின் ஆணையர் மைக்கேல் டைலர் (Michael Tyler) தெரிவித்தார்.


    2020ல், அப்போதைய தேர்தல் காலகட்டத்தில் பைடன் மற்றும் டிரம்ப், இருவரும், 2 முறை விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்
    • புளோரிடாவில் டிரம்ப் மற்றும் மஸ்க் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார்.

    தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

    டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்தார்.

    மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.
    • இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். மேலும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். ஆனால் வேட்பாளர் தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், அதிபர் வேட்பாளர் போட்டியில் நான் நீடிப்பேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரசார நிதிக்காக பல தொழிலதிபர்களை டிரம்ப் சந்தித்து பேசி வருகிறார்
    • பாம் பீச் விமான நிலையத்தில் இருவரின் விமானங்களையும் கண்டதாக செய்திகள் வெளியாகின

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

    இந்நிலையில், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

    பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின.

    2024 அதிபர் தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

    2022ல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார்.

    இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும்  உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
    • வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 2023ல் இருந்தே அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதனால் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

    அதிபர் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    • வாஷிங்டனில் 62 சதவீத வாக்குகள் பெற்று நிக்கி ஹாலே வெற்றி.
    • 2020 அதிபர் தேர்தலில் வாஷிங்டனில் ஜோ பைடன் 92 சதவீத வாக்குள் பெற்றிருந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார்? என்பதற்காக தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும். ஒட்டு மொத்தமாக அதிக செல்வாக்கு பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

    தற்போது டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலே பின் வாங்காமல் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வாஷிங்டன் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிராம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்டு டிரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

    வாஷிங்டன் ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிக்கி ஹாலே 63 சதவீத வாங்குகள் வாங்கியுள்ளார். 2020 தேர்தலின்போது வாஷிங்டனில் டிம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலம்பியா, மிச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற இடங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 244 பிரதிநிகள் ஆதரவும், நிக்கி ஹாலேவுக்கு 43 பிரதிநிதிகள் ஆதரவும் உள்ளன.

    • டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே களம் இறங்கினார்
    • நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர் என்றார் டிரம்ப்

    இவ்வருடம் நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    அமெரிக்க தேர்தல் வழிமுறைப்படி, அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கட்சியினரிடம் உட்கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வென்றாக வேண்டும்.

    குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர், நிக்கி ஹாலேவும் களம் இறங்கினார். ஆனால், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

    தனது பிரசாரங்களில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, 2007லிருந்து 2011 வரை அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி (Nancy Pelosi) பெயரை குறிப்பிட்டு பேசியது விமர்சனத்திற்குள்ளானது.


    அதை குறிப்பிட்டு "மனதளவில் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இல்லை" என நிக்கி ஹாலே அவரை விமர்சித்தார்.


    நேற்று இடாஹோ, மிசோரி, மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் உட்கட்சி தேர்தல்களில் டிரம்ப் வென்றார்.

    இந்நிலையில் தென்கிழக்கு மாநிலமான வர்ஜினியாவில் (Virginia) தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

    நான் வேண்டுமென்றேதான் பைடன் பெயருக்கு பதிலாக ஒபாமா பெயரை குறிப்பிட்டு வந்தேன்.

    அதே போல் ஒரு "பறவை மூளைக்காரர்" (அறிவில் குறைந்தவர்) பெயருக்கு பதிலாக நான்சி பெலோசியின் பெயரையும் மாற்றி குறிப்பிட்டு வந்தேன். உங்களுக்கு யார் அந்த "பறவை மூளைக்காரர்" (நிக்கி) என்பது தெரியும்.

    அவர்கள் இருவரையும் ஒன்றாகத்தான் கருதுகிறேன்.

    ஒரே ஒரு வேற்றுமையை குறிப்பிட வேண்டுமென்றால், நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர்.

    இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டார்.

    • ஜோஸ் அன்டோனியோ இபார்ரா என்பவரை காவல்துறை கைது செய்தது
    • பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா கண்டதில்லை என்றார் டிரம்ப்

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம், அட்லான்டா.

    பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேக்கன் ஹோப் ரைலி (Laken Hope Riley) எனும் 22 வயது மாணவி காலையில் உடற்பயிற்சி ஓட்டத்திற்கு சென்றவர் திரும்பவில்லை.

    இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவிகள், புகார் செய்ததையடுத்து, காவல்துறை அவரை தேடி வந்தது. அவர்கள் தேடலில் மரங்களடர்ந்த பகுதியில் ரைலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    விசாரணையில், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஜோஸ் அன்டோனியோ இபார்ரா (Jose Antonio Ibarra) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரித்தனர்.

    தீவிர விசாரணையில் ஜோஸ், லேக்கனை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    ஜோஸ் தாக்கும் போது, சமாளித்த லேக்கன், உடனடியாக 911 எனும் அவசர உதவிக்கான எண்ணை லேக்கன் அழைக்க முயன்றதாகவும், அதில் பதட்டமடைந்த ஜோஸ் அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லேக்கனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஜோசுடன் தீவிரமாக போராடிய அறிகுறிகள் தெரிந்தன.

    வெனிசுயலா நாட்டை சேர்ந்த ஜோஸ், 2022ல் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பைடன் ரைலி மரணம் குறித்து ஏதும் பேசவில்லை.


    பைடனை குற்றம்சாட்டி டெக்சாஸ் மாநில பிரச்சார உரையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

    நிலைகுலைந்து போயிருக்கும் ரைலியின் பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பைடன் தடுக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

    பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை.

    தனது பிரச்சாரத்தில் பைடன், ரைலியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.

    ஆனால், நான் ரைலியை மறக்க மாட்டேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    ஜியார்ஜியா மக்களை ரைலியின் கொலைச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களினால் தோன்றும் பிரச்சனைகள், அமெரிக்காவில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×