search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State education policy"

    • குழுவினர் மாநில கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை தயார் செய்து உள்ளது.
    • அரசு பள்ளிகளில் 5 வயதில்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

    சென்னை:

    மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த கல்விக் கொள்கையை வடி வமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை தயார் செய்து உள்ளது. இந்த குழு குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான வயதை 5-ஆக நிர்ணயித்துள்ளது.

    3 முதல் 5 வயது வரை 'பிளே ஸ்கூலில்' தான் சேர்க்க முடியும். 1-ம் வகுப் பில் இருந்து தான் எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும் அடிப்படை கல்வியை தொடங்க வேண்டும். ஏற்க னவே அரசு பள்ளிகளில் 5 வயதில்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

    ஆனால் தனியார் மற்றும் நர்சரி பள்ளிகளில் 3 வயதிலேயே குழந்தைகள் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அடிப்படையில் வைத்தே 5 வயதில்தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பொதுவான விதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பொதுவான வயது மட்டுமல்லாமல் 10 மற்றும் 12 மற்றும் 3 வருட பட்டப்படிப்பு வகுப்புகளில் தேர்வுகளில் மறு சீரமைப்பு, ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவையும் இந்த பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான இளங்கலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு, மும்மொழி கொள்கையை அமுல்படுத்து வது 3,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, நான்கு ஆண்டு கல்லூரி பட்டப் படிப்பு ஆகியமுறைகளை நிராகரித்துவிட்டனர்.

    வருகிற 30-ந் தேதி நடைபெறும் மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட உள்ளது.

    • 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
    • சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

    சென்னை:

    அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

    அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.

    கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.

    சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.

    மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது.
    • மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக புகார்

    சென்னை:

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகுவதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
    • மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நாளை 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்துக்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமானது மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்வியாளா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொள்ளலாம்.

    கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் நபா்கள் தங்களது கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து கூட்டத்தில் ஒப்படைக்கலாம்.இந்த கருத்துக் கேட்புக் கூட்டமானது திருப்பூா் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்சிபி நகரவை மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து ஆணை.
    • மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்டங்களில் நடைபெறும்.

    நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் தனித்துவமான (Distinct) மாநில கல்விக் கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை மேற் கொண்டு, நீதியரசர் (ஓய்வு) த.முருகேசன், தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.

    மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்,

    அல்லது Centre for Excellence Building,3வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற அலுவலக முகவரிக்கு 15.09.2022ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.

    மாநிலக் கல்விக் கொள்கைக்குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து 15.10.2022 ஆம் தேதி வரை கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவ்வாறே கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும் 20.09.2022 அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும்.

    இதேபோல், 21.09.2022 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அக்டோபர் 3வது வாரம் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார்.
    • அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பின் மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.

    இந்நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×