என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு... தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு! - அன்புமணி
- தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக அரசு முந்திக் கொண்டு இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் எல்லாம் களைந்து விட்ட நிலையில், தமது நாடகங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில் தான் முதலமைச்சர் வசனம் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா? என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார். என்ன செய்தாலும் மக்களின் கோபம் குறையாது என்பதே உண்மை.
தமிழ்நாட்டு மக்களின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் அக்கறை என்னவென்பதையும், அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவில்லை. அதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,'' வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால், எப்போதிலிருந்து வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்று தேதியை சொன்னோமா?'' என அதிகாரத் திமிரில் திமுக அமைச்சர்கள் வினா எழுப்பியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.
அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தையும் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இன்னும் மறக்கவில்லை.
பொங்கல் பரிசு வழங்குவதிலும் திமுகவின் அணுகுமுறை மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும், தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள். இந்த நாடகங்கள் இனியும் தமிழகத்தில் எடுபடாது.
தமிழ்நாட்டில் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், கிட்டத்தட்ட 150% அளவுக்கு சொத்து வரியும், குடிநீர் வரியும் உயர்த்தப்பட்ட போதும், ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்திய போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது திமுகவுக்கு வராத அக்கறை இப்போது வந்திருப்பது விந்தை தான். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இவை தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பதையும், இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தை பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள். மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






