என் மலர்
நீங்கள் தேடியது "Election commission"
- தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி :
இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது இந்திய தேர்தல் கமிஷன் புதிய பட்டியலை தயாரித்து உள்ளது.
இதன்படி நாட்டில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன
மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.
இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழ்நாட்டில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்படாத கட்சிகள் என 218 மாநிலக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.
- 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது.
- ஒரு தொகுதிக்கு ரூ.1¾ கோடி செலவாகி இருந்தது.
பெங்களூரு :
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு வேலைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இந்த நிலையில், 224 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு தொகுதிக்கு ரூ.1¾ கோடி செலவாகி இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடி அமைத்தல், ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.160 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருந்தது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.75 லட்சம் செலவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போது ரூ.440 கோடி செலவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான செலவை கர்நாடக அரசு தான் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தது. அந்த பணத்தை தான் தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்காக செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் 2 கட்ட அமர்வுகளில் ஆலோசித்தனர்.
- கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி :
அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த முடிவுகளை இன்று அல்லது நாளை டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் கடந்த 28-ந்தேதி அன்று நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.
- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
- விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை.
புதுடெல்லி:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.
அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தரபிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது:-
பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட்டு 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத்திருப்போம்.
விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை. எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் சட்டநிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
- ராகுல் காந்தியின் வழக்கை காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகலாம்.
திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவ தாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும், வயநாடு தொகுதியின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. அங்கு போட்டியிட்ட ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் அவர் தோல்வி அடைந்ததால் வயநாடு தொகுதி எம்.பி.யாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில்தான் 2019-ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து பேசினார். இதுபற்றி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கோர்ட்டில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.பூர்னேஷ்மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததும் மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951-ன் படி அவரது பதவியை பறிக்க பாராளுமன்ற செயலகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து நேற்று பிற்பகல் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.
ராகுல் காந்தியின் பதவி பறிபோனதால் அவரை எம்.பி.யாக தேர்வு செய்த வயநாடு தொகுதியும் காலியானது. இதுவும் பாராளுமன்ற செயலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இப்போது வயநாடு தொகுதிக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு ராகுல் காந்தி போட்டியிட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதன்படி ராகுல் காந்தி 2 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். அவர் போட்டியிட வேண்டும் என்றால் இந்த தண்டனையை மேல் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியும்.
இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுமா? அல்லது மேல் கோர்ட்டின் முடிவுக்கு காத்திருக்குமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு காரணம், கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது பைசல் மீதான வழக்கில் கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.
கோர்ட்டு உத்தரவு வெளியானதும் உடனடியாக பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே கேரள ஐகோர்ட்டில் முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து முகமது பைசலின் தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த இடைதேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இதுபோல உத்தரபிரதேசத்தின் ராம்பூர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆசம்கானும் ஒரு வழக்கில் தண்டனை பெற்றார். உடனே அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதற்குள் ஆசம்கான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவின் முடிவு வரும்வரை அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதையடுத்து அங்கும் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் வாபஸ் பெறப்பட்டது.
இப்படி பல முன்னுதாரணங்கள் இருப்பதால் ராகுல் காந்தி விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் காத்திருக்கத் தான் வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதுபோல பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் சட்டநிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேல் கோர்ட்டின் முடிவை தெரிந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவதே சரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இப்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதம் 16-ந்தேதி வரை உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தியின் வழக்கை காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகலாம். மேலும் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் விவகாரத்தில் அவரது தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது போல ராகுல் காந்தியின் தண்டனையையும் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தால் தேர்தல் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.
- நிரந்தரமாக சின்னங்கள் ஒதுக்குவதற்கு இந்த அங்கீகாரம் அவசியமானது.
- 6 கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
சென்னை:
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் வாங்கிய ஓட்டுகளின் சதவீதத்தின் அடிப்படையில் அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி வருகிறது.
நிரந்தரமாக சின்னங்கள் ஒதுக்குவதற்கு இந்த அங்கீகாரம் அவசியமானது. தேர்தலில் 6 சதவீதத்துக்கு கீழ் ஓட்டு வாங்கிய கட்சிகளாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கும் மாநில கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மிசோரம் மக்கள் மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கூட்டணி, ராஷ்டீரிய லோக்தளம் பாரத ராஷ்டீரிய சமிதி, ராஷ்டீரிய லோக்தளம் ஆகிய 6 கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதாவது மாநில கட்சி (பிரிவு 6ஏ) என்ற அங்கீகாரத்திற்காக கடந்த பொதுத் தேர்தலில் நிறுத்திய வேட்பாளர்கள் செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 6 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த நோட்டீஸ் சென்றிருந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று கட்சி வாரியாக விசாரணையை தொடங்கி உள்ளது. இதில் பா.ம.க. சொல்லும் விளக்கத்தை பொறுத்து அதன் அங்கீகாரம் தொடருமா? என்பது விரைவில் தெரிய வரும்.
- நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
- நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை.
புதுடெல்லி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னை :
தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.
அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.
புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
- திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.
டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:
ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.
திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.