என் மலர்
உலகம்

VIDEO: ஈரான் தொடக்கப் பள்ளி மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 51 சிறுமிகள் உயிரிழப்பு
- தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் 170 பெண் மாணவிகள் இருந்தனர்.
- கொல்லப்பட்ட சிறுமிகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள்
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 51 சிறுமிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஷஜாரே தயேபே பள்ளி இன்று காலை தாக்குதலுக்கு உள்ளானது.
பள்ளியின் மீதான வான்வழித் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் 170 பெண் மாணவிகள் இருந்தனர். கொல்லப்பட்ட சிறுமிகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காட்சிகள், பள்ளியின் இடிபாடுகளை உள்ளூர்வாசிகள் தோண்டி எடுப்பதைக் காட்டுகின்றன.
சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுவதையும், சிதைந்த கார் தெருவில் கிடப்பதையும் காணலாம். மக்கள் அலறி அழுது புலம்புவதையும், மற்றவர்கள் அதிர்ச்சியில் இருப்பதையும் காணலாம்.
தெஹ்ரான் மட்டுமின்றி புனித நகரமான கோம், கராஜ், இஸ்ஃபஹான் மற்றும் கெர்மன்ஷா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஈரானிய ஊடகங்கள் இன்னும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை, ஆனால் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இது மிகவும் எளிமையான செய்தி என்று அவர் கூறினார்.






