என் மலர்tooltip icon

    சென்னை

    • ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    • மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது.
    • பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.

    இதனால் காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது. அதேநேரம் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும் என்றார்.

    • சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
    • அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் 3.35 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 9ம் தேதிகளில் இருந்து இன்று மாலை வரை 3,35,150 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்தால், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

    பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்காக (ஜனவரி 16 - 19) அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


    • அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.

    உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது பண்ணைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளர்த்தெடுக்கவும், நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திறமையும், பக்தியும், விடாமுயற்சியும் நிலத்தை வளமாக்கி, வாழ்வை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்தை இந்நாளில் வணங்குகிறோம்.

    இத்துடன், மாட்டுப் பொங்கலில் பங்கெடுத்து, பண்டிகை உணர்வில் கலந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.

    பழங்கால பாரம்பரியங்களில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படும் பொங்கல் பண்டிகை, நமது பாரதிய ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது.

    காணும் பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி பண்டிகை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஒரே ஒருமைப்பாட்டின் பல்வேறு விதத்தை பிரதிபலிக்கிறோம் - அதுவே ஒரே பாரதம் உன்னத பாரதம்!

    இந்த பொங்கல் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி வழிநடத்தட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
    • இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.

    • பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.

    நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.

    அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.

    பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும் கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
    • நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:

    1. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.

    2. காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    3. நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    4. மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
    • மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

    * பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

    * பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

    * பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

    * கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    * மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

    கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.
    • தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது.

    28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 170-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.

    இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360

    12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-1-2026- ஒரு கிராம் ரூ.292

    12-1-2026- ஒரு கிராம் ரூ.287

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    10-1-2026- ஒரு கிராம் ரூ.275

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    • பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
    • 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையில் 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.

    பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

    15-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.

    சென்னை சங்கமத்தில் முதன்முறையாக 'கோ- ஆப்டெக்ஸ்' மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளைப் பறைசாற்றும்படி, இந்த ஆண்டும் நடைபெறவுள்ள 'சென்னை சங்கமம் - 2026' கலைவிழாவை, இன்று இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

    தமிழர் திருநாளை மண்ணின் கலைஞர்களோடு வண்ணமயமாக கொண்டாடிட, தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×