என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#அன்புமணி ராமதாஸ்"

    • தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

    "தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

    ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் பெரும் அநீதியாகும்.

    ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அது குறித்த எந்தக் கவலையும், அக்கறையும் இல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது திமுக ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இதுகுறித்த கவலையே இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு விழித்துக் கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
    • ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மோசடியானது. அரசு ஊழியர்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டம் கூட திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாது என்று தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

    பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடியான திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அதனால், ஏற்படும் பலன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் என்று பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. அதனால் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று அஞ்சிய அரசு ஊழியர்களில் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, திட்டத்திற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று வினா எழுப்பியது. அதற்கு 2 வாரங்களில் அரசாணை வெளியிடப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்படி நேற்றைய தேதியிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தான் இப்போது அரசாணையாக வெளியிடப்பட்டது. ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் எழுப்பிய எந்த வினாவுக்கும் அதில் விடை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; ஏமாற்று வேலை; யாருக்கு பயனளிக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் 01.01.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விதிகள் தனியாக வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 40 நாள்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இதற்கான விதிகள் வகுக்கப்பட வாய்ப்பில்லை.

    எனவே, திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்பதை அரசாணையில் திமுக அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம் ஆகும். இதற்கான தண்டனையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு தருவார்கள்.

    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
    • திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

    ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.

    திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.

    தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று கூறியுள்ளார். 

    • பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பா.ம.க. வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிய உத்தேச பட்டியலும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

    திருப்போரூர், காஞ்சிபுரம், செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.

    இதில் கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

    • அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
    • அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.

    * அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.

    * அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறியதாவது:

    * அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.

    * ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
    • அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ம.க.வை பொறுத்தவரை தனிமனிதன் ஆரம்பித்த கட்சி, இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

    * அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.

    * கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு இருக்கிறான். தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை.

    * கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி, பா.ம.க. தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.

    * அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

    * அன்புமணி செய்த துரோகத்தை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

    * அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்னதாகவே தெரியாமல் போய்விட்டது.

    * தந்தைக்கு துரோகம் செய்த கும்பலுக்காக வாக்களிக்க வேண்டும் என நினைத்து அன்புமணி தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

    * நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி, அந்த கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஇஅதிமுக- பாமக கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
    • நானும், மருத்துவர் அன்புமணி அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!

    அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!

    மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அஇஅதிமுகநல்லாட்சியினை அமைப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.
    • மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.

    சென்னை:

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

    * அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.

    * மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

    * இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி.

    * திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    * எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.

    இதன்பின்னர் பேசிய அன்புமணி,

    * பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.

    * மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.

    * வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார். 

    • சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.

    இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது.

    சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் பா.ம.க. போட்டி என்பது குறித்து இன்றே தெரிந்து விடும்

    • கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
    • ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படவில்லை.

    கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 4 லட்சம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உழவர்களை ஏமாற்றுவதையே தி.மு.க. அரசு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. உழவர் பெருமக்கள் உழவர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?
    • நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில் , விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.

    அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களும், சிறிய காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர்களின் வழிகாட்டுதலில் அதற்கான துணை மருத்துவப் பணியாளர்களும் தான் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதை மீறி மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?

    நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதை விட கொடுமையானது இது தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பதில் தான். மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாகவும், அவர் சிறப்பாக சிகிச்சை அளித்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.

    கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

    இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார்.

    ×