என் மலர்
நீங்கள் தேடியது "Uttar Pradesh"
- நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
- உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், சிறுமி ஒருவரை கேலி செய்த சிறுவர்களின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்களுக்குச் நல்லொழுக்கம் கற்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களது 4 தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் பேசுகையில், "இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். சிறுவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்காத பெற்றோர்களே இதற்குப் பொறுப்பு," என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
- டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.
வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.
ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
- வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷாம்லியில் கந்த்லா எல்லைக்குட்பட்ட காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா சொந்த ஊர் சென்றுள்ளார். ஹிஜாப் அணியாமல் அவர் வீட்டை விட்டு சென்றதால் பரூக் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாஹிரா வீடு திரும்பியதும் இதுகுறித்து பரூக் வாக்குவாதம் செய்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 10 ஆம் தேதி பரூக், வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தடுக்க முயன்ற 12 வயது மகளையும் சுட்டுக்கொன்றார். பின்னர், தனது 5 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துவிட்டு, கடந்த சில நாட்களாக எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் விசாரணையின் போது, தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் பரூக் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதி நெருக்கடி மற்றும் பணப் பிரச்சனைகளால் தம்பதியிடையே ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே தாஹிராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது.
- பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தார்.
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். பதவி விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திரா, பங்கஜ் சவுத்ரியிடம் பாஜக கொடியை முறையாக ஒப்படைத்தார்.
மாநிலத் தலைவரின் நியமனத்துடன், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங், சூர்யபிரதாப் ஷாஹி, சுரேஷ் கன்னா, முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா ஆகியோர் ஆதரித்தனர்.
மத்திய நிதித்துறை இணையமைச்சரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த குர்மி தலைவருமான பங்கஜ் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார்.
- இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
- முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.
உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார்.
- நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை.
- 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இதன்போது பணிச்சுமை மற்றும் மூத்த அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல BLOக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஷ் சிங் (46) தற்கொலை செய்து கொண்டார்.
உதவி ஆசிரியரான சர்வேஷ் சிங், அக்டோபர் 7 ஆம் தேதி பிஎல்ஓ ஆக நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகளுக்கான அவரது முதல் பணி இதுவாகும்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், சர்வேஷ் சிங், "கடினமாக உழைத்தாலும், என் வேலையை முடிக்க முடியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. மற்றவர்கள் வேலையை முடித்து வருகிறார்கள். அம்மா, சகோதரி என்னை மன்னித்து விடுங்கள். எனது மகள்களை பார்த்துக்கொள்ளுங்கள். நான் தேர்தல் பணியில் தோற்று விட்டேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வேஷ் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாப்லி தேவி அதிர்த்துப்போனார். தவலறிந்த போலீசார் சம்பவ இடதிற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் இரண்டு பக்க கையால் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே நாடு முழுவதும் 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
- பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.
உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.
சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.
நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.
பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.
போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.
இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
- மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
- இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், வீட்டில் திருமணம் நடப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை 4 நாட்கள் ப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரியான பூவல் குப்தா என்பவரின் மனைவி ஷோபா தேவி, நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவியின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதலில் இளைய மகனிடம் பேசியபோது, அவர் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்த பிறகு பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அவர் முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து, "இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் உடலைக் கொண்டு வந்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக்கொள்கிறேன். அதுவரை உடலை டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்" என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார்.
முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் நேரடியாக மூத்த மகனிடம் பேசியபோதும், அப்போதும் அதையே கூறியுள்ளார்.
இதையடுத்து, ஊழியர்கள் மற்ற உறவினர்களைத் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவியின் மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர்.
ஆனால், மூத்த மகன் தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.
- 5 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
- எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் கடந்த நவம்பர் 16 அன்று இடிந்து பாறைகள் விழுந்ததில் 15 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்புப்பணிகள் கைவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






