என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    • தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பான வழக்கில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஜெய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கேஷ் பாகர் மற்றும் மனீஷ் யாதவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஜெய்ப்பூரின் முக்கிய சாலையான ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    2014 ஆகஸ்ட் 13 அன்று, இந்த குழு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சவுத்ரி உட்பட, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையை சுமார் 20 நிமிடங்கள் முழுமையாக மறித்ததால், கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

    இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவியல் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தற்போதைய சட்டத்தின்படி, எம்எலஏக்களின் பதவி, தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும். இதனால், இந்தத் தீர்ப்பு இரு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதிக்காது.

    • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உயிரிழந்தார்.
    • கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றவர்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜ்வீர் சிங்கின் புகைப்படத்தை அவரது கையில் பிடித்தபடியே நடந்து வந்தார்.

    ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றார். கடைசியாக அவர் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமானப் படையில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார்.

    ராஜ்வீர் சவுகான் 2011 இல் தீபிகாவை திருமணம் செய்தார். தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். 14 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.
    • விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    HPCL நிறுவனத்தின் இணைப்பில் கசிவு இருப்பதாக கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. ரோந்துப் பணியின்போது மட்டுமே கசிவு ஏற்பட்ட இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால் அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    பக்ரு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பூட்டிய வீட்டைக் கவனித்தனர். இரவில் வீட்டில் சிலர் நடமாட்டம் இருந்தது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது.

    சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் உரிமையாளரை அழைத்து, வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.

    அப்போது, டீசல் கசிவு லைன் வால்வை இயக்கும் ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.

    ராஜேஷை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலம் திப்ருகாரை சேர்ந்தவர் என்றும், ஷ்ரவன் கும்பலின் தொடர்பு குறித்த தகவல்கள் தெரியவந்தன.

    சம்பவ இடத்திலிருந்து ஒரு லாரி மீட்கப்பட்டதாக பக்ரு போலீசார் தெரிவித்தனர். அதில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டிருந்தது. 10,000 லிட்டர் தண்ணீர் தொட்டியில் டீசல் நிரப்பி இரவில் விற்பனை செய்ய செல்வார்கள். லாரியின் மேல் இரண்டு மேற்பரப்புகளிலும் தண்ணீர் பாட்டில்கள் கொண்ட அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக டி.சி.பி அமித் குமார் தெரிவித்தார்.

    தலைமறைவான டீசல் திருட்டு கும்பலின் மூளையாக செயல்பட்ட ஷ்ரவன் சர்தார், 2005 முதல் 2007 வரை HPCL நிறுவனத்தின் டீசல் பாதையை பராமரிக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.

    HPCL நிறுவனத்தின் குழாய்கள் கட்ச் (குஜராத்) முந்த்ராவிலிருந்து சிரோஹி, பாலி, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஆல்வார் மற்றும் பிற பகுதிகள் வழியாக இயக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், அஜ்மீர் மாவட்ட எல்லைக்குள் உள்ள குழாயில் கசிவு பிரச்சனை இருந்தது. பொறியாளர்களால் கூட இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. ஷ்ரவன் இந்த பிரச்சனையை தீர்த்துள்ளார். இதன் பிறகு, அவரது சக ஊழியர்கள் அவரை 'சர்தார்' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது தனது வேலையின்போது, ஷ்ரவன் தனது சக ஊழியர்களிடமிருந்து குழாய் பழுதுபார்க்கும் வேலையைக் கற்றுக்கொண்டார். இதற்கு முன்பு, ஷ்ரவன் டெல்லியில் ஒரு பிளம்பராகப் பணியாற்றினார்.

    2005 முதல் 2007 வரை, ஷ்ரவன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இதன் பிறகு, விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் உள்ள HPCL மற்றும் IOCL நிறுவன இணைப்புகளில் கசிவுகளை உருவாக்கி, ஷ்ரவனின் கும்பல் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலைத் திருடி உள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த வேலையில் ஷ்ரவன் தனது நண்பர்களை மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்தி உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பக்ரு சம்பவத்தில் அவரது மைத்துனர் தர்மேந்திர வர்மா என்ற ரிங்கு சிங்கும் ஈடுபட்டுள்ளார்.

    • இளைஞர்கள் குழு டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.
    • இதில் 8 பேர் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் குழு பிறந்தநாள் கொண்டாட டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.

    அவர்களில் சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது அவர்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினர். மற்ற நண்பர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

    இதில் 8 இளைஞர்கள் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் 8 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

    ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழந்ததை அறிந்து முதல் மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்தார்.

    • 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டது.
    • முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது

    ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியலில் நீண்டகாலமாக நடந்து வந்த அரசியல் மோதலுக்கு ஒரு திருப்புமுனையாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று ஜெய்ப்பூரில் சந்தித்தார்.

    இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதத்துக்கு வலு சேர்த்துள்ளது.

    சச்சின் பைலட், தனது தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள அசோக் கெலாட்டை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இந்த நினைவு நிகழ்ச்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி ராஜேஷ் பைலட்டின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான தௌசாவில் நடைபெறுகிறது.

    2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் வெடித்த அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.

    2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது. 2020இல் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இந்த மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

    • பண மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நூதனமான முறையில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு அணிவிப்பதற்காக 500 ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அதனை உரிமையாளரான ஷாத் இருசக்கர வாகனத்தில் அரியானாவிற்கு எடுத்து சென்று கொண்டு இருந்தார்.

    இதனை அறிந்த மர்மநபர்கள் காரில் வந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாத்தை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாத் அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
    • முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது.

    பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு கைது செய்தது.

    ராஜஸ்தானின் மேவாட் பகுதியில் உள்ள டீக் பகுதியில் காசிம் கைது செய்யப்பட்டார்.

    அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காசிம், ஆகஸ்ட் 2024 இல் ஒரு முறையும், மார்ச் 2025 இல் மீண்டும் ஒரு முறையும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முகவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார்.

    மேலும் விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்

    • பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.
    • புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம்.

    இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே கூறியுள்ளார்.

    உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பகடே, "ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் கூட எடுக்கப்பட்டது.

    வரலாற்றுப் புத்தகங்களும் அதையே சொல்கின்றன. ஆனால் அது ஒரு பொய். அக்பர்நாமாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.

    ஆங்கிலேயர்கள் நமது மாவீரர்களின் வரலாற்றை மாற்றி எழுதினர். அவர்கள் வரலாற்றை சரியாக எழுதவில்லை. முதலில் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர். பின்னர், இந்தியர்கள் வரலாற்றை எழுதினர். அந்த வரலாற்றிலும் ஆங்கிலேயர்களும் செல்வாக்கு செலுத்தினர். வரலாற்றில், பெரும்பாலானவை அக்பரைப் பற்றி தான் உள்ளது. மகாராணா பிரதாப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம். அதனுடன், நமது கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பாதுகாப்போம்.

    1569 ஆம் ஆண்டு அக்பருக்கும் அமர் ஆட்சியாளர் பர்மலின் மகள் ஜோதாவுக்கும் நடந்த திருமணத்தை ஆளுநர் மறுத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:

    மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.

    உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

    சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது.
    • சைனாவின் ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அங்கு கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தப்பரிசோதனை முடிவில் அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்று வந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனிடையே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாதி ஸ்ரீவத்சவா கூறுகையில், 'நான் அவரை பரிசோதித்து விட்டு, அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்தேன். பின்னர் விடுப்பில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தெரியாது. இருப்பினும் மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவருக்கு ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாலும் அவரது உடல் மிகவும் சிக்கலான நிலைக்கு சென்றுவிட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துவிட்டார், என்று கூறினார்.

    அதேநேரம் இதுபற்றி சைனாவின் உறவினர் பிரேம் பிரகாஷ் கூறுகையில், ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது குறித்து டாக்டர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நடந்ததுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

    இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

    • ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார்.
    • "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது.

    பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை நாட்டு மக்களிடம் தேசிய உணர்வை கிளர்த்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக, மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற பின்னொட்டு "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


    ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார். மற்றொரு பயனர், "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது என்று தெரிவித்தார்.

    இதன் பொருள் "இனிப்பு சுவையூட்டி ". இது இந்தி வார்த்தையான "paag" மற்றும் சமஸ்கிருத வார்த்தையான "pagva" ஆகியவற்றுடன் வேர்களைப் பகிர்ந்து கொள்கிறது என்று அந்த பயனர் தெரிவித்தார். 

    ×