என் மலர்
இந்தியா

பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு காப்பியடிக்க உதவிய பெற்றோர்- டிரோன் காட்சியில் சிக்கினர்
- டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது.
- கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. அங்குள்ள சவுசாலாவில் ஒரு மையத்தில் ஆங்கில தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வில் முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நூதன முயற்சியை மேற்கொண்டனர்.
அதன்படி தேர்வு மையத்தின் மேல் டிரோனை பறக்க விட்டு கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது சில பெற்றோர்களும், உறவினர்களும் தேர்வு மையத்தின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டு, மாணவர்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப முயற்சிப்பது டிரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. சிலர் ஜன்னல்களில் ஏறிச் செல்வதையும் காண முடிந்தது.
டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது. தேர்வு மைய வளாகம் திறந்த வெளியில் இருந்ததால் வெளியில் இருந்து மாணவர்களை அணுகுவதை எளிதாக்கியதாகவும், பெற்றோர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். டிரோன் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவும் டிரோன் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.






