search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan"

    • முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தான் 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வென்றது.

    அல் அமேரத்:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.

    • மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
    • பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.

    2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.

    குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

    அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

     

    இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • தென் ஆப்பிரிக்கா அணியின் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி சோர்சி முறையே 9 மற்றும் 11 ரன்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 2 ரன்களில் ஏமாற்றினார்.

    இவருடன் களமிறங்கிய ஸ்டப்ஸ் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைன் (10) மற்றும் ஜேசன் ஸ்மித் (0) சொதப்பினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன வியான் முல்டர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஆன்டில் மற்றும் நிகிடி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளையும், காசன்ஃபர் மூன்று விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    • தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • பிரச்சாரம் தடைக்கான காரணம் குறித்து தலிபான் தகரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் ஆகும்.

    செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா. அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், மேலும் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.

    பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

    ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று பொய்யாகக் கூறப்படுகிறது.

    • கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.

    கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.

     


    மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    "எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
    • இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

    பாகிஸ்தானில் இன்று மதியம் 12.58 மணியளவில் 5.8 ரிக்கர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வானது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.நில அதிர்வைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறிய மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

    பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதனங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
    • நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.

    நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.

    2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி துணை பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார்.
    • இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.

    காபூல்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
    • பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி முடிகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.

    ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு அணியை அனுப்பாமல் இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசத்தை பின்பற்றும் என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு சென்று சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் நடந்த ஐசிசியின் ஆண்டு கூட்டத்தில் அதிகாரிகள் பிசிபி தலைவர் மோஷின் நக்வியை சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.
    • எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் உள்ள எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழு புகலிடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தும்" என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, `ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும் சாத்தியம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.

    தண்ணீரில் சேறு பூசும் முயற்சியாகும், இது யாருக்கும் பயனளிக்காது. முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தான் தலைமை தவிர்க்க வேண்டும்.

    எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
    • எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.

    இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.

    ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி தலா 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    ×