என் மலர்
நீங்கள் தேடியது "PMK"
- அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும்.
- பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ம.க. கட்சி தொடங்கி 35 ஆண்டு காலம் ஆகிய நிலையில் எத்தனையோ போராட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். பா.ம.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் தீர்வு கண்டு அதிகாரத்திற்கு வந்து செய்வதை விட அதிகாரம் வருவதற்கு முன்பே முதலமைச்சரை கையெழுத்து போட வைப்பது தான் சாதனை. அதை தான் பா.ம.க. செய்து வருகிறது.
வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு கண்டிப்பாக வரும். அதற்கு முன்னோட்டம் தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஆகும். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றேன். அனைத்து தரப்பு மக்களும் அடுத்தடுத்து பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள்.
ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார். நீங்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெற போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாம் அனைவரும் களத்தில் இறங்கி திட்டமிட்டு பணியாற்றி பா.ம.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
- தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.
தருமபுரி:
தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
கூட்டத்தில் மேற்கு மாவட்ட பா.மக. செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் 4 இட ஒதுக்கீடுகளையும் இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளையும் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும்.
பாராளுமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. போட்டியிடுகிறது.
நாம் அனைவரும் களத்தில் இறங்கி திட்டமிட்டு பணியாற்றி பா.ம.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தருமபுரி தொகுதி தமிழகத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என நிரூபித்து வெற்றி கண்டுள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு பிரசாரம் செய்து களப்பணி ஆற்றி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து பா.ம.க.வின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இளைஞர் சக்தியை கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும் .
தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் என்னுடைய சொந்த மாவட்டம் தமிழகத்திலேயே முதல் மூன்று வரிசையில் 3-வது இடமாக தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.
காவிரி உபரி நீர் திட்டம் குறித்து தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினிடமும் நேரில் சந்தித்து 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் கையெழுத்து கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கினேன். அவர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.
தருமபுரி மாவட்டத்திற்கு ஒரே ஒரு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை மட்டும் கொண்டு வந்தால் போதும் மாவட்டம் குடிநீர் பிரச்சனை விவசாயம் வேலைவாய்ப்பு அனைத்தையும் பெற்று விடும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை அறிவித்தார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் நின்றுவிட்டது.
தருமபுரி மாவட்டம் மக்களின் நலனில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு அக்கறை இல்லை பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தான் உடனே நிறைவேற்றப்படும். நிச்சயமாக நடக்கும்.
தருமபுரி மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை நிச்சயமாக ராமதாஸ் அவர்கள் நிறைவேற்றுவார். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் செமி பைனல் என்றால் சட்டமன்றத் தேர்தல் பைனல் போட்டி ஆகும் என தெரிவித்தார். தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை புதிய ரெயில் பாதை திட்டம் நிறைவேற்ற 19 முறை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தி இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்தது தான்.
- மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 2008-10 முதல் 2011-13 வரை படித்து பட்டயம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை வழங்கப்படாததும், அதைக் கண்டித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வரும் 11-ம் நாள் சென்னையில் போராட்டம் நடத்தவிருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கின்றன.
தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்தது தான். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது.
- தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது,போதை பொருட்கள் அதிகமாக உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலக அளவில் பதக்கங்களை வாங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். குறிப்பாக கிராமபுற மாணவ-மாணவிகள் அதிகமாக பங்கேற்க தொடங்கி உள்ளனர். தமிழக அரசு இன்னும் ஊக்குவிக்க வேண்டும்.
நீண்ட காலமாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக 90 சதவீதம் முடிவடைந்தும் இன்னும் மக்கள் பபண்பாட்டிற்கு வராமல் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மழை கிடைத்து உள்ளது. உடனடியாக அத்திகடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு-புண்ணம்பழா திட்டம், காவிரி குண்டாறு திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் மூடப்பட்டு உள்ளன. விசைத்தறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் கூறியும் அதனை ஏற்க மறுக்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு 7 ரூபாய் மட்டுமே தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பு அணைகள் நாங்கள் கேட்டோம். ஆனால் தற்போது 10 மணல் குவாரிகளை உருவாக்கி உள்ளது இந்த அரசு.
என்.எல்.சி. கடலூர் மாவட்டத்தின் பிரச்சனை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சனை. தமிழக அரசு 67 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்ளை என்.எல்.சி கொடுத்து உள்ளது. விளை நிலங்களை அழித்து மின்சாரம் தேவையில்லை.
காற்றாலை, நீர் மூலமாக தயாரிக்கலாம். தமிழகத்தின் நான்காவது நெல் உற்பத்தி பகுதியினை தற்போது தமிழக அரசு என்.எல்.சி. நிர்வாகத்தின் மூலம் விளை நிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது குறித்து உள்ள சாத்திய கூறுகளை பார்க்க வேண்டும். வாக்கு எந்திரங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே உள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஒரே நேர்த்தில் நடத்த தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லை.
இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன பரிந்துரை கூறுகிறதோ அதற்கு பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம். விரைவில் கூட்டணி குறித்து எங்களது முடிவை அறிவிப்போம்.
நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தகுதியான மருத்துவரை நீட் தேர்வு உருவாக்கவில்லை. மருத்துவ படிப்பு என்பது வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீட் தேர்வு குறித்து கவர்னர் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க கூடாது. கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது,போதை பொருட்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், அந்தப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களின் தமிழ் இலக்கியப் படிப்புக்கு தடை போடும் இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என ஏறக்குறைய 50 கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியம் பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பின் சிறப்புகளில் ஒன்று, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியங்களை மட்டுமே பாடமாகக் கொண்டது என்பது தான். ஆனால், இப்போது மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது தமிழுக்கு செய்யும் அநீதியாகும்.
எனவே, பி.லிட் படிப்புகளில் சிறப்புகளையும், அது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களையும் புரிந்து கொண்டு, பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.
- டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.
சகல கட்சிகளையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் பா.ம.க.வின் கூட்டணி வியூகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கணித்துவிட முடியாது.
2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம், முன்னேற்றம்-அன்புமணி என்ற முழக்கத்தோடு பா.ம.க. தனித்து போட்டியிட்டு ஏமாற்றத்தைதான் பெற்றது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. தற்போது அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கி றதா? என்றால் டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என்கிறார்.
என்ன தான் நினைக்கிறாராம் அன்புமணி? 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மந்திரி சபைக்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறாராம். தமிழகத்தில் வலிமையான தலைவர்கள் இல்லாததால் எங்கள் சின்னவர் போடும் கணக்கும் சரியாக இருக்கலாம் என்கிறார்கள் பாட்டாளி சொந்த ங்கள்.
- குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர்.
- 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்தின் மூலமாக குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணிக்கு சென்றனர். அதற்காக சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால் ரூ.1.25 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.
அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம், அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடிவிட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர்.
குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற காவலரைத் தான் கஞ்சா கும்பல் கத்தி முனையில் விரட்டியுள்ளது.
- தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த கஞ்சாவுக்கு அடிமையான மூன்று இளைஞர்கள், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் திருமாவளவன் என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற காவலரைத் தான் கஞ்சா கும்பல் கத்தி முனையில் விரட்டியுள்ளது.
தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; கஞ்சா போதையில் காவலரையே துரத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால் காவல்துறையினர் நடத்தும் கஞ்சா வேட்டையால் என்ன பயன் என்று தெரியவில்லை.
அண்மையில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு'' என்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைபொருட்கள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறினார். அவர் உண்மையாகவே சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்.
- இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ந்தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர்.
கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.