search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு"

    ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வினை எழுதி முடித்துள்ளனர்.

    மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

    பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே மாற்றி அனுப்பப்பட்டன. முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாடம் மற்றும் மொழி வாரியாக திருத்தம் செய்யப்படுகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 83 முகாம்களில் இந்த பணி நடைபெறுகிறது.

    8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ-மாணவிகள் விடைத்தாள்களை 76 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் 87 முகாம்களில் 87 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தேர்வுத்துறை விதித்துள்ளது. இதற்காக கையேடு வெளியிடப்பட்டு விடைத்தாள் முகாம் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணிகள் என்பதை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மண்டல முகாம் அலுவலர், முகாம் அலுவலர், முதன்மை தேர்வாளர் பணிகள், கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள், உதவி தேர்வாளரின் பணிகள் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பொதுவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டு எண் மிக முக்கியமாக மற்றும் இன்றியமையாத பணியாகும். மைய மதிப்பீட்டு பணியில் ஒவ்வொரு வேலையும் சுமூகமாகவும், சரியாகவும் மற்றும் கடும் மந்த தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    முகாம் அலுவலர் தனது மைய மதிப்பீட்டு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வேகமாகவும், துல்லியமாகவும், விழிப்புணர்வுடனும் செய்யப்பட்டு முகாமினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். முகாம் அலுவலரே முகாம்களுக்கு முழு பொறுப்பு. மைய மதிப்பீட்டு பணி நடைபெறும் முகாம்களுக்கு வெளிநபர் யாரையும் அனுமதிக்க கூடாது.

    முகாமில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிகளும் முகாம் அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    விடைத்தாள்கள் 10 நாட்களுக்குள் திருத்தி முடிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கும். ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×