என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்துள்ளது.
- கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது
கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜாமின் பெற்றுத்தரும் மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவும் வகையில், தொழில்முறை ஜாமின் தாரர்களாக இந்தக்குழு செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுதந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த வழக்கில், கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய எஸ்பி சுபோத் கவுதம், பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமினில் வெளியே உள்ளார். இதில் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவரது கூட்டாளியான விஸ்வநாத் பாண்டே மற்றும் பிரவீன் தீட்சித் ஆகியோர் தலா இரண்டு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டதாகவும், மற்ற கூட்டாளிகளான தர்மேந்திரா இரண்டு வழக்குகளிலும், பிங்கு ஒரு வழக்கிலும், அமித் மூன்று வழக்குகளிலும் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- மதுராவில் சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
லக்னோ:
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் பாலிவுட் நடிகையும் மாடலுமான சன்னி லியோன் கலந்து கொள்ள இருந்த புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
மதுரா ஒரு புனித நகரம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நகரத்தில் அனுமதிக்க முடியாது என மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, நிகழ்வை ரத்துசெய்ய ஏற்பாட்டாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #SunnyLeone என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
- அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
- பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த கிராம மக்கள் 200 பேருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வின்போது, வந்திருந்தவர்களுக்கு உணவுடன் ரய்தா எனப்படும் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.
அந்த பச்சடியை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது. அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் 26 அன்று, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. அது ரேபிஸ் நோய் அறிகுறிகளுடன் இறந்ததைக் கண்ட கிராம மக்கள், அதன் பாலைக் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர்.
தகவலறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், "பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை யாருக்கும் பாதிப்பு அறிகுறி தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
லக்னோ:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகி உள்ளது. வரும் 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் இடம் பெறுகிறார்கள், 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1 கோடிக்கு அதிகமானோர் தேர்தல் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட 12 ஆவணங்களைக் காட்டி பெயர் சேர்க்க முறையிட தகுதியானவர்கள்.
ஜனவரி 1 முதல் அவர்கள் இதுகுறித்து முறையிட படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
- பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
- இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். அந்த 10 நிமிடங்களில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்து காட்ட வேண்டும். இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.
மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் வகையில் செய்தித்தாள்களில் இருந்து 5 கடினமான சொற்களை தேர்வு செய்து இன்றைய சொல் என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். செய்தித்தாள் தலையங்கத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் குழு விவாதம் நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத்திறனை மேம்படுத்தவும், சமூக விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- 2014-க்கு முன்பு, சுமார் 25 கோடி மக்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
- ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளது
இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த நாளான இன்று, இந்திய பிரதமர் மோடி லக்னோவில் ராஷ்டிர பிரேர்னா ஸ்தல்-ஐ (சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் நினைவுச் சின்னம்) திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் வாய்ப்பு எங்கள் அரசு கிடைத்ததில் பாஜக பெருமை கொள்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு நேர்மறையான சாதனையையும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சொந்தமாக்கும் ஒரு போக்கு எவ்வாறு உருவானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2014-க்கு முன்பு, சுமார் 25 கோடி மக்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தனர், ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு காரிடார், பாதுகாப்பு உற்பத்திக்கு உலக அளவில் அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
- பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவிடம் வளாகத்தில் பா.ஜ.க. சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் தலைவர்களின் சிலைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-
பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். மேலும், இங்கு அமைக்கப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் அளித்தவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்,'' என்று கூறியுள்ளார்.
- 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், சிறுமி ஒருவரை கேலி செய்த சிறுவர்களின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்களுக்குச் நல்லொழுக்கம் கற்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களது 4 தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் பேசுகையில், "இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். சிறுவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்காத பெற்றோர்களே இதற்குப் பொறுப்பு," என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- லக்னோவில் நடக்க இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனியால் கைவிடப்பட்டது.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நடைபெற இருந்த 4-வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வுசெய்த பிறகே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைவிட்டனர். 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா என ஆய்வு செய்தனர்.
ஆனால் கடும் பனி நிலவியதால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பிசிசிஐ மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
போட்டி நடக்காததால் டிக்கெட்டுக்கு உரிய பணத்தை திரும்ப வழங்குவது இந்திய கிரிக்கெட் வாரியமா அல்லது உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் டிக்கெட்டுக்கு உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமே முழு பொறுப்பு என கிரிக்கெட் வாரியம் கூறியது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்ற ரசிகர்களுக்கு அதற்குரிய பணம் அதே வழியில் திரும்ப வழங்கப்படும். அது தொடர்பான விவரங்கள் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு அவர்களது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் பிரேம் மனோகர் குப்தா தெரிவித்தார்.
கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் வரும் 20 முதல் 22-ம் தேதி வரை லக்னோ மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து தேவையான விவரங்களைத் தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
- காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
- வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷாம்லியில் கந்த்லா எல்லைக்குட்பட்ட காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா சொந்த ஊர் சென்றுள்ளார். ஹிஜாப் அணியாமல் அவர் வீட்டை விட்டு சென்றதால் பரூக் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாஹிரா வீடு திரும்பியதும் இதுகுறித்து பரூக் வாக்குவாதம் செய்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 10 ஆம் தேதி பரூக், வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தடுக்க முயன்ற 12 வயது மகளையும் சுட்டுக்கொன்றார். பின்னர், தனது 5 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துவிட்டு, கடந்த சில நாட்களாக எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் விசாரணையின் போது, தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் பரூக் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதி நெருக்கடி மற்றும் பணப் பிரச்சனைகளால் தம்பதியிடையே ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே தாஹிராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பி ரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் விலகியுள்ளார். கடந்த ஆட்டத்திலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணிக்கு தேர்வாகியுள்ளார்.
31 வயதான ஷாபாஸ் அகமது 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நாளைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் 3-வது போட்டியில் அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் கடந்த போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் 34 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
- 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.






