என் மலர்
நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.

சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.
ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-
நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.
மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
- பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன.
- ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 15-ந்தேதி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளிநாட்டுக்கு சென்றதால் அவரை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும், அரசியலமைப்பை ஒழிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் மாணவர்களுடனான உரையாடலின் போது அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நமது அரசுத்துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சி.பி.ஐ, உளவுத் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜ.க. ஒரு ஆயுதம் போல் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக சி.பி.ஐ, அமலாக்கத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன. ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி தான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாக்கியது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாக பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க. இதை இப்படி பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமானதாக பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும். அரசியல் அமைப்பை ஒழிப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. மாநிலங்கள் இடையேயான சமத்துவம் என்ற கருத்தை ஒழிப்பது, அரசியலமைப்பு மைய கருவான ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரே மதிப்பு உண்டு என்ற கருத்தை ஒழிப்பது என்பது பா.ஜ.க. நிலைப்பாடாகும்.
நாங்கள் பா.ஜ.க.வை எதிர்த்து போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற துறைகளை காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம்.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடக்கும் போது எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ள வழிகளை கண்டறிய வேண்டும். இந்திய நிறுவன கட்டமைப்பை கைப்பற்றியதற்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தேர்தல் எந்திரத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதலை பற்றி பேசும்போது அதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் அது உண்மையில் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. உலக ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை கொள்கையுடன் உடன்படவில்லை. அந்த கேள்வியில் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் சில விஷயங்களில் போட்டிகள் உள்ளன. அவை தொடரும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருப்பதை பாராளுமன்றத்தில் பார்த்து இருப்பீர்கள்.
நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் உடன்படாத சட்டங்கள் குறித்து பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
- இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.
மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.
இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.
டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
- உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
- கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.
விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.
விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.
- "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?
- டெல்லி ஒரு gas chamber-ஆக மாறி உள்ளது
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வரும்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் நிலைமை சீரடையும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஒரு gas chamber-ஆக மாறியிருக்கும்போது பிரதமர் மௌளம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மாசுபாடு குறித்த பொது விவாதத்திற்கு தானும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தயாராக இருப்பதாகவும், பாஜக தனது அமைச்சர்களை அனுப்பவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
"இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்ட அவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் பஞ்சாபில் பராலி எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி இவ்வளவு கடுமையான மாசுபாட்டைக் கண்டதில்லை என்றும், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜகவின் கவனம் AQI புள்ளிவிவரங்களை நிர்வகிப்பதில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,
'ஓமனில் பிரதமர், ஜெர்மனியில் எதிர்க்கட்சித் தலைவர், மாசில் தேசத்தின் தலைநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று ராகுல் காந்தி பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
- காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இன்று அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார். அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை ராகுல் காந்தி நடத்தவுள்ளார்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி முனிச்சில் உள்ள BMW உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். குறிப்பாக ராகுல் காந்தி, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டி.வி.எஸ். நிறுவனத்தின் 450சிசி மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பார்த்தார். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதனிடையே பேசிய ராகுல் காந்தி, "வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பாகத் திகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. நாம் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமானால், நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.
- கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர்மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
"மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது அதீத வெறுப்பு உள்ளது. ஒன்று மகாத்மா காந்தியின் கொள்கைகள், மற்றொன்று ஏழைகளின் உரிமைகள்.
மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது. இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது, மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் இருந்தது.
இருப்பினும், இந்தத் திட்டம் பிரதமர் மோடிக்கு எப்போதும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, அவரது அரசு இதைத் திட்டமிட்டு பலவீனப்படுத்த முயன்று வருகிறது. இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டது:
1. வேலைவாய்ப்பு உரிமை - வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.
2. கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி.
3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.
இப்போது இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டு கருவியாக மாற்ற முயற்சிக்கிறார்.
1. பட்ஜெட், திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும்.
2. செலவுகளில் 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.
3. நிதி இல்லாவிட்டால் அல்லது அறுவடை காலங்களில், தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.
இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை நேரடியாக அவமதிப்பதாகும். வேலையின்மையால் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்ததோடு மட்டுமில்லாமல், தற்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது.
தெரு முதல் நாடாளுமன்றம் வரை பாஜக அரசின் மக்கள்விரோத மசோதாவை எதிர்ப்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் (டிசம்பர் 16) ஏற்க மறுத்து நிராகரித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக, மத்திய முகமைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.
மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீது காந்தி குடும்பத்தினர் உறுதியாக நிற்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் நோக்கில் இருக்கும்போதிலும், உண்மை மற்றும் அச்சமின்மை தங்கள் பக்கம் இருப்பதால், சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், என் சகோதரர் ராகுல் காந்தி நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பழிவாங்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே மாற்றி வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.
- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
அண்மையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் புகாரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
எப்.ஐ.ஆர் (FIR)பதிவு செய்யாமல் ஈ.சி.ஐ.ஆர் (ECIR) பதிவு செய்து அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கைத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
- இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.
அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
- புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.

பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.






